அரசியல் கட்சிகளின் பிரதான வேலை தேர்தலில் போட்டியிடுவது, வாக்காளர்களை கவர்வது, கட்சியினரிடையே ஒரு நெருக்கத்தை ஏற்படுத்துவது என்று தான் எப்போதும் இருக்கும். அதுவும் இடைத்தேர்தல் என்றால் சொல்லவே வேண்டியதில்லை கட்சிக்காரர்கள் உற்சாகமாக பணி செய்யக்கூடிய ஒரு தளமாக அது மாறிவிடும். இதில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, நாம் தமிழர் என்றெல்லாம் பாகுபாடு கிடையாது எல்லோரும் வீதியில் இறங்கி பம்பரமாக சுழல்வார்கள். குறிப்பாக பாரம்பரியமாக கட்சியில் செயல்படும் கட்சிக்காரர்கள் எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் இயங்கிக் கொண்டே இருப்பார்கள். இயக்கம் என்பது இயங்கிக் கொண்டே இருப்பது தான். அது தன் செயலை நிறுத்திக் கொண்டால் இறந்த பிணத்திற்கு சமமாக மாறிவிடும். திமுக, அதிமுக போன்ற கட்சிகள் ஒரு சில இடைத்தேர்தலில் போட்டியிடாமல் ஏதோ ஒரு சாக்கு போக்கு சொல்லிக்கொண்டு விலகி நிற்பது தொண்டர்கள் மத்தியில் ஒரு அவமானத்தை ஏற்படுத்தும். வெற்றியோ, தோல்வியோ களத்தில் நிற்க வேண்டும் என்று தான் தொண்டர்கள் கருதுவார்கள். அதே போல தான் இப்போது விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாதது அந்த கட்சி தொண்டர்கள் இடையே ஒரு அவமானத்தை ஏற்படுத்தி இருப்பதாகவே கட்சித் தொண்டர்கள் கருதுகின்றனர்.
ஏன் அதிமுக போட்டியிடவில்லை அதற்கு அதிமுக சொல்லுகிற காரணம் அதிகார துஷ்பிரயோகம் செய்வார்கள் திமுகவினர் என்று சொல்லுகிற காரணத்தை கட்சிக்காரர்களை சமாதானப்படுத்த தலைவர்கள் சொல்லுகிற வார்த்தை என்று நம்புவார்களே தவிர அதுதான் பதில் அல்ல. அதிமுக ஆளுங்கட்ச்சியாக இருக்கின்ற போது என்ன செய்ததோ அதையேதான் இப்போது திமுக ஆளுங்கட்ச்சியாக இருக்கின்ற போது செய்கின்றது இதில் கட்சி கரை வேட்டிகள் தான் மாறி இருக்கும் ஆனால் செயல்பாடுகள் ஒன்றாகவே இருக்கும். பொதுத் தேர்தலை விட இடைத்தேர்தலில் பணப்புழக்கம் மிகுதியாகவே இருக்கும் அதை சாதாரண மனிதர்கள் கூட உணர்வார்கள். முன்பெல்லாம் கொள்கைக்கு தகுந்தார் போல வாக்களித்து வந்தவர்கள் இப்போது கொடுப்பதற்கு தகுந்தார் போல வாக்களிக்க மாறி வட்டார்கள்.
இந்த நிலையில் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்கிற அறிவிப்பை அதிமுக அறிவித்தது தான் கட்சிக்காரர்களுக்கு ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்குப் பின்னால் நிறைய காரணங்கள் சொல்லப்படுகிறது. அதில் ஒன்று பிஜேபி அதிமுகவை மிரட்டி பணிய வைத்து இருக்கிறது என்பதுதான் முக்கியமான காரணமாக சொல்லப்படுகிறது. படைபலம், பண பலம் மிகுந்த சி.வி சண்முகம் தன் சகோதரர் ராதாகிருஷ்ணனை நிறுத்தி வைத்திருக்கலாமே என்று கட்சியின் கீழ்மட்ட தொண்டர்களில் இருந்து மேல்மட்ட தலைவர்கள் வரை கூட பேசுகிறார்கள் அப்படி ஒரு சோதனை முயற்சிக்கு சி.வி சண்முகம் முன்வரவில்லை காரணம் தோல்வி பயம் தொற்றிக் கொண்டது.
