வருடா வருடம் டெல்லியில் அக்டோபர் மாதத்திற்கு பின் காற்று மாசு அதிகரிப்பது வழக்கம். பனிக் காலம் மாசு உச்சம் தொடும். எனவே, கடந்த முறையை போல இந்த முறையும் டெல்லியில் காற்று மாஸை கட்டுப்படுத்த தீபாவளி அன்று வெடிவெடிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. பல்வேறு இடங்களில் டெல்லியில் வெடிகளை விற்றவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து வெடிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இருப்பினும் தடையை மீறி டெல்லியில் பல இடங்களில் வெடிகள் வெடிக்கப்பட்டது. இதன் காரணமாக டெல்லியில் காற்றின் மாசு அளவு தீபாவளி இரவு 8 மணி அளவில் 380 புள்ளிகளை தொட்டது. மறுநாள் அதிகாலை பனிப்பொழிவு, புகை மண்டலம், ஈரப்பதம் காரணமாக காற்று மாசு மேலும் அதிகரித்து 600 புள்ளிகளை தாண்டியது. ஜன்பத் பகுதியில் காற்று மாசு அளவு 655.07 புள்ளிகளை தொட்டது.
இந்தியாவில் காற்றின் தரம் பொதுவாக 5 நிலைகளின் பதிப்பிடப்படுகிறது. AQI எனப்படும் இந்த எண் அதிகமாக இருந்தால், காற்றின் தரம் மோசமாக உள்ளது என்றும் அது பொதுமக்களுக்கு ஆபத்தானது என்றும் அர்த்தம். AQI பூஜ்ஜியத்திற்கும் 50க்கும் இடையே இருந்தால் காற்றின் தரம் சிறப்பாக உள்ளதாகப் பொருள். இது 51 முதல் 100 வரை இருந்தால் திருப்திகரமானது. 101 மற்றும் 200 “மிதமானது” என்று அர்த்தம். அதேநேரம் AQI 201 முதல் 300 வரை இருந்தால் காற்றின் தரம் மோசம் என்றும் 301 முதல் 400 வரை இருந்தால் மிக மோசம் என்றும் பொருள். 401 முதல் 500 வரை AQI இருந்தால் காற்றின் தரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது எனக் கருதப்படுகிறது.
இதையெல்லாம் தாண்டி 600ஐ கடந்ததால் மக்கள் சுவாசிப்பதில் பிரச்சனை ஏற்படும். யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. அதேபோல் வயதானவர்களுக்கு கண் எரிச்சல், இருமல் பாதிப்பும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
எய்ம்ஸ் தலைமை மருத்துவர் ரன்தீப் குலேரியா, ‘ மோசமான தரம் கொண்ட காற்று நுரையீரலை பாதிக்கும். இது கொரோனா காலம் என்பதால் இரட்டை பாதிப்பிற்கு வாய்ப்பு உள்ளது’ என்று எச்சரிக்கை விடுத்தார்.
அதேபோல் டெல்லியை சுற்றி இருக்கும் நகரங்களிலும் காற்றின் தரம் மோசமாகி உள்ளது. காசியாபாத்தில் காற்று மாசு புள்ளிகள் 458 ஆக உள்ளது. அதேபோல் நொய்டாவில் 455 ஆக உள்ளது. பரிதாபாத்தில் 449 ஆக உள்ளது. டெல்லி தவிர்த்து ஹரியானா, உத்தர பிரதேசம், உத்தரகாண்டிலும் காற்றின் தரம் மோசமாக உள்ளது.
இனி ஜனவரி வரை காற்று மாசு கொஞ்சம் கொஞ்சமாக டெல்லியில் அதிகரித்துக்கொண்டே செல்லும். ஒற்றை இலக்க வாகனம், இரட்டை இலக்க வாகனம் என்று போக்குவரத்தை ஒழுங்கு படுத்தியும், சில நாட்கள் பொதுப்போக்குவரத்தை கட்டுப்படுத்தியும் காற்று மாசை சமாளிக்க டெல்லி அரசு முயலும்.
ஆனாலும், நிரந்தரமான ஏற்பாடுகள் இல்லாவிட்டால், வருடந்தோறும் காற்று மாசு காரணமாக தலைநகரில் மக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் நடப்பதை தடுக்க முடியாது.
Leave a Reply