Save 20% off! Join our newsletter and get 20% off right away!

சந்திப்பில் கிடைத்த சிகரங்கள் எளிமை வலிமை புதுமை

பகுதி 1

பணத்திற்கு அலைவதை விட புகழுக்கு அலைகிற பெரிய மனிதர்களை நேரில் பார்த்துக் கொண்டிருக்கிறேன் .
ஆனால் எந்த பகழ் வலையிலும் சிக்கிக் கொள்ளாமல் எளிமையாக வாழக்கூடியவர்கள் உலகத்தில் இன்னும் இருக்கிறார்கள் என்பதை நான் சமீபத்தில் கண்கூடாகப் பார்த்தேன். அட சந்தித்தேன்.
அப்படி சந்தித்த ஒருவர்தான் நீதிபதி சந்துரு.

நீதிபதி சந்துரு என்பதைவிட ஜெய்பீம் சந்துரு என்று சொல்வதையே உலகம் இப்பொழுது ரசித்துக் கொண்டிருக்கிறது.

சந்துரு நீதிபதியாக இருந்த காலத்தில் நிறைய புரட்சிகரமான நீதி களை வழங்கி இருக்கிறார் .
அதில் ஒன்று “மை லார்ட் ”  வன்று அழைக்காதீர்கள் என்பதே.
வழக்கறிஞர்கள் இப்படி அழைக்கும் வார்த்தையை தயவுசெய்து மாற்றங்கள் நான் ஒன்றும் கடவுள் இல்லை என்று அவர் சொன்னதை சட்ட உலகம் மட்டுமல்ல மக்களும் அவரை திரும்பிப் பார்த்தனர்.

ஜெய்பீம் வந்த பிற்பாடு நீதிபதி சந்துருவை இந்தியாவெங்கும் எல்லோரும் வணக்கம் செலுத்தி வழிபடுகிறார்கள்.

எப்படி இதைச் சொல்கிறீர்கள் என்றால் எனக்கு சென்ற மாதம் திருப்பத்தூரில் புத்தக கண்காட்சி ஒன்றை திறக்க நீதிபதி சந்துரு ,கோவி லெனின்  உடன் நானும் சேர்ந்து பயணிக்க நேர்ந்தது.

திருப்பத்தூரில் முதன்முறையாக பரிதி பதிப்பகம் இளம்பரிதி அவர்கள் முயற்சி செய்து படித்துறை இலக்கிய சார்பாக அதை நடத்தி இருந்தார்கள் .
அதிகாலை 7 மணிக்கு சதாப்தி ட்ரெயினில் நாங்கள் ஒன்று சேர்ந்து பயணப்படுவதாக திட்டம்.

நான்  காலை 5 மணிக்கு குளித்துவிட்டு
சோழிங்கநல்லூரில் இருந்து புறப்பட்டு சென்னை சென்ட்ரலுக்கு போய் அடைந்தேன் .
நான் சென்று சேர்ந்த நேரம் 6 30 .
ஆனால் அதற்கும் பத்து நிமிடம் முன்பாகவே ஒருவர் அமர்ந்திருந்தார்.
 ட்ரெயினில் யாருமே வரவில்லை ஒருவர் மட்டும்தான்  தனியாக  அமர்ந்திருந்தார். கரித்த உருவம்.
மாஸ்க் முகத்தில் .
படித்துக் கொண்டிருந்தார்.
யாரென்று பார்த்தேன் .
தயங்கியபடியே அருகே சென்று
நீங்கள் சந்துரு தானே என்று கேட்டேன் .

அவர் முகமூடியை கழற்றியபடியே ஆமாம் சிரித்துக் கொண்டே கை நீட்டினார் .
கை கொடுத்தேன்.
நீங்கள் என்றார் .
ராசி அழகப்பன் என்றேன்.
அட நீங்கதானா அது!
என்றார்.
விகல்பமில்லாத அன்னியோன்யம் பற்றிக் கொண்டது.
நீண்ட காலம் பழகியவர் பேச்சு போல இடைவெளியின்றி பேசத் துவங்கினார்.
அடுத்த பத்து நிமிடத்தில் நக்கீரன் கோவி லெனின் வந்து சேர்ந்து கொண்டார் .
மூன்று பேரும் ஏழு மணிக்கு ரயில் பயணத்தை தொடர்ந்தோம்.