அடுத்ததாக இந்த தேர்தலில் திமுகவிற்கு அடுத்தபடியாக களம் காண்கிற கட்சி பாட்டாளி மக்கள் கட்சி அந்த கட்சிக்கு அங்கீகாரம் இல்லை அதனால் மாம்பழம் சின்னம் வழங்கப்பட வாய்ப்பு இல்லை என்பது திமுகவிற்கு முன்கூட்டியே கிடைத்த ஒரு அல்வா துண்டு. இருந்தாலும் பாஜகவின் செல்வாக்கை பயன்படுத்தி பாமக மாம்பழம் சின்னம் பெற முடியும் என்கிற நம்பிக்கையில் இருந்து வருகின்றனர். பாமகவிற்கு ஒரு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதில் பாஜக கவனமாக செயல்படுகிறது அதன் வெளிப்பாடு தான் அதிமுக போட்டியிடாமல் போனதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. ஒரு வகையில் பிஜேபி அதிமுகவை மிரட்டி இருக்கிறது என்று கூட சொல்லலாம் . எப்படி நம்புவது என்றால் ரூ.100 கோடி நில அபகரிப்பு புகார் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் கரூரில் முகாமிட்டு தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனார். இதனால் கைது அச்சத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் காஷ்மீரில் பதுங்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுபோன்ற மிரட்டல்கள் அதிகரிப்பது தான் அதிமுகவின் பயம் பிஜேபி அதிமுகவை பணிய வைக்க இது போன்ற நிறைய சாகசங்களை செய்ய இருக்கிறது.
சரி அதிமுக ஓட்டு யாருக்கு? தொகுதியில் பெரும்பாலான சமூகமாக கருதப்படுவது வன்னியர் சமூகம். நிறுத்தப்பட்டு இருக்கிற மூன்று வேட்பாளர்களும் வன்னியர் சமூகத்தை சார்ந்தவர்கள். இதில் வன்னியர் ஓட்டு மட்டும் பாமகவுக்கு கிடைக்கும் என்கிற நம்பிக்கை மாம்பழம் அழுவி போனது போல் ஆகிவிட்டது. அப்படியானால் அதிமுக ஓட்டு முழுவதுமாக பாமகவிற்கு கிடைக்குமா என்றால் அதுவும் சந்தேகம்தான் ஏனென்று சொன்னால் பாரம்பரிய அதிமுக தொண்டர்கள் இரட்டை இலையைத் தவிர வேறு சின்னத்திற்கு வாக்களிக்க மாட்டார்கள் வாக்களிக்க அவர்கள் எண்ணம் ஒத்துக் கொள்ளாது அப்படியானால் யாருக்கு வாக்களிப்பார்கள். நாம் தமிழர் கட்சி சரியான நேரத்தில் களத்தில் இறங்கி வாக்குகளை அறுவடை செய்கிற ஒரு இயக்கமாக வளர்ச்சி அடைந்திருக்கிறது நாம் தமிழர் கட்சியை என்று சொல்லலாம். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி, புதுச்சேரி ஆகிய இடங்களில் நாம் தமிழர் கட்சிக்கு அடுத்தபடியாக வாக்குகளை பெற்று இருக்கிறது அதிமுக. 15 தொகுதிகளுக்கு மேல் மூன்றாவது இடத்தில் தான் இடம் பிடிக்க முடிந்தது அதிமுகவால். இந்த நிலையில் தான் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்து இருக்கிறது அதிமுக.
பிரச்சாரத்திற்காக மட்டுமே பணம் செலவு செய்து நாம் தமிழர் கட்சி அதிக ஓட்டுக்களை பெற்றிருப்பது வரவேற்க தகுந்தது. பெரும் ஜாம்பவான்கள் போட்டியிடும் இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டு வாக்குகள் பெற இருப்பது அந்த கட்சிக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. 8.91% வாக்குகளை பெற்று மாநில கட்சிக்கான அந்தஸ்தை பெற்றது நாம் தமிழர் கட்சி. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் செல்வாக்கு இன்னமும் கூடுவதற்கு வாய்ப்புகள் அதிகம். ஒரு பக்கம் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை துவக்கி அவரின் தொண்டர்கள் இந்த தேர்தலில் யாருக்கும் ஆதரவளிக்க மாட்டார்கள் என விஜய் அறிவுறுத்திருந்தாலும் அந்த ஓட்டுக்கள் முழுவதும் நாம் தமிழர் கட்சிக்கும் திமுக விற்கும் தான் செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை. இப்படியே போனால் 2026 பொது தேர்தலின் போது அதிமுக காணாமல் போவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.
– பா.ஜோதிநரசிம்மன்
அதனால் அரசியல் பேசுகிறேன் 3அதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சிவாக்குகள் யாருக்கு?
