Save 20% off! Join our newsletter and get 20% off right away!

கூத்தாடிகள் குடும்பங்களுக்கு நிலமும், வீடு கட்ட ஆணை வழங்கிய அரசு!அவரவர் தகுதிக்கு ஏற்ப தொழில் அமைத்து தர முன் வருமா?

கரூர் மாவட்டம் வேட்டமங்கலம் ஊராட்சி குந்தாணிபாளையம் பகுதியில் கலை கூத்தாடிகள் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களில் மூன்னூறுக்கும் மேற்பட்ட மழைவாழ் மக்கள் வசித்து வந்தனர்.

இவர்களது தொழில் ஊர் ஊராய் சென்று பொதுமக்கள் மத்தியில் கூத்தாடி மற்றவர்களை மகிழ்விப்பதை தொழிலாக கொண்டுள்ளனர்.

நாடோடி கூட்டமானாலூம் நாங்களும் மனிதர்கள்தான். ஊர் ஊராய் பிழைப்புகாக சுற்று திரியும் இவர்ளது குடும்பத்தினர் ஆண்டுக்கு ஒருமுறை சொந்த நிலத்தில் தங்கி இரு மாதங்கள் உறவினர்கள் ஒன்று கூடி இங்குள்ள காளியம்மனுக்கு திருவிழா நடத்தும் இவர்கள் தைப்பூசம் வந்தால் அவரவர் பிழைப்பு தேடி தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு குடும்பத்துடன் சென்று விடுகின்றனர்.

இவர்கள் தொழிலுக்காக ஊர் ஊராய் திரிவதால் இவர்களது குடும்பங்களில் கடந்த தலைமுறைகளாகவே யாரும் படிக்க முடிவதில்லை. குழந்தைகள் ஆசை பட்டாலும் காலத்தின் கட்டாயத்தினால் படிப்பு என்பது கனவாக போய்விட்டது என கண் கலங்கி வந்தனர்.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் பிழைப்பு தேடி செல்வோம். முகவரி என்றால் பெயரளவில் மட்டுமே, கரூர் வேட்டமங்கலம் ஊராட்சி குந்தாணிபாளையம் கலைகூத்து நகரை சொல்ல வேண்டியுள்ளது. ஆனால் எங்களுக்குகென்று நிலம் மற்றும் வீடு கிடையாது என பலரும் தெரிவித்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில் கடந்த சட்ட மன்றத் தேர்தல் பரப்புரைக்கு வந்த திமுக தலைவர் மு க ஸ்டாலின் திமுக ஆட்சி அமைந்தவுடன்

கலைகூத்தாடி இன மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என உறுதி அளித்திருந்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏழை, எளிய அடித்தட்டு மக்கள் வாழ்வில் மேம்பாடு அடைவதற்கும், பொருளாதாரத்தில் வளம் பெறுவதற்கும் தேவையான திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டதன் அடிப்படையில், முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட கழக நிர்வாகி செந்தில் பாலாஜி வழிகாட்டுதலின்படி மேற்கண்ட 94 குடும்பங்களைச் சேர்ந்த 358 நபர்கள் வசிப்பதற்கு இலவச வீட்டுமனை வழங்க முடிவெடுக்கப்பட்டு,

கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பரில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியால் இந்த பகுதி மக்களுக்கு குப்பம் கிராமத்தில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு கலைஞர் நகர் உருவாக்கப்பட்டு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டது.

பிறகு அரவக்குறிச்சி எம்எல்ஏ மொஞ்சனூர் இளங்கோ இப்பகுதியினை நேரில் பார்வையிட்டு மின்சாரம், குடிநீர், கழிப்பறை, அங்கன்வாடி மையம் பள்ளி கட்டிடம் மற்றும் மயானம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன.

இதனையடுத்து தற்காலிகமாக சேலை மற்றும் தார்ப்பாய் உதவியுடன் குடில் அமைத்து வாழ்ந்து வரும் இப்பகுதியினருக்கு கான்கிரீட் வீடு என்பது கனவாகவே இருந்து வந்தது. இந்நிலையில் இங்கு வசிக்கும் 83குடும்பங்களுக்கு முதற்கட்டமாக கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக கட்டுதல் திட்டத்திற்காக வீடு கட்டுவதற்கு பயனாளிகளுக்கு பணி ஆணையினை அரவக்குறிச்சி எம்எல்ஏ மொஞ்சனூர் இளங்கோ

