Save 20% off! Join our newsletter and get 20% off right away!

பெயரை மாற்றிய நட்சத்திர நடிகர்கள்..!?

அரசியலில் எப்படி சென்டிமென்ட் என்பது பிரபலமோ… அதே போல் அதைவிட அதிகமாக சினிமாவில் சென்டிமென்ட் என்பது பிரபலம். ஒரு படம் வெற்றி பெற்றால் அதே போல் தொடர்ந்து நூறு படங்களை தயாரிப்பாளர்கள் வெவ்வேறு வடிவத்தில் தயாரித்து வெளியிட்டு கல்லா கட்டுவார்கள். இதைத்தான் விமர்சகர்கள் ‘ட்ரெண்ட்’ என்பார்கள்.  தமிழ் சினிமாவில் ‘பேய் படங்களுக்கான ட்ரெண்ட் ‘ இன்னும் குறையவில்லை. கடந்த மாத இறுதியில் கூட ‘அகத்தியா’, ‘சப்தம்’ என இரண்டு ஹாரர் படங்கள் வெளியாகி உள்ளது. சினிமாவிற்கு மட்டுமல்ல சினிமாவில் பிழைப்பு நடத்தும் நட்சத்திர நடிகர்களுக்கும் மிகப்பெரிய சென்டிமென்ட் இருக்கிறது. 

தொடர்ந்து வெற்றிகளைக் குவித்தால் அதிர்ஷ்டம் என்றும், தொடர்ந்து தோல்விகளை கொடுத்தால் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்றும் அவரை நம்பி முதலீடு செய்யும் தயாரிப்பாளர்கள் முதல் அவரிடம் பணியாற்றும் டிரைவர் வரை அனைவரும் நடிகரிடம் வேண்டுகோள் வைப்பார்கள். அது பெரும்பாலும் பெயர் மாற்றமாகவே இருக்கும். இதற்கு சிறந்த உதாரணம் ஜெயம் ரவி. ஜெயம் ரவி என்ற பெயரில் பிரபலமான இவர் கடந்த சில ஆண்டுகளாக திரையுலக பயணத்திலும் தொடர் தோல்விகளை கொடுத்தார். சொந்த வாழ்க்கையிலும் விவரிக்க முடியாத சோதனைகளை எதிர் கொண்டார். இதனால் ஜோதிடர்களிடம் ஆலோசனை கேட்க… அவர்களோ பரிகாரம் என்ற பெயரில் சொன்ன அனைத்து விசயங்களையும் செய்வதற்காக தற்போது கோயில் கோயிலாக சுற்றி வருகிறார். அதுமட்டுமல்ல தன் பெயரையும் ரவி மோகன் என்று மாற்றிக் கொண்டிருக்கிறார். இனிமேலாவது இவருக்கு வெற்றி கிடைக்குமா? என்பது இனிவரும் படத்தில்தான் தெரியும். இவர் தற்போது ‘ஜீனி ‘, ‘கராத்தே பாபு’, ‘ பராசக்தி ‘ , ‘தனி ஒருவன் 2’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 

இவர் மட்டுமல்ல நட்சத்திர வாரிசு நடிகரான கௌதம் கார்த்திக்கும் தன்னுடைய பெயரை மாற்றிக் கொண்டிருக்கிறார். இவருக்கு சொந்த வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் இல்லை என்றாலும், திரையுலகில் எந்த வெற்றி படத்தையும் அதாவது கமர்சியல் ஹிட் படங்கள் கொடுக்கத் தவறியதால் தயாரிப்பாளர்கள் இவரை ஒரு நட்சத்திர நடிகராகவே கருதுவதில்லை. இதனால் விரத்தி அடைந்த இவர் தற்போது ஜோதிடர்களின் ஆலோசனைப்படி தன் பெயரை மாற்றிக் கொண்டிருக்கிறார். இதுவரை கௌதம் கார்த்திக் என்று அறியப்பட்ட இவர் ..தற்போது கௌதம் ராம் கார்த்திக் என மாற்றிக் கொண்டிருக்கிறார். இதனை தன்னுடைய சமூக வலைதள பக்கத்திலும் பிரத்யேக புகைப்படத்துடன் அறிவித்திருக்கும் கௌதம் ராம் கார்த்திக், தற்போது ‘மிஸ்டர் எக்ஸ்’  மற்றும் ‘ கிரிமினல் ‘ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 

இது தொடர்பாக மறைந்த நடிகர் விவேக் சொன்ன ‘கமெண்ட் ‘ ( உங்கள எத்தனை பெரியார் வந்தாலும் திருத்த முடியாது டா..) நினைவுக்கு வந்தாலும் நடிகர்களின் இந்த அட்ராசிட்டியை தாங்கிக் கொள்ளத்தான் வேண்டி இருக்கிறது.

பெயர் மாற்றம் இவர்களது வாழ்க்கையில் ஏற்றம் தரட்டும் என வாழ்த்தினாலும்… கன்டென்ட் கச்சிதமாக இருந்தால்.. யார் நடித்தாலும் வெற்றி கிடைக்கும் என்பதுதான் இன்றைய சினிமாவின் யதார்த்தம். அதனால் நட்சத்திர நடிகர்கள் தங்கள் சம்பளத்தை பற்றி கவலைப்படுவதை விட… தங்களுடன் ஜோடியாக நடிக்கும் நடிகைகளை தேர்வு செய்வதை விட ..

தங்களுடைய திரைப்படங்கள் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட வேண்டும் என நினைப்பதை விட…  ராஜமவுலி, அட்லீ, லோகேஷ் கனகராஜ் போன்ற வெற்றி பெற்ற இயக்குநர்களின் படங்களில் நடிக்க வேண்டும் என விரும்புவதை விட.. புதுமுக இயக்குநர்கள் சொல்லும் கதையை கவனமாக கேட்டு அதனை தேர்வு செய்தாலே வெற்றி பெறலாம்.‌ 

கேவிஆர் கோபி.