மூன்று மணி நேரம் பேசிக் கொண்டே வந்தார் நாங்கள் கேட்டுக் கொண்டே வந்தோம் .
அவருடைய அனுபவங்கள் மிகவும் புரட்சிகரமாக யதார்த்தமாக இருந்தது .
நான் கேட்டேன் எப்படி உங்களால் 96 ஆயிரம் வழக்குகளில் தீர்ப்பு சொல்ல முடிகிறது என்றேன்.
“அதைவிட வேறென்ன வேலை இருக்கிறது எளிய மனிதர்களைப் பற்றி நாம் கவலை கொண்டிருந்தால் அவர்களுக்காக நாம் உழைக்கத் தான் வேண்டும் .அது என்னால் இயன்றது “என்று சொல்லி சிரித்தார்.

நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே அவரை கடந்து சென்றவர்கள் ஒரு மாதிரி நின்று பார்த்து சிரித்துவிட்டு வணக்கம் சொல்லிவிட்டு போனார்கள் .
சிலர் போட்டோ எடுத்துக்கொள்ள வேண்டுமென்று விரும்பினார்கள்.
 அதற்கும் அவர் தயங்கவில்லை சரி என்றார்.
ஆச்சரியமாக அவரை பார்க்க வந்த டிடிஆர் என்ன சார் இவ்வளவு சிம்பிளா இருக்கீங்க என்று சொல்லி போட்டோ எடுத்துக்கொண்டார்.

தோழர் ஒருவர் வந்து
“சார் இந்த கம்பார்ட்மெண்டில் கூட்டம் நிறைய இருக்கே பக்கத்து கம்பார்ட்மெண்டில் இரண்டு பேர்தான் இருக்காங்க டிடிஆர்  ஓ கே சொல்லிட்டார் அங்க உக்காந்து பேசிட்டு வரலாம்
என்ன சார் சொல்றீங்க என்று  கேட்டார்.

அடுத்த சில நிமிடங்களில் அங்கே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.
 இடையில் அரக்கோணம் வந்தது .
எங்களுக்கு  தோழர் டிபன்  வாங்கித் தர சாப்பிட்டோம். ஆனால்
நீதிபதி சந்துரு தான் வைத்திருந்த அந்த சிறிய பையில் இருந்து ஒரு டிபன் பாக்ஸை எடுத்து மூன்று இட்டிலியும்  மிளகாய் பொடியும் வைத்து தொட்டுக்கொண்டு சாப்பிட்டு  விட்டார் .
ஏன் எனக் கேட்டபோது  வெளியில போனா எதுக்கு சிரமம்  அதான் மனைவி செய்ததை கொண்டு வந்துவிட்டேன் என்று சொல்லி சிரித்தார்,.
அப்படியானால் இட்டிலி 4 மணிக்கு தயார் செய்திருக்க வேண்டும்.

ஏன் இதை அவ்வளவு வியப்பாக பார்த்தேன்  என்பதற்கு காரணம் இருக்கிறது .

கொஞ்சம் புகழ் வந்துவிட்டாலே எனக்கு இது வேண்டும் அது வேண்டும் , அந்த சௌகரியம் வேண்டும் என்று அட்டவணை போட்டுக் கொண்டிருப்பார்கள் .
அது போன்று இல்லாமல் ஜெய்பீம் சந்துருவாக மாறியபிறகு யதார்த்தமாக இருந்தது வியக்க வைத்தது .

பேச்சுவாக்கில் கோவி லெனின் ஒரு கேள்வியைக் கேட்டார். “ஜெய் பீம் படம் உங்களுக்கு பிரச்சனையை தந்துவிட்டது தானே “என்றார்.

“எனக்கு என்ன பிரச்சனை .எனக்கு ஒன்றுமில்லை .ஆனால் விளிம்புநிலை மனிதர்களுக்கு  சட்டபூர்வமான விடுதலைக்காக நடந்த ஒரு வழக்கை ஒரு இயக்குனர் படமாக்குகிறார் . அதில் சில சம்பவங்களை பெயர்களை மாற்றுகிறார் .
நேரடியாக யாரும் பாதிக்கக் கூடாது என்று  கவனம் கொள்கிறார்.
அதில் ஒரு சிறு பிழை நேர்கிறது.அதையும் நீக்கி விடுகிறார் .
ஆனாலும் கூட பிரச்சினை வருகிறது என்று சொன்னால் இது அரசியல் தானே .
அரசியலில் இப்படி எல்லாம் இருக்கும் என்பது எனக்கு தெரியும் என்றார்.”

“எப்படி இப்படி ஒரு புரட்சிகரமான செயல்களை எல்லாம்  செய்ய முடிந்தது ?”

