ஆளுங்கட்சியான திமுகவில் புதிய மாவட்டச் செயலாளர்கள் பிரிப்பின்போது, திமுகவில் மாவட்டச் செயலாளர்கள் யார், யார் என்பது குறித்து உதயநிதி டீம் ரகசிய சர்வே எடுத்துவிட்டதாக உடன்பிறப்புகள் கிசுகிசுத்துவருகின்றனர்.
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் சொந்த மாவட்டம் என்பதால், வேலூர் மாவட்டம் தனி இடத்தைப் பிடிக்கிறது. மாவட்டச் செயலாளராக இருக்கும் அணைக்கட்டு எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமாருக்கும் இரண்டாவது முறை எம்.பி.யாகி இருப்பவரும், துரைமுருகனின் மகனுமான கதிர் ஆனந்துக்கும் ஏழாம் பொருத்தம்.
எம்.பி. தேர்தலின்போதே தனது ஆதரவாளர்களை வைத்து செக் வைத்த ஏ.பி.நந்தகுமார் பின்னர் நீர்வளத் துறையில் பல காண்டிராக்டுகளை பெற்று, கதிர்ஆனந்துக்கு தேர்தல் பணியாற்றியதாக ஒரு பேச்சு உலா வருகிறது.
இதுகுறித்து அறிவாலயம் எடுத்த ரகசிய விசாரணையில், நந்தகுமாரின் ஆதரவாளர்கள் சோஷியல் மீடியாவில் செய்யும் பப்ளிசிட்டி, தனி ஆவர்த்தனம், ஏ.பி.என். பிரதர்ஸ் என்ற பெயரில் செய்யும் அட்டகாசம், காண்டிராக்டுகள் அதிமுகவினருக்கு தாரை வார்ப்பு, சொத்துகள் குவிப்பு, ஆக்கிரமிப்புகள் அகற்றுதலில் அத்துமீறல், மணல் திருட்டு, கட்டப் பஞ்சாயத்து, ஜாதி அரசியல் என்று பல்வேறு முறைகேடுகள் தெரியவந்துள்ளது. இதனால், ஏ.பி.நந்தகுமார் மீது கட்சித் தலைமை கடும் கோபத்தில் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த நிலையில், இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற ரீதியில் தற்போது மாவட்டங்கள் பிரிப்பில், ஏ.பி.நந்தகுமாருக்கு செக் வைக்கப்படலாம் என்று ரகசியமாக பேச்சு ஓடிக் கொண்டிருக்கிறது. ஐந்து எம்எல்ஏ தொகுதிகள் கொண்ட வேலூர் மாவட்டம் மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்படலாம் என்கிறார்கள் கட்சியினர்.
இதன்படி, வேலூர், காட்பாடி தொகுதிகளுக்கு மாவட்டச் செயலாளராக வேலூர் எம்எல்ஏ ப.கார்த்திகேயன் நியமிக்கப்படலாம் என்கின்றனர்.
அணைக்கட்டு தொகுதிக்கென மாவட்டச் செயலாளராக ஏ.பி.நந்தகுமாரை நியமித்து, அவரது பல் பிடுங்கப்படலாம் என்கின்றனர் உடன்பிறப்புகள்.
இரட்டை தனித் தொகுதிகளாக உள்ள கே.வி.குப்பம், குடியாத்தம் தொகுதிகளை ஒன்றிணைந்து உருவாகும் மாவட்டத்துக்கு ஏ.பி.நந்தகுமார் தரப்பில், சேர்மன்கள் என்.இ.சத்தியானந்தம், எஸ்.சௌந்தரராஜன், கவுன்சிலர் ஜி.எஸ்.அரசு உட்பட சிலர் பெயர் பரிந்துரைக்கப்படலாம் என்கின்றனர் அவரது பிரதர்ஸ் இந்த மாவட்டத்துக்கு செயலாளராக கதிர் ஆனந்தும் முயற்சிப்பதாக ஓர் தகவல். ஆனால் அவர் தனக்கு கிடைக்காவிட்டாலும், தனது ஆதரவாளர்களில் ஒருவருக்கு பெற்றுதந்துவிட முயற்சிக்கிறார்.
25 ஆண்டுகளாக ஒன்றியச் செயலாராக இருக்கும் கட்சியின் சீனியர் கள்ளூர் ரவிக்கு கதிர்ஆனந்த் பரிந்துரைப்பதாக தகவல்.இருந்தாலும், பேர்ணாம்பட்டு ஜீபேர் அஹமத், பேராசிரியர் டி.பி.என்.கோவிந்தராஜ் உட்பட சிலரது பெயர்களும் உதயநிதி டீம் பரிசீலித்து வருவதாகவும் அறிவாயலத்தில் பேச்சு பரபரப்பாக ஓடுகிறது.மண்ணின் மைந்தரின் மானசீக ஆதரவும், கதிர் ஆனந்தின் உறுதியான நம்பிக்கையையும் கொண்ட கள்ளூர் ரவிக்கு வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது என்கிறார்கள் உடன்பிறப்புகள்.
இந்த நிலையில், 2021, 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல்களில் குடியாத்தம், கே.வி.குப்பம் தனி தொகுதிகளில் அதிமுக அணியே வென்றது. டிடிவி. அணிக்கு எம்எல்ஏ ஜெயந்தி பத்மநாபன் சென்றதால், பதவிப் பறிப்புக்கான ஆளானதால் 2019-இல் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுகவின் காத்தவராயன் வென்றார். 2021-இல் அமலு விஜயன் குடியாத்தம் தொகுதியில் திமுகவில் வென்றார். ஆனால், கே.வி.குப்பம் தொகுதியில், அதிமுக கூட்டணியின் புரடசிப் பாரதம் ஜெகன் மூர்த்தியே வென்றார். துரைமுருகனின் சொந்த கிராமமான காங்குப்பம் அடங்கிய கே.வி.குப்பம் எம்எல்ஏ தொகுதியில், மூன்று முறையும் திமுக அணிக்கு தோல்விதான். இந்த நிலையில், இரு இரட்டை தனி தொகுதியை அடங்கிய மாவட்டத்துக்கு ஆதிதிராவிட சமூகத்தைச் சேந்தவரை மாவட்ட செயலாளராக நியமிக்கலாமா என்ற யோசனையும் அறிவாலயத் தலைமைக்கு எழந்துள்ளது.
அப்படி ஒரு சூழ்நிலை எழுந்தால் எம்எல்ஏ அமலு விஜயனுக்கு வாய்ப்பு என்று லேட்டஸ்ட் டாக்
– ஏகன் அநேகன்
Leave a Reply