விராட் கோலி ஓய்வின் பின்னணியில் அரசியல் ?

இந்தியாவின் மிக பிரபலமான வீரர் விராட் கோலி . சமீபத்தில் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து  ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது, இந்திய கிரிக்கெட் உலகை மட்டுமல்ல, விளையாட்டு உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஜூன் மாதம் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்காக இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் நிலையில், விராட் கோலியின் ஓய்வு அறிவிப்பு இந்தியாவுக்கு பெரும் பின்ன்னடவை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த  14 ஆண்டுகளாக இந்திய டெஸ்ட் அணியில் விளையாடி வந்த விராட் கோலி, தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 123 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடி, 46.85 சராசரியுடன் 9230 ரன்கள் குவித்த கோலி, 30 சதங்கள் மற்றும் 31 அரை சதங்களை பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது  இன்ஸ்டா கிராமில் கூறியுள்ளதாவது,
“நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதன்முறையாக ப்ளூ ஜெர்சி அணிந்து இன்றுடன் 14 ஆண்டுகள் ஆகின்றன. உண்மையாக சொன்னால், இந்த வடிவில் என் பயணம் இப்படி இருக்கும் என்று நான் ஒருபோதும் எதிர்பார்க்கவே இல்லை. இது என்னை சோதித்தது, உருவாக்கியது, வாழ்க்கை முழுக்க எடுத்துச் செல்லக்கூடிய பாடங்களை கற்றுத் தந்தது. வெள்ளை ஜெர்சியில் விளையாடுவதில் ஒரு ஆழமான தனிப்பட்ட உணர்வு இருக்கிறது. அமைதியான போராட்டம், நீண்ட நாட்கள், யாரும் காணாத சிறிய தருணங்கள், ஆனால் அவை வாழ்நாளும் நம்முடன் இருக்கும்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விலகுவது எளிதல்ல, ஆனாலும் சரியான நேரமாகவே உணர்கிறேன். எனக்குள்ளதை எல்லாம் கொடுத்துவிட்டேன், ஆனால் அது என்னை எதிர்பார்த்ததைவிட அதிகம் கொடுத்துவிட்டது. இந்த விளையாட்டிற்கும், என்னுடன் திடலில் பகிர்ந்துகொண்ட மக்களுக்கும், எனது பயணத்தில் என்னை உணர வைத்த ஒவ்வொரு நபருக்கும், நன்றி கூறி நான் வெளியேறுகிறேன். என் டெஸ்ட் வாழ்க்கையை எப்போதும் ஒரு புன்னகையுடன் நினைவு கூர்வேன் என அவர் பதிவு செய்துள்ளார்.
தகவல் வெளியானதால், ரசிகர்கள் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தகவல் வெளியான உடனே, பிசிசிஐ நிர்வாகிகள் கோலியை தொடர்புகொண்டு, ‘தற்போதைக்கு டெஸ்டில் இருந்து ஓய்வு அறிவித்துவிட வேண்டாம்’ எனக் கேட்டுக்கொண்டதாக கூறப்பட்டது.
2008ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பையில் இந்திய அணியை வழிநடத்தி வெற்றி பெறச்செய்த கோலி, அப்போதைய தேர்வுக் குழுவின் தலைவரான முன்னாள் இந்திய கேப்டன் திலீப் வெங்சர்க்கரின் ஆதரவைப் பெற்றார். கிரிக்கெட் துறையில் உள்ள மற்றவர்களின் கணிப்புகளையும் தாண்டி சர்வதேச கிரிக்கெட்டில் திலீப் வெங்சர்க்காரின் ஆதரவுடன் விராட் கோலி முன்னிறுத்தப்பட்டார்.
2009 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டியில் விராட் கோலி அறிமுகமானார். தனது 23 வயதில், எம்.எஸ். தோனி தலைமையில் 2011இல் இந்தியா ஒருநாள் போட்டிகளில் உலகக் கோப்பை வென்றது. அப்போது, வெற்றிபெற்ற அணியின் இளைய உறுப்பினர் என்ற பெருமையையும் பெற்ற விராட், சில வாரங்களுக்குப் பிறகு, மேற்கிந்தியத் தீவுகளில் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.
விராட் கோலி மொத்தம் 68 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு, அதில் 40 வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார். வெற்றி சதவீதம் 58.82ஆக உள்ளது. மொத்தம் 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, அதில் 46.9 சராசரியில் 9, 230 ரன்களை குவித்துள்ளார். ஒரு இன்னிங்ஸில் அதிகபட்சமாக 254 ரன்களை, ஆட்டமிழக்காமல் எடுத்துள்ளார். மொத்தம் 31 அரை சதம், 30 சதங்களையும், தனது டெஸ்ட் தொடரில்  எடுத்துள்ளார்.
இதில் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம் என்னவெனில் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம்பெற்று விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, மார்ச் 3 அன்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான 52வது லீக் ஆட்டத்தில் 62 ரன்கள் குவித்த நிலையில் ஐபிஎல் வரலாற்றில் பல புதிய சாதனைகளை வசப்படுத்தி இருக்கிறார். அந்த வகையில் இதுவரை எந்தவொரு வீரரும் எட்டமுடியாத சாதனையை  கோலி படைத்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் 505 ரன்களுடன் விராட் கோலி (11 இன்னிங்ஸ்) ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றியிருக்கிறார். அவரின் சராசரி 143.46 ஆக உள்ளது.
இத்தொடரில் 500 ரன்களை கடந்திருப்பதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் 500க்கும் மேற்பட்ட ரன்களை 8 முறை குவித்து விராட் கோலி புதிய சாதனையை படைத்திருக்கிறார்.
விராட் கோலி திரைப்பட நடிகை அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்து கொண்டதும் இருவரையும் மேலும் பிரபலமாக்கியது.இப்படி மிகச் சிறப்பாக விளையாடி வந்த நிலையில்  இந்திய கிரிக்கெட்டில் திரைக்குப் பின்னால் நடக்கும் சூழ்ச்சிகள் விராட் கோலியின் ஓய்வு அறிவிப்புக்கு முக்கியமான காரணம் என்றும் சொல்லப்படுகிறது.அப்படிப்பட்ட அரசியலை அவர் விரும்பவில்லை. இந்த நிலையில் விராட் கோலி இடத்தை பிடிக்கப்போகும் வீரர் யார், இந்திய அணியின் கேப்டன் யார்  என்பதுதான் இப்போது எழுந்துள்ள கேள்வி.

  • ஆர்.அருண்குமார்