ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் ஒழிக்கப்பட வேண்டும்.
காக்கா குருவியை சுட்டுக் கொல்வது போல, அப்பாவி மக்களை சுட்டுக் கொல்லும் இந்திய ராணுவப்படை, எந்த அதிகாரத்தின் பேரில் இப்படி ரத்தவெறியாட்டம் போடுகிறது…?…!
ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் (Armed Forces (Special Powers) Act, AFSPA), என்ற இந்த சட்டம், இந்திய நாடாளுமன்றத்தில் 11.09.1958ல் பிரதமராக இருந்த நேருவால் கொண்டுவரப்பட்டது.
அசாம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் நாகா மக்கள் வசிக்கும் பகுதிகளில் முதலில் இந்த சட்டம் அமலானது. அதன்பின் வடகிழக்கு மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டது. பஞ்சாப்பில் காலிஸ்தான் இயக்கதை ஒடுக்க அங்கேயும் அமல்படுத்தப்பட்டது.
ஜம்மு காஷ்மீர், நாகாலாந்து, அசாம் ஆகிய மாநிலங்களில் முழுமையாகவும், மணிப்பூர் மற்றும் அருணாசலப் பிரதேசத்தில் சில பகுதிகளிலும் இந்த ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் தற்போது அமலில் உள்ளது.
இச்சட்டத்தின்படி, வாரன்ட் இல்லாமல் யார் வீட்டிலும் சோதனையும், யாரையும் கைது செய்யலாம். சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதற்காக, எப்போது வேண்டுமானாலும் துப்பாக்கிச் சூடு நடத்தலாம். யார் அனுமதிக்காகவும் காலம் தாழ்த்தத் தேவையில்லை.
ஆயுதமாகக் கருதப்படும் எந்த ஒரு பொருளை வைத்திருப்பவரையும் சுட்டுக் கொல்லலாம். நெருப்பூட்டும் ஊதுகுழல் வைத்திருப்பவரையும், அவர் அதை தாக்குவதற்காக வைத்திருக்கிறார் என்று கூறி, அவரை சுட்டுக்கொல்லலாம்.
வீடு அல்லது கட்டடத்தில் இருந்தபடி தாக்குதல் நடத்துவார்கள் என்று கருதினால், அந்தக் கட்டடத்தையே தகர்க்கலாம்.
ராணுவ முகாம்கள் அருகே யாரும் நடமாடக்கூடாது. ஒருவர் தன் சொந்த ஊரிலிருந்து வெளியூர் செல்வதையும் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.
வாகனங்களில் பொதுமக்கள் செல்வதும் கூட இந்தப் பகுதிகளில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வாகனங்கள் அடிக்கடி சோதனை செய்யப்படும். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் நடவடிக்கை உண்டு.
பொதுமக்களில் யாரையேனும் ராணுவ வீரர் தவறுதலாகவோ தவிர்க்க முடியாமலோ சுட்டுக் கொன்றுவிட்டால், இச்சட்டம் சுட்டுக் கொன்ற ராணுவ வீரரைப் பாதுகாக்கும்.
இப்படி ராணுவத்தினர் எதைச் செய்தாலும், அவர்களை உள்ளூர் காவல்துறையும், மாநில அரசும், நீதிமன்றங்களும், எந்தக் கேள்வியும் கேட்க முடியாது.
இச்சட்டம் பெரும்பாலும் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும், பலர் போலி மோதல்களில் கொல்லப்படுவதாகவும் முழங்கி, இச்சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் மனித உரிமை ஆர்வலர்களும் மாந்த நேயர்களும் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இச்சட்டத்தின் மூலம் அப்பாவிகள் சித்திரவதைக்குள்ளாவது, சந்தேகத்தின் பேரில் கூட்டிச் செல்லும் பலர் வீடு திரும்பாமலாவது, இரக்கமற்ற படுகொலைகளுக்குள்ளாவது போன்றவை அதிகரித்தன.
தற்போது நாகாலாந்தில் பத்தொன்பது அப்பாவிகள் சுட்டுக் கொல்லப்பட்டதுபோல, இதற்கு முன்னரும் பல படுகொலைகள் நடந்துள்ளது. குறிப்பாக, மணிப்பூரில் மிக மோசமான சம்பவங்கள் நடந்துள்ளது.
