Save 20% off! Join our newsletter and get 20% off right away!

சேலத்தில் இடிக்கப்பட்ட தீண்டாமை சுவர்

தமிழ்நாட்டில் பல இடங்களில் சமூகங்கள் தெருக்களால் பிரிக்கப்பட்டிருக்கும். அவற்றை சுவர்கள் கட்டியும் சிலர் தடுக்க முயல்வதுண்டு. அத்தகைய தீண்டாமை சுவர்கள் கடந்த மூன்றாண்டு காலத்தில் பல இடங்களில் இடிக்கப்பட்டன.

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ளது சந்தையூர் கிராமத்தில் கட்டப்பட்ட 200 மீட்டர் நீளமுள்ள தீண்டாமை சுவர் ஒன்று 2018ல் இடிக்கப்பட்டது. அதற்காக பழனிமுருகன் என்பவர் உடலை ஒரு வாரமாக பெறாமல் மக்கள் போராட்டமே நடத்தினர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடூர் பகுதியில் 2019 டிசம்பர் 2ஆம் தேதி ஆதி திராவிடர் காலனியில் சுமார் 25 அடி உயர கருங்கல் தீண்டாமை சுவர் தானாகவே  இடிந்து விழுந்தது. ஆனால், அந்த இடிபாடுகளில் சிக்கி 17 பேர் உயிரிழந்தது தான் சோகம்.

கடந்த மாதம் கோவை மாவட்டம்  துடியலூர் பன்னிமடை ஊராட்சி கொண்டசாமி நாயுடு நகரில் கட்டப்பட்ட 23 அடி நீளம், 10 அடி உயரம் கொண்ட தீண்டாமை சுவர்  கலெக்டர் உத்தரவால் இடிக்கப்பட்டது.

இப்படி பல இடங்களில் சாதி வேற்றுமை சுவராக எழுந்து நின்ற நிலையில், சேலம் மாவட்டம் நங்கவள்ளி கிராமத்திலும் ஒரு சுவர்  எழுப்பப்பட்டது. இங்குள்ள  ஆதிதிராவிடர் காலனியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் பகுதியில் இருந்த மேட்டூர் பிரதான சாலைக்கு செல்ல 52 ஆண்டுகளுக்கு முன்பு நடைபாதைக்காக  தர்மலிங்கசெட்டியார் என்பவருக்கு சொந்தமான 38 அடி அகலத்தில் 740 அடி நீளம் கொண்ட இடம்  நடைபாதைக்காக தானமாகப் பெறப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில், அந்த சாலையை பயன்படுத்த முடியாதவாறு ஒரு சுவற்றை தனியார் கல்லூரி நிர்வாகம் எழுப்பி உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். ஒரு சிலர் தாங்கள் காலனியில் வசிப்பதால் வேண்டுமென்றே ஒதுக்கி வைக்கும் நோக்கத்தில் தீண்டாமை சுவர் எழுப்பப்பட்டுள்ளதாக புகார் கூறினர்.

 சுவர் எழுப்பியதால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் இரவோடு இரவாக தடுப்புச் சுவரை இடித்து தரை மட்டமாக்கி விட்டனர். இதனால் மற்றொரு தரப்பினர் ஆதிதிராவிடர் காலனிக்குள் புகுந்து அப்பகுதி மக்களை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இரு தரப்பும் மோதிக்கொண்ட வீடியோக் காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அதில், இந்த சுவரை அகற்ற வேண்டும் என புகார் கொடுத்த தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த ஒரு பெண்மணியை அப்பகுதி மக்கள் கொடூரமாக தாக்கும்  காட்சி கொடூரமாக உள்ளது. அப்பெண் மீது ஒருவர் கல்லை கொண்டு எறிய அது அவரின் காலில் பட்டு அவர் வலியால் துடிக்கும் காட்சி அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.

 இதற்கிடையே பாதிக்கப்பட்ட மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தீண்டாமைச் சுவரை கட்ட ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படும் நங்கவள்ளி முன்னாள் ஒன்றிய தலைவர் ஜீவானந்தம் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினர்.