ஹரியானாவில் மண்ணின் மைந்தர்களுக்கு தனியார் துறை வேலைவாய்ப்புகளில் 75% இடஒதுக்கீடு வழங்குவது அடுத்த ஆண்டு ஜனவரி முதல் நடைமுறைக்கு வர உள்ளதாக அம்மாநில முதல்வர் மனோகர்லால் கட்டார் அறிவித்துள்ளார்.
கல்வி, அரசு வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு பல மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. தனியார் துறைக வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை. சில மாநிலங்களில் மண்ணின் மைந்தர்களுக்கே தனியார் வேலைவாய்ப்புகளில் கூடுதல் இடஒதுக்கீடு என்கிற சட்டம் அமலில் உள்ளது.
இந்நிலையில் ஹரியானா சட்டசபையில் இதற்கான சட்டம் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டது. அம்மாநில முதல்வர் மனோகர்லால் கட்டார் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ‘ஹரியானாவில் மண்ணின் மைந்தர்களுக்கு தனியார் வேலைவாய்ப்புகளில் 75% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்கிற சட்டம் ஜனவரி 15ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது’ என்றார்.
மாத ஊதியம் ரூ.30,000க்கு கீழே உள்ள்ள அனைத்து வேலைவாய்ப்புகளுக்கும் இந்த சட்டம் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தனியார் நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், அறக்கட்டளைகள், உள்ளிட்டவை பின்பற்றி நடக்க வேண்டும். பின்பற்றாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, குஜராத், மராட்டியம் ஆகிய மாநிலங்களில் 80% பணிகளும், ராஜஸ்தானில் 75% பணிகளும், ஆந்திரா 75% பணிகளும், மத்தியப் பிரதேசத்தில் 70% பணிகளும் உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தனியார் துறையில் மட்டுமல்ல, அரசுத்துறையிலும் ,பிற மாநிலத்தவர்கள் எளிதில் வேலை வாய்ப்பு பெறும் வகையில் இலகுவான சட்டத்திருந்த்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழருகே வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை தர வேண்டும் என்ற கோரிக்கை கவனிப்பின்றி உள்ளது.
Leave a Reply