வழங்கியதுடன் பூஜை பணிகளை தொடங்கி வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கலை கூத்தாடிகளுக்கு தகுதிக்கு ஏற்ப தொழில் அமைத்து தர முன் வேண்டும் என கலை கூத்தாடிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து நாட்டாமை ராஜ் வயது(71)கூறுகையில்

நினைவு தெரிந்த நாள் முதல் இந்த கலை கூத்தாடி தொழிலை செய்து வருகிறேன். மூன்று தலைமுறையாக எனது முன்னோர்கள் யாரும் வீடு கட்டி குடியிருந்தது கிடையாது. நாங்கள் ஊர் ஊராய் சென்று கூத்தாடி பிழைக்கும் எங்களுக்கு மழை அல்லது குளிர்காலமோ வந்தால் எங்களது பாடு வறுமையுடன் போராட்டம் தான். அரை வயிற்று கஞ்சிக்கு ஆளாய் பறக்க வேண்டி இருக்கும். தற்போது நான் முதன் முறையாக திமுக அரசு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்ட நிதி ஓதுக்கீடு செய்து வீடு கட்ட பணிகள் நடந்து வருவது சந்தோஷம் ஆகும் என்றார்.

இது குறித்து சித்ரா கூறுகையில்,

பாழும் வயிற்றுகாக பச்சை குழந்தைகள் பசியுடன் அந்தரத்தில் அரை மயக்கத்தில் வித்தைகள் செய்வதை பார்க்கும்போது, எங்களது கண்களில் கண்ணீர் நின்றாலும், மக்களின் சந்தோஷ ஆரவாரத்தில் பெருமை கலந்த சிரிப்பை காணமுடிகிறது. இந்த கொடுமையான வாழ்க்கை இன்னும் எத்தனை தலைமுறைக்குதான் தொடருமோ எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் மக்கள் மத்தியில் கூத்தாடி அதில் கிடைக்கும் வருமானத்தால் பிழைத்து வருகிறோம் பிழைப்பு தேடி ஊர் ஊராய் செல்வதால் எங்களது உறவினர்களில் யாரும் படிப்பு கிடையாது என்றார்.

இது குறித்து சண்முகம் கூறுகையில்

எங்களது வித்தைகளுக்காக பயன்படுத்தப்படும் நாய், ஆடு, குதிரை, குரங்கு போன்ற பிராணிகளும், கம்பி மீது நடந்தும், நெருப்பு வலையத்தில் குதித்தும், நாட்டிய மாடியும் சம்பாதிக்கின்றன. அவைகளையும் எங்களது குழந்தைகளை போலவே வளர்த்து வருகிறோம். பார்வையாளர்கள் கூட்டமும் தற்போது டிவி பார்க்க வீட்டோடு தங்கி விடுவதால் வருடத்தில் பாதி நாட்கள் வறுமையிலேயே ஓடுகிறது. மற்றவர்களை போல நல்ல வேலையும் எங்களது குழந்தைகளுக்கு படிப்பும் கிடைக்க அரசு உதவி செய்யாதா என்ற ஏக்கத்தில் அனைவரும் உள்ளோம் என்றார்.

இது குறித்து மஞ்சுளா கூறுகையில்,

ஆண்டு தோறும் பிழைப்பு தேடி ஊர் ஊராய் சுற்றினாலும் எங்களது இடம் உள்ள இந்த நிலத்திற்கு வந்து தற்காலிக கொட்டகை அமைத்து குடியிருப்போம். எங்களுக்கு கலை கூத்தாடுவது தவிர வேறு எந்த தொழிலும் தெரியாது வேறு எந்த தொழிலை மாற்ற நினைத்து வேறு தொழிலுக்கு செல்ல வேலை தேடினால் எங்களுக்கு பணி கொடுக்க மறுக்கின்றனர்.

இது குறித்து சபியா கூறுகையில்,

நான் பத்தாவது வரை படித்துள்ளேன் மற்ற குழந்தைகள் படிக்க பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பலரை பார்க்கும்போது எங்களது உறவினர்களது குழந்தைகளை படிக்க அனுப்ப வேண்டும் என்ற ஆசை உள்ளது. இங்கேயே தங்கி குழந்தைகளை படிக்க வைத்து, அடுத்த தலைமுறையாவது நன்றாக படித்து முன்னேற விரும்புகிறோம் எனவே அவரவர் தகுதிக்கு ஏற்ப தொழில் அமைத்து தர அரசு முன் வர வேண்டும் என்றார்.

– ஏகன்அநேகன்