கடலூர் ஒன்றியம் காரணப்பட்டு கிராமத்தில் செயல்படும் நெல் கொள்முதல் நிலையத்தில் அதிகாரிகள் விவசாயிகளின் நெல்லை எடுப்பதில்லை என கவலை தெரிவித்தனர்.
கடலூர் மாவட்டத்தில் சுமார் 160 க்கும் மேற்பட்ட நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடலூர் ஒன்றியத்திற்குட்பட்ட காரணப்பட்டு நெல் கொள்முதல் நிலையத்தில் தென்னம்பாக்கம், காரணப்பட்டு, செல்லஞ்சேரி, மேல் அழிஞ்சிபட்டு, கீழ் ஆழிஞ்சிப்பட்டு உள்ளிட்ட சுமார் 15-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயிரிட்ட 2500 ஏக்கர் நெல்லை காரணப்பட்டு நெல் கொள்முதல் நிலையத்திற்கு எடுத்துவந்து சுமார் 20,25 நாட்களுக்கு மேலாக கேட்பாரற்று கிடப்பதாகவும், நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகளால் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யாமல் தாமதப்படுத்தி வருவதாகவும் கூறுகின்றனர்.
இதுபோல் அதிக நாட்கள் கிடப்பதால் நெல்மணிகளை கோழிகள், பறவைகள் உண்கின்றன என்றும், கடலூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக இரவு நேரங்களில் பெய்த மழை, மற்றும் ஈரப்பதம் காரணமாக குவியலாக வைக்கப்பட்ட நெல்கள் முளைந்து விட்டதாகவும்,வயலில் பூச்சிகள் எலிகளில் இருந்து காப்பாற்றி நெல்லை விற்பனைக்காக கொண்டு வந்த இடத்தில் நெல்கள் விவசாயிகளுக்கு பயனில்லாமல் வீணாகி போகிறது.
வியாபாரிகளின் நெல்லை மட்டும் நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகள் எடுப்பதாகவும், விவசாயிகளின் நெல்லை எடுப்பதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக குற்றம் சாட்டியை இப்பகுதி கிராம விவசாயிகள் கடலூர் மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய தீர்வு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர்.
- முருகன் லட்சுமணன்