 என் கேள்விக்கு அவர் சிரித்துக் கொண்டார் .
“என்ன சார் சொல்றீங்க நான் ஸ்ரீரங்கத்தில் பிறந்தவன்.ஸ்ரீரங்கத்தில் எழுபது வருஷத்துக்கு முன்னாடி .
எல்லாரும் கை கூப்பி வணங்கிய கடவுள் இருக்கிற இடம் .
எனக்கு மட்டும் என்னவோ தெரியல விளிம்புநிலை மக்கள் மேலதிகமான  நாட்டம்.
சின்ன வயசிலேயே கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தேன். படிக்கும் போதே போராட்டம் நடத்தினேன்.
கல்லூரில அதனாலதான் கட் பண்ணிட்டாங்க.

பிறகு சட்டக் கல்லூரியில் போய் படிக்க வேண்டியதாயிற்று
மாணவர் தலைவராக இருந்ததால விடுதியிலே என்ன சேர்த்துக்கொள்ள வில்லை.
சரி படிச்சு முடிச்சிட்டு ரோ & ரெட்டி அப்படிங்கிற சட்ட நிறுவனத்தில் 8 ஆண்டுகள் பணியாற்றினேன் .
ஒரு சமயம் இலங்கை பிரச்சனையில் இந்தியா தலையிட்டது .அது தவறு  ன்னு சொன்னேன் .கம்யூனிஸ்ட் கட்சி லருந்து நீக்கிட்டாங்க.

பிரகு அம்பேத்கர் மேல் நாட்டம் அதிகமாக ஈடுபாடு இருந்தது .
மக்களுக்காக போராடி பல பிரச்சினைகளை சந்திச்சேன்.
அதற்குப் பிற்பாடு 2006ல் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டேன்.
அதுதான் என்னுடைய முழுவீச்சாக கவனம் இருந்தது மக்களுக்கு சேவை செய்ய ஆரம்பிச்சேன்.”

இப்படி தன் அனுபவங்களை சொல்லிக் கொண்டே போகும் போது நான் கேட்டேன் சார் உங்களுக்கு குழந்தை அப்படின்னு ஒரு பொண்ணு அழகான குழந்தை அப்படின்னு சொன்னாரு.

மனைவி அப்படின்னு கேட்டேன் .
பாரதி அப்படின்னு  சொன்னாரு.
ஓ பாரதி வேறயா என்றெண்ணிக் கொண்டேன்.

அப்போ ரெண்டு பெண்மணிகள் தான் உங்களுக்கு பெரிய சப்போட்டா சார்.
 ஆமாம் என்று எளிமையாக சிரித்துக்கொண்டே கடந்து போனார்.

குழந்தை போல ஒரு சம்பவத்தைச் சொன்னார்

நான் எத்தனையோ முறை விமானத்தில் ஏறி இறங்கி இருக்கிறேன் .
சமீபத்தில் வட இந்தியாவுக்கு ஒரு சட்ட நாளின்போது சிறப்புரை ஆற்ற அழைத்திருந்தார்கள்.

விமானத்தில் பயணம் செய்வதற்கு சென்றேன் .
அதிகாரிகள் இருவர் என்னை செக்கப் செய்ய வந்தார்கள் .ஒருவர் வேகமாக  வந்தார்.சிங் என நினைக்கிறேன் .
‘ ஏன் இவரை நிறுத்துகிறார்கள் .யார் தெரியுமா  அவர்.
ஜெய்பீம் சந்துரு
இவரை அனுமதியுங்கள் ‘என்று சொல்லி ஒரு சல்யூட் அடித்தார்

இந்த நீதிபதி சந்துருவுக்கு அப்போதுதான் புரிந்தது ஜெய்பீம் சந்துரு உடைய வெளிச்சம்.

 சினிமா எவ்வளவு பெரிய  ஆயுதம் என்பதை புரிந்து கொண்டேன் ” என்று தன்னையே வியந்து கொண்டு சிரித்தார் .
சந்துரு  அவர்களின் மழலைத்தனத்தை பார்க்க வேடிக்கையாக இருந்தது .

பிறகு இரயிலில் இருந்து இறங்கி திருப்பத்தூருக்கு சென்று புத்தக கண்காட்சியில் அவர் மிகச் சிறப்பான ஒரு உரை ஆற்றினார் .
நானும் உரையாற்றினேன் .

