சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பரம்பு மலை சிவன் கோயில்.
இங்குதான் முல்லைக்கு தேர் கொடுத்த பாரியின் சிற்பம் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இக்கோவிலின் நுழைவு வாயிலில் பாரியின் அவை புலவரான கபிலர் பாடிய புறநானூற்று பாடல் ஒன்றும் கல்வெட்டாக வடிக்கப்பட்டு உள்ளது.
இங்கு உள்ள கொடுங்குன்றநாதர் சிவன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது.
வாழ்க்கையின் மூன்று அம்சங்களையும் முன்னிறுத்தி விளக்கும் விதமாக இங்கு பாதாளம், பூலோகம், மேலோகம் என மூன்று சிவன் கோயில்கள் அமைந்துள்ளது.
மலையின் அடியில் பாதாள சிவன் கோயிலும், மலையின் நடுவில் பூலோக சிவன் கோயிலும், மலையின் மேல் கைலாய சிவன் கோயிலும் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது.
பாரி மன்னன் ஆட்சி செய்த இந்த பறம்பு மலை சிவன் கோயில் மிகவும் அற்புதமான இயற்கை எழில் சூழ அமைந்திருப்பதோடு பல்வேறு மூலிகைகளையும் கொண்டுள்ளது.
பூலோக சிவன் கோயிலில் முல்லைக்கு தேர் கொடுத்த பாரியின் சிற்பம், பிரம்மாண்டமாக தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள கொடுங்குன்ற நாதர் கோவிலில் ஐப்பசி முதல் பங்குனி மாதம் வரையிலான காலகட்டங்களில் சிவன் மீது சூரிய ஒளி நேரடியாக விழுவதாக சொல்லப்படுகிறது.
எனவே அன்றைய காலகட்டங்களில் இங்குள்ள சிவபெருமானை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.
பாரி மன்னன் மலையும் மலை சார்ந்த இடத்தையும் ஆட்சி செய்து வந்ததால் இக்கோவிலில் தேன், திணை மாவு, பச்சரிசி மாவு போன்றவற்றால் செய்த பொருள்களையே சிவபெருமானுக்கு நெய்வேத்தியமாக படைக்கின்றனர்.
சுமார் 2000 ஆண்டுகளுக்கும் மேலாக கம்பீரமாக காட்சியளிக்கிறது இந்த பறம்புமலை சிவன் கோயில்.
மேலும் இங்கு ஒலிக்கப்படும் மணி சுமார் 40 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சத்தமாக ஒலிக்கும் சிறப்புடையதாகவும் சொல்லப்படுகிறது.
தேவார பாடல் பாடப்பெற்ற திருத்தலங்களில் ஒன்றாக விளங்கும் இந்த பறம்பு மலை சிவன் கோயில் இன்றளவும் பாரி மன்னனின் பெருமையை எடுத்துக்காட்டும் வகையில் மிகவும் கம்பீரமாக காட்சியளிக்கிறது!
- மதுரை மணிகண்டன்