“ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்த கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு 50% மானியத்தில் நாட்டின கோழிக் குஞ்சுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் வருகின்ற 12.10.2024-க்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் -மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தகவல் தெரிவித்தார்.
சிவகங்கை. கிராமப் புறங்களில், நாட்டுக்கோழி வளர்ப்பில் திறமையும் ஆர்வமும் நிறைந்த ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்த, கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற (ஊராட்சி ஒன்றியத்திற்கு 100 பயனாளிகள் வீதம்) 38,700 பெண்களுக்கு (ரூ.645 இலட்சம்) ஆறு கோடியே நாற்பத்து ஐந்து இலட்சம் ரூபாய் செலவில் நாட்டின கோழிக் குஞ்சுகள் (ஒரு பயனாளிக்கு 40 கோழிக் குஞ்சுகள் வீதம்) 50 சதவீதம் மானியத்தில் வழங்கும் திட்டத்தினை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களிலிருந்து (ஊராட்சி ஒன்றியத்திற்கு 100 பயனாளிகள் வீதம்) 1,200 பயனாளிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
மேலும், பயனாளி ஏழைப் பெண்ணாக இருத்தல் வேண்டும், விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட மற்றும்
ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அதுமட்டுமன்றி, பயனாளி 30% தாழ்த்தப்பட்ட / பழங்குடி இனத்தை சார்ந்தவர்களாக இருத்தல் வேண்டும், பயனாளி அந்த (சம்பந்தப்பட்ட) கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராகவும், கோழி வளர்ப்பில் ஆர்வம் உள்ளவராகவும் இருத்தல் வேண்டும்.
அதுமட்டுமன்றி, பயனாளி சொந்த செலவில் ரூ.3,200/-க்கு நான்கு வாரம் வயதுடைய நாட்டின கோழிக்குஞ்சுகள் 40 எண்ணம் கொள்முதல் செய்யும் திறன் பெற்றவராக இருத்தல் வேண்டும். சுயசான்று வழங்கிய செலவின இரசீதுகள் சமர்பிக்கப்பட்டவுடன் 50 சதவீதம் மானியத் தொகையான ரூ.1,600/-(ரூபாய் ஆயிரத்து அறுநூறு மட்டும்) சம்பந்தப்பட்ட பயனாளியின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
மேலும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பதிவு செய்யப்பட்ட சுய உதவி குழுக்களைச் சேர்ந்த பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
பயனாளி முந்தைய ஆண்டுகளில் இலவச கறவை மாடு, வெள்ளாடு/செம்மறியாடு திட்டம் அல்லது கோழிப்பண்ணை திட்டங்களால் பயனடைந்திருத்தல் கூடாது.
ஆதார் அட்டை நகல், விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளி ஆகியவைகளுக்கான சான்றுகளின் நகல், தாழ்த்தப்பட்ட / பழங்குடி இனத்தை சார்ந்தவர்களுக்கான சான்று நகல், விண்ணப்பதாரருடைய வங்கி கணக்கு புத்தகம் நகல், விண்ணப்பதாரர் முந்தைய ஆண்டுகளில் இலவச கறவை மாடு, வெள்ளாடு / செம்மறியாடு திட்டம் அல்லது கோழிப்பண்ணை திட்டங்கள் மூலம் பயனடையவில்லை என்பதற்கான சான்று, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பதிவு செய்யப்பட்ட சுய உதவி குழு உறுப்பினருக்கான சான்றின் நகல் ஆகிய ஆவணங்களை விண்ணப்பத்துடன் இணைத்து மேற்கண்ட தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களில் வருகின்ற 12.10.2024 ஆம் தேதிக்குள் விண்ணப்பிங்களை சமர்ப்பித்து பயன்பெறலாம்.
– நா.ரவிச்சந்திரன்
Leave a Reply