மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா, கச்சை கட்டி கிராமத்தில் அனுமதியின்றி செயல்பட்ட இரு குவாரிகளுக்கு ரூ.15 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உரிமம் முடிந்த பிறகும் சுரங்க செயல்பாடுகள் தொடர்ந்து நடப்பதற்கும், அனுமதியளிக்கப்பட்ட அளவை மீறி வளங்களை அளவுக்கு மீறி எடுத்ததற்காகவும் இந்த நடவடிக்கை மேற்
கொள்ளப்பட்டுள்ளது.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் குறித்து முறையாக ஆய்வு செய்து அறிக்கை அனுப்பும்படி உத்தரவிட்டார்.
கடந்த ஜனவரி மாதம், சுரங்கத் துறையும் வருவாய்த் துறையும் இணைந்து ட்ரோன் கணக்கெடுப்பு நடத்தியது. அதன் அறிக்கையின் அடிப்படையில், மார்ச் மாதம் இந்த இரண்டு குவாரிகளும் மூடப்பட்டன. உரிமக் காலம் 2023 ஜூன் 6 அன்று முடிவடைந்திருந்த நிலையில், தொடர்ந்தும் சுரங்க வேலைகள் நடைபெற்றதைக் குறித்த புகார், 2024 டிசம்பரில் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கிராமத்தினர் வழங்கினர்.
ஒரு குவாரிக்கு 3,000 கன மீட்டர் சரளைக் கற்களும், 1,80,000 கன மீட்டர் கற்களும் வெட்ட அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் 50,000 கன மீட்டர் சரளையும், 2 லட்சம் கன மீட்டர் கற்களையும் வெட்டி எடுத்ததாக ட்ரோன் ஆய்வில் தெரியவந்தது. இதற்காக ரூ.7 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு குவாரிக்கு 60,000 கன மீட்டர் சரளையும், 6 லட்சம் கன அடிக்கு மேல் கற்களையும் வெட்டி எடுத்ததாக ட்ரோன் ஆய்வில் தெரியவந்தது. இதற்காக ரூ.8 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அபராதங்களை,
30 நாட்களுக்குள் செலுத்தவில்லை என்றால், அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும், சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் வருவாய்த் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
- நா.ரவிச்சந்திரன்