2000ல் மணிப்பூர் தலைநகர் இம்பால் விமான நிலையத்தின் அருகே, அப்பாவிகளை அசாம் ரைஃபில்ஸ் படை சுட்டுக் கொன்றது. மாலோம் படுகொலை என்று அழைக்கப்படும் இச்சம்பவத்தையடுத்து,
ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி, மணிப்பூரில் ஐரோம் ஷர்மிளா கடுமையான தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டார். அவரைக் கைது செய்து அவரது வாயில் வலுக்கட்டாயமாக உணவைத் திணிப்பதும், விடுதலையாகி மீண்டும் அவர் உண்ணாவிரதம் மேற்கொள்வதுமாக கிட்டத்தட்ட பதினாறு ஆண்டுகள் உண்ணாவிரதம் இருந்ததையடுத்து, மணிப்பூரில் பல இடங்களில் இச்சட்டம் விலக்கப்பட்டதும், 2016ல் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டார் ஐரோம் ஷர்மிளா.
2004ல் தங்ஜம் மனோரமா என்ற பெண்ணின் உடல், துப்பாக்கித் தோட்டாக் காயங்களுடன் படுகொலை செய்யப்பட்டு கண்டெடுக்கப்பட்டது. ராணுவத்தினர்தான் அவரை பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்ததாக மக்கள் குற்றம் சாட்டினர்.
பேரதிர்வை ஏற்படுத்திய இச்சம்பவத்தைத் தொடர்ந்து, மணிப்பூர் பெண்கள் முப்பது பேர், “Indian Army Repe Us” “இந்திய ராணுவமே, எங்களையும் பாலியல் வல்லுறவு செய்” என்ற பதாகையை ஏந்தி, முழு நிர்வாணமாக மணிப்பூர் தலைநகர் இம்பால் வீதிகளில், ஊர்வலமாகச் சென்றனர். இது, உலகளவில் இந்தியாவை தலைகுணியச் செய்தது.
மணிப்பூரில் ராணுவ நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இணைந்து, Extra Judicial Execution Victims Families Association (EEVFAM) என்ற பெயரில் நீதிக்கான அமைப்பை வைத்துள்ளனர்.
இந்த அமைப்பு சார்பில், ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அதில், மணிப்பூரில் இந்த சட்டம் அமலுக்கு வந்த துவக்கத்திலிருந்து 1,528 போலி மோதல்கள் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. ராணுவத்தால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, அதில் காணாமல் போனவர்களின் கணக்கு, இவ்வழக்கில் தாக்கல் செய்யப்படவில்லை. ராணுவத்துக்கு எல்லையற்ற அதிகாரம் கொடுத்திருப்பது முறையில்லை என்று, இந்த வழக்கு விசாரணையின்போது உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.
இந்த சட்டம் வெறுப்பு, அடக்குமுறை மற்றும் எதேச்சதிகாரத்தின் அடையாளமாக இருக்கிறது. இந்தச் சட்டத்தை அடியோடு ரத்து செய்ய வேண்டும்’ என்று, 2004ல் மத்திய அரசால் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி ஜீவன் ரெட்டி கமிட்டி பரிந்துரைத்தது. நிர்வாக சீர்திருத்த ஆணையமும், தனது ஐந்தாவது அறிக்கையில் இதையே பரிந்துரைத்தது.
நவம்பர் 2006 முதல் 2009 வரைக்குள்ளான ஆண்டுகளில் நடத்தப்பட்ட கள ஆய்வு, காஷ்மீரின் பண்டிபோரா, பாராமுல்லா, குப்வாரா மாவட்டங்களைச் சார்ந்த ஐம்பத்தியிரண்டு கிராமங்களில் உள்ள 2,700க்கும் அதிகமான விவரம் அறியப்படாத, அடையாளம் காணப்படாத 2,943க்கும் அதிகமான சடலங்களைக் கொண்ட புதைகுழிகள் குறித்து அம்பலப்படுத்துகிறது.
இவற்றில் 2,373 புதைகுழிகளில் பெயர் ஏதும் தென்படவில்லை. 154 புதைகுழிகளில், இரண்டுக்கும் அதிகமான பிணங்கள் புதைக்கப்பட்டிருக்கிறது. 23 புதைகுழிகளில், மூன்றிலிருந்து பதினேழு பிணங்கள் புதைக்கப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டது.
