மதுரை- தொடர்மழையால் நிரம்பி வழிந்த சுரங்கப்பாதை…போக்குவரத்து பாதிப்பு…

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் வட்டம் கூத்தியார்குண்டு – கருவேலம்பட்டி இடையே உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் குளம் போல் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கருவேலம்பட்டி இரயில்வே கேட்டை  கடந்து தான் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியல் ஆயில் கார்ப்ரேசன், பாரத் பெட்ரோலியம் கார்ப்ரேசன் என பல்வேறு திரவு எரிவாயு முனையங்களுக்கு அரசு ஊழியர்கள், தொழிலார்கள், விவசாயிகள், ஊர்ப்பொதுமக்கள், மற்றும்  மாணவர்கள் என பலரும் இந்த ரயில்வே பாதையைக் கடந்து சென்று தான் தங்களது பணியை மேற்கொண்டு வந்தனர்.
அவ்வாறு, ரயில்வே கேட்டை கடந்து செல்லும்போது ரயில் வரும் நேரங்களில் கேட் அடைக்கப்படுவதால் உரிய நேரத்திற்கு பணிக்குச் செல்ல இயலாமல் அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமப்பட்டனர். இப்பகுதி மக்கள் பிரதிநிதிகள் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் கோரிக்கை விடுத்தனர். 
இதன் அடிப்படையில், கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு  ரயில் தண்டவாளத்தின் அடியில் பள்ளம் தோண்டப்பட்டு  சுரங்கப்பாதை அமைத்து சுரங்கப்பாதைக்கு மேல் கனமான இரும்புகளைக் கொண்டு மேற்கூரையை அமைத்தனர். அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் சென்றுவர வழி ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அவ்வப்போது பெய்த கனமழையின் காரணமாகச் சுரங்கப் பாதையில் நீர் நிரம்பியதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.  இதனைத் தொடர்ந்து மழை நீர் சுரங்கப்பாதையில் தேங்காத வண்ணம் ரயில்வே நிர்வாகம் சார்பில் மோட்டார் பம்பு அமைக்கப்பட்டும் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது.
 சுரங்கப்பாதையில், குளம் போல் தண்ணீர் தேங்கி வாகனம் ஓட்ட முடியாமலும், சிறு மின்விளக்குகள் கூட இல்லாமலும் கடும் இருள் சூழ்ந்து காணப்படுவதால் அவ்வழியாக வரும் அரசு ஊழியர்கள், தொழிலார்கள், விவசாயிகள், ஊர்ப்பொது மக்கள், மற்றும்  மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் அனுதினமும் பயந்து பயந்து பயணித்து வருகின்றனர். கடந்த மூன்று நாட்களாக ரயில்வே சுரங்கப்பாதை முழுவதும் இடுப்பளவு மழை நீர் சூழ்ந்துள்ளதால் வாசன ஓட்டிகள் மழைநீரில் தவறி விழுந்து விடுகின்றனர்.  இதனால் அச்சமடைந்த சிலர் 3 கிலோ மீட்டர் சுற்றி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

– நா.ரவிச்சந்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *