மக்களின் கடும் எதிர்ப்பு, சமூக ஆர்வலர்களின் போராட்டம்… இவற்றை புறந்தள்ளி புது பஸ் நிலையம் அமையும்…!

மக்களின் கடும் எதிர்ப்பு,
சமூக ஆர்வலர்களின் போராட்டம்…
இவற்றை புறந்தள்ளி புது பஸ் நிலையம் அமையும்…!

மேடையில் இருந்தும் வாயே திறக்காத அமைச்சர் மா.மதி வேந்தன்..

“முன்வைத்த காலை பின் வைக்க மாட்டேன்” சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் சுயலாபத்திற்காக நடத்தப்படும் போராட்டங்களை தாண்டி  ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அமைந்தே தீரும் கே ஆர் ஆர் ராஜேஷ்குமார் சபதம்:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகர மக்கள் தொகை அதிகரிப்பு, போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு அமைக்கப்படவுள்ள புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைந்தே தீரும். அதே வேளையில் தற்போதைய பேருந்து நிலையம் நகரப் பேருந்து நிலையமாக தொடர்ந்து செயல்படும் என மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் தெரிவித்துள்ளார்.

ராசிபுரம் பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய இவர் ராசிபுரம் பேருந்து நிலையப் பிரச்சனையில் பலர் சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் போராட்டம் நடத்துகின்றனர். இந்த போராட்டம் என்பது சுயலாபத்திற்காக, விளம்பரத்திற்காக செய்வது.

நாமக்கல் மாவட்டத்திற்கு எத்தனையோ திட்டங்களை கொண்டுவந்துள்ளோம். அதில் நியாயமான பிரச்சனைகள் இருந்தால் காது கொடுத்து கேட்போம். மக்களுடைய அடிப்படை பிரச்சனைகள் நாங்கள் என்றைக்கும் தீர்க்கக்கூடியவர்கள். இன்னும் 10 ஆண்டுகளுக்கு பின்னர் நகர மக்கள் தொகை அதிகரித்து இருக்கும். குடியிருப்புகள் விரிவடையும். இதற்கேற்றவாறு நகரம் எப்படி இருக்க வேண்டும் என எண்ணிப்பார்த்து திட்டங்களை செயல்படுத்திக்கொண்டிருக்கிறோம். இதன் பலன் இப்போது தெரியாது. பின்னர் தெரியும். எனவே தற்போதைய பேருந்து நிலையம் நகரப் பேருந்து நிலையமாக செயல்படும். புதிய புறநகர் பேருந்து நிலையம் புறவழிச்சாலையில் கட்டாயம் அமையும்.

“இந்த ராஜேஸ்குமார் என்றும் முன்வைத்த காலை பின் வைத்ததாக சரித்திரமே கிடையாது” என சவால் விட்ட அவர் ,நாமக்கல் புதிய பேருந்து நிலையம் தற்போது பொதுமக்கள் பாராட்டும் வகையில் சிறப்பாக இயங்கி வருகிறது. மக்களுடைய அடிப்படை பிரச்சனைகள் சிந்தித்து பார்க்க வேண்டும். நகரில் எவ்வளவு போக்குவரத்து நெரிசல், எவ்வளவு விபத்து. இதனை கட்டுப்படுத்த நகரம் விரிவடைய வேண்டாமா?. வளர வேண்டாமா? என்பதை சிந்திக்க வேண்டும்.

இது போன்ற போராட்டம் சிலரின் தூண்டுதல் பேரில் நடைபெறுகிறது. அவர்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். மக்களை எப்படி திசை திருப்பினாலும், மக்களுக்கு இதன் உண்மை தெரியும் என குறிப்பிட்டார்.

-கௌரிசங்கர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *