வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள பேரணாம்பட்டு பகுதியில் அஜித்தா தெருவில் தொடர் மழையால் கட்டடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 4 குழந்தைகள் உள்பட 9 பேர் பலியாகினர். மேலும் 9 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் கூற கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்தி சென்றார். அப்போது அங்கு வைக்கப்பட்டுள்ள இறந்த குழந்தைகளின் உடலை பார்த்து அவருக்கு துக்கம் தாளவில்லை. இதனால் கதறி கதறி அழுதார். அப்போது உடனிருந்தவர்கள் அமைச்சரை தேற்ற படாதபாடு பட்டுவிட்டனர்.
இதற்கு சில நாட்களுக்கு முன்புதான் கொட்டும் மழையில் இருளர் இன மக்களிடம் கோரிக்கைகளை பெற்றதோடு அவர்களுடன் அமர்ந்து மதிய உணவை உட்கொண்டார் காந்தி. பின்னர் அவர்களுடன் செல்பி புகைப்படத்தை எடுத்துக் கொண்டார்.
இப்படி சென்சிட்டிவ் செண்டிமெண்டால் தந்தை கலங்கடிக்க, அதிரடி ஆட்டத்தால் அவரது மகன் வினோத் கலக்கியடித்துக்கொண்டிருக்கிறார்.
திமுகவில் வாரிசு பதவிக்கு பஞ்சமில்லை என்றாலும், கட்சி, ஆட்சி இரண்டிலும் ஸ்டாலினுக்கு அடுத்த இடத்திலிருக்கும் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்துக்கு இதுவரை பெரிய கட்சி பதவி வழங்கப்படவில்லை. ஆனால், அமைச்சர் காந்தியின் மகன் வினோத்துக்கு சமீபத்தில் தி.மு.க-வில் சுற்றுச்சூழல் அணி மாநில துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது.
பதவி கிடைத்த மறுகணமே,ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் என சுற்றுப்பயணம் மேற்கொண்ட வினோத்துக்கு அங்கிருக்கும் தி.மு.க நிர்வாகிகள் சிலர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
இதனால் மேலும் ‘ஹேப்பி’யான வினோத், ராணிப்பேட்டை மாவட்டத்திலிருக்கும் தி.மு.க-வின் மூத்த நிர்வாகிகள் சிலரை ஓரங்கட்டும் வேலைகளிலும் ஈடுபட்டுள்ளார். வாலாஜாபேட்டை நகரச் செயலாளரான புகழேந்தியை அதிகப்படியாக பயமுறுத்துகிறார். இதற்காக, வாலாஜாபேட்டை நகரப் பொறுப்பிலிருக்கும் ஐந்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகளைத் தனது அலுவலகத்துக்கே வரவழைத்து, மிரட்டி கையெழுத்து வாங்கியிருக்கிறார்.
இத்தனைக்கும் புகழேந்தி சாதாரணமான குடும்பத்திலிருந்து வரவில்லை. அவரது தந்தை த.க.பாலசுந்தரம் தி.மு.க தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே கட்சிப் பணியாற்றியவர். 38 ஆண்டுகள் நகரச் செயலாளராக இருந்தவர். 1962ல் நடைபெற்ற விலைவாசிப் போராட்டத்தில் அண்ணாவுடன் 70 நாட்கள் வேலூர் சிறையில் அடைபட்டவர்.
ஏற்கனவே . நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில், காந்தியின் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கே அதிகமாக வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதை சுட்டுக்காட்டும் கட்சியினர், காந்தி குடும்பம் ஆடும் ஆட்டம் நல்லதற்கல்ல என்று எச்சரிக்கின்றனர். .
காந்தி
வினோத் காந்தி
Leave a Reply