இந்தமுறை ஜெயிக்கனும்னா திமுகதான் போட்டியிடனும் அதிலும் தொகுதியில் உள்ளவர்தான் போட்டியிடனும், வேட்பாளரை வெளியிலிருந்து இறக்குமதி பண்ணக்கூடாது என்று உற்சாகமாகவும் கண்டிப்போடும் மனம் திறக்கிறார்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தனி தொகுதியை சேர்ந்த உடன்பிறப்புகள்! தொகுதிக்குள் பயணம் செய்தோம்… நாங்க ஆளுங்கட்சி நாங்கதான் ஜெயிக்கனும் என்பதில் வெறியாக இருக்கிறோம். வழக்கம்போல காங்கிரஸ்., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் என்று கூட்டணி கட்சிக்கு தள்ளி விட்டுட்டா நாங்க சோர்வடைந்து விடுவோம். திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பெரும்பான்மையோரின் மனநிலை இதுதான்! இன்னும் ஒரு ரகசியம் இருக்கு. திமுக வேட்பாளர் போட்டியிட்டால் தேவையான அளவு வன்னியர் ஒட்டுகளை வளைச்சிக்கலாம் என்பதுதான்.
நிறைய நலத்திட்டங்கள் மக்களை போய்ச் சேர்ந்திருக்கிறது நிர்வாகிகள் மத்தியில் முழுமையான ஒத்துழைப்பு இருந்தால் போதும், திமுக தொண்டர்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்கிறார் மாத்தூர் பகுதி உடன்பிறப்பு ஒருவர். 2016ல் அரசு மருத்துவராக இருந்த டாக்டர் மாலதி நாராயணசாமி ஆயிரத்து முன்னூறு ஓட்டு வித்தியாசத்தில் தோற்றுப்போனார். அதற்கு காரணம் ஒரு சில திமுக நிர்வாகிகள் என்று அவர்களையும் விரல் நீட்டி காட்டுகிறார்கள் சிங்காரப்பேட்டையில்! கோடிகளை கொட்டி வெற்றியை தட்டி பறிக்க முடியாவிட்டாலும் அரசாமல் தொகுதியையும் அறிவாலயத்தையும் சுற்றி சுற்றி வருகிறார் டாக்டர் மாலதி நாராயணசாமி. மாநில மகளிர் ஆணைய உறுப்பினர், மாநில மகளிரணி பிரச்சார குழு செயலாளர் என்று பிரபலமாகவோ இருக்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மாப்பிள்ளை சபரீசன் முதல்வரின் துணைவியார் துர்க்கா ஸ்டாலின் கனிமொழி எம்பி இவர்களை அடிக்கடி தரிசனம் பார்க்கிறார் அதனால்தானோ என்னவோ ஊத்தங்கரை தொகுதியில் திமுக அல்லாதவர்கள் மத்தியிலும் பேசப்படுகிறார் என்கிறார் மிட்டப்பள்ளி மூத்த திமுக பிரமுகர் ஒருவர். அடுத்தவர் பொறியாளர் அணியை சேர்ந்த மிட்டப்பள்ளி காந்தி இவரும் லேசுபட்ட ஆள் இல்லை சீட் கிடைச்சா கோடிகளை செலவு பண்ணக்கூடிய நபர்தான் என்று சான்றிதழ் வழங்குகிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த மாவட்ட நிர்வாகி ஒருவர். டாக்டர் மாலதி நாராயணசாமியையும் மிட்டப்பள்ளி காந்தியும் தொகுதியில் பேசப்பட்டாலும் தொகுதியில் எம்எல்ஏ சீட் கேட்கும் திமுகவினர் பட்டியல் மிக நீளம்… மிட்டப்பள்ளி சின்னத்தாய் இவருக்கு எம்எல்ஏ சீட் லட்சியம் ஆனா மாவட்ட கவுன்சிலர் சீட் நிச்சயம் என்கிறார்கள். கட்சி நிகழ்ச்சிகளுக்கு கூப்பிட்டா பேஷண்ட் காத்துகிட்டு இருக்காங்க நான் கிளினிக் போறேன்னு சொல்லிட்டு கிளம்பிடுவாராம் டாக்டர் கந்தசாமி அவரும் எம்எல்ஏ சீட் எப்படியாவது வாங்கிடனும் என்கிற ஆசையில் இருக்கிறார். கிழக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் லயோலா ராஜசேகர் இவர் தலைமை கழக பேச்சாளராகவும் இருக்கிறார். இந்தமுறை எனக்குத்தான் சீட்டு என்று சொல்லிக்கொண்டு வலம் வருகிறார். மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அமைப்பாளர் ஜீவானந்தம், ஊத்தங்கரை ஒன்றிய துணைச் செயலாளர் ஜெயச்சந்திர பாண்டியன் தனி ரூட்ல எம்எல்ஏ சீட் வாங்க பைபாஸ்ல பயணம் பண்றதா மீடியாக்காரர் ஒருவர் நம் காதில் கிசுகிசுத்தார்.
இது போக, ஓய்வுபெற்ற அரசியல்வாதிகளான சிங்காரப்பேட்டை ராஜா, வாத்தியார் சந்திரன், கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வந்த முன்னாள் எம்எல்ஏ கிருஷ்ணமூர்த்தி என்று நீளுது. திமுகவினர் ஆர்வமுடன் எம்எல்ஏ சீட்டுக்காக இப்படி வரிசையில் நின்றாலும் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆதரவு யாருக்கு என்கிற பட்டிமன்றம் இன்னொரு பக்கம் நடந்துகொண்டிருக்கிறது. அதிமுக தொடர்ந்து தன் கட்சி சார்புல வேட்பாளரை நிறுத்தறாங்க, எங்க கட்சியில மட்டும் ஏன் கூட்டணிக்கு தள்ளி விட்டுடறாங்க முப்பதாயிரம், நாற்பதாயிரம் ஒட்டு வித்தியாசத்தில தோற்கவா? எம்பி எலெக்ஷனா ஓட்டு தாராளமா போடறாங்க.., எம்எல்ஏ எலெக்ஷனா நிறைய ஓட்டு குறையுது ஏன்னு தெரியல என்கிறார் ஊத்தங்கரை பேரூராட்சி கவுன்சிலர் ஒருவர் ஆக, சட்டமன்ற தேர்தலுக்கு தங்களை தயார்படுத்திகிட்டு இருக்காங்க ஊத்தங்கரை தனிதொகுதி திமுகவினர் என்பது ஓரளவு நிஜம்தான்.
– ஆலவாயர்
உதவி பாலாஜிமணி
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Leave a Reply