காஷ்மீரை ராணுவமயமாக்கப்பட்டதன் விளைவாக, 1989முதல் 2009வரையில் மட்டுமே ஏற்பட்ட வன்முறையில், எழுபதாயிரத்திற்கும் மேற்பட்ட உயிர் பலிகள் நடந்துள்ளது. இப்படுகொலைகள்,சட்டத்திற்கு புறம்பான அல்லது போலி மோதல் படுகொலைகள், சிறைக் கொடுமைகள் உள்ளிட்ட கொடுமைகள் மூலமாக நிகழ்த்தப்பட்டுள்ளது.
கிளர்ச்சியாளர்களைக் குறிவைத்து, 1991ல் காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள குனான்-போஷ்போரா பகுதியை, ராணுவம் சுற்றி வளைத்துத் தேடுதல் வேட்டை நடத்தியது. அப்போது, கிட்டத்தட்ட நூறு பெண்கள் வரை, வயது வித்தியாசமின்றி ராணுவ வெறியர்களால் பாலியல் வல்லுறவுக் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். இக்கொடுமை நடந்து இருபத்தெட்டு ஆண்டுகள் கடந்த பின்னரும், இது தொடர்பாக நீதி விசாரணையை நடத்த இந்திய அரசு இதுவரையும் மறுத்து வருகிறது.
1994லிருந்து 2018 வரையுள்ள இருபத்துநான்கு ஆண்டுகளில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இந்திய இராணுவத் தலைமையிடம் 1,037 புகார்கள் கொடுக்கப்பட்டதில், முப்பத்தோரு வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டன. மீதம் 992 புகார்கள் போலியானவை எனக் காரணம் காட்டி தள்ளுபடி செய்தது.
நீதி வேண்டி போராடுபவர்களை, ராணுவத்தினர் பெல்லட் குண்டுகள் மூலம் தாக்கி, பலரை கொன்றுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் கண்கள் உட்பட உடலெங்கும் பெல்லட் ரவைகளால் தாக்கப்பட்டுக் காயமடைந்து ஊனப்படுத்தப்பட்டிருப்பதையும் ஆய்வறிக்கைகள் அடையாளப்படுத்துகிறது.
கிளர்ச்சியாளர்களைச் சுட்டுக் கொல்லும் ராணுவ வீரர்களுக்கு பரிசுத் தொகையும், பதவி உயர்வும் அளிக்கப்படுவதைக் கேடயமாகப் பயன்படுத்தி, எல்லைப் பகுதிகளில் ராணுவத்தினர் சர்வ துணிச்சலாக நடத்திவரும் போலிமோதல் படுகொலைகள் ஏராளம்.
சென்ற வாரம் சனிக்கிழமையில், நாகலாந்து மாநிலம் மியான்மர் எல்லைப் பகுதியில் உள்ள மோன் மாவட்டதின் ஒடிங் என்ற கிராமத்தைச் சார்ந்த தொழிலாளர்கள், அங்குள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றி விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தபோது,
பாதுகாப்பு பணியிலிருந்த பாதுகாப்பு படையினர், வேனில் வந்த தொழிலாளர்களை கிளர்ச்சியாளர்கள் எனக்கருதி தவறுதலாக துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக, ராணுவத்தால் கதையளக்கப்படுகிறது. இந்த துப்பாக்கிச் சூட்டிலும் இதனைத்தொடர்ந்து நடந்த வன்முறையிலும், பத்தொன்பது அப்பாவி மக்கள் ராணுவத்தினரால் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
நாகாலாந்தில் அப்பாவிகள் மீது ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூடு, மீண்டும் வடகிழக்குப் பகுதிகளை கொந்தளிக்கச் செய்திருப்பதோடு, காஷ்மீர் மக்களின் வலியும் ரத்தக்கண்ணீரும் உலகரங்கில் வெளிச்சமாகிருக்கிறது.
அரசியலமைப்புச் சட்டம், குற்றவியல் சட்டம், மனித உரிமை, ஜனநாயக உரிமை என ஏகப்பட்ட சட்டத்திட்டங்கள் கொண்ட மக்களாட்சி நாடு என தம்பட்டம் அடிக்கும் இந்தியாவில்,
அதன் மக்களின் உயிருக்கு உத்தரவாதமற்ற, மக்களை சுட்டுக் கொன்றொழிக்கின்ற மக்களின் அடிப்படை வாழ்வுரிமைகளை அழித்துழிக்கின்ற ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம், கருப்புச் சட்டமாகும். எனவே, இச்சட்டத்தை நாடு முழுவதும் எந்த பரிசீலனையுமின்றி திரும்பப்பெற வேண்டும்.
– சமூக ஆர்வலர் எழுத்தாளர் பூமொழி
Leave a Reply