பிறகு திடீரென்று ஒரு நண்பர் யதேச்சையாக ஒரு செய்தியை சொன்னார்.
அவர் பெயர் பார்த்திபராஜா .
பேராசிரியர் நாடக எழுத்தாளர் பன்முகத்தன்மை கொண்டவர் .
அவர் இரயிலில் இறங்கியதுமே’ ஐயா நீங்கள் வருவதாக தெரிந்தால் எங்கள் கல்லூரியில் மாணவர்களிடம் பேச அழைத்திருக்கலாமே என்று எங்கள் முதல்வர் கேட்டார் என்றார் .
உடனே அதனால் என்ன இந்த மீட்டிங் முடிந்ததும் இரண்டு மணி நேரம் இடைவெளி இருக்கிறது அதில் வைத்துக் கொள்ளுங்கள் என்றார்.

சொன்னதோடு நிற்காமல் வழக்கறிஞர் மணி மொழி வீட்டில்  மதிய உணவு அருந்திவிட்டு நேரடியாக அந்த கல்லூரிக்கு சென்று பேசினார் .
நானும் உடனிருந்தேன்.
பேசி முடித்துவிட்டு உடனே ட்ரெயின் பிடிக்க போக வேண்டும்.
முதல்வர் தேநீர் அருந்த அழைக்க அதற்கும் ஓ கே சொல்லி போனார்.
 சாதாரணமாக காரில் ஏறி அவரே நடந்து போய் ட்ரெயினில் ஏறி வீட்டுக்கு திரும்பினார்.

கிட்டத்தட்ட எட்டு மணி நேரத்திற்கு மேல் அவரோடு உடன் இருந்து பயணித்தேன் .
ஆச்சரியமாக இருந்தது .
எந்த பகட்டும் இல்லை .
எந்த புகழ்வாய்ந்த சம்பவம் இல்லை .
எளிமையாக இருந்தார் . நடந்தார் .சாப்பிட்டார்.
நடுவே மறக்காமல்  உடன் வடநாட்டிலிருந்து பயணித்த ஒரு நண்பர் ஏலகிரி மலையில் இருந்தார் அவரை சந்தித்து பேசினார்.

இடையில் என்னுடை சொல் அறை கவிதைப் புத்தகத்தைக் .கொடுத்தேன் வாங்கி படித்து விட்டு சிரித்தார் .
ஒன்று சொல்லட்டுமா என்றார்.
என்ன என்று பார்த்தேன்.

“நான் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் போதே உங்களை நான் அறிந்திருக்கிறேன் .தாய் இதழில் வலம்புரிஜானோடு பணியாற்றிக் கொண்டு இருந்தீர்கள் .
உங்கள் கவிதை ஒன்று அப்போது மேடையில் பிரபலமாக பேசப்பட்டது .
‘ வீட்டுக்கு ஒரு மரம் நடுங்கள்
என்கிறாய் தாயே
அப்படியே செய்கிறோம்
ஒரு மரம் நடுவதற்கு
ஒரு வீடுதா!?”

சரிதானே என்றார்.

அசந்து போனேன் .கோவி லெனின் என்னை ஆச்சரியமாக பார்த்தார் .இதுதான் நீதிபதி சந்துரு வின் குணம்.
தன்னை வியப்பாய் கருதாமல் எளிமையாக இருக்கிறார் .எல்லோரையும் கொண்டாடுகிறார் .இந்த எளிமை யாருக்கு வரும் என்று தான் எனக்கு புரியவில்லை.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது நாம் சென்று பேசியது ஒரு கிறிஸ்தவக் கல்லூரி .நேரம் குறைவு. ரயிலை பிடிக்க வேண்டும் அந்த நெருக்கடியிலும் வாருங்கள் எங்களோடு அவர்கள் கேட்டுக் கொள்கிறார்கள் .”நீங்கள் தேநீரும் பிஸ்கட்டும் சாப்பிட வர முடியுமா “என்று ..
முகம் சுளிக்காமல் வருவோமே என்று சொல்லி போய் சாப்பிடுகிறார் .பேசுகிறார் .புகைப்படங்கள் எடுத்துக் கொள்கிறார் .சிரித்தபடியே செல்கிறார்.

தமிழகத்தில் பிரபலமான தமிழறிஞர்கள் சில பேர் இருக்கிறார்கள் .பார்ப்பதற்கும் பேசுவதற்கும் கூட  தேதியிட்டு  முடிந்தால் பார்க்கலாம் என்று சொல்கிறார்கள் .
சில வாய்ப்புகள் கிடைத்து விட்டால் ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்கிறார்கள் .
இன்னும் சொல்லப்போனால் போட்டோ எடுத்துக்கொள்ள வேண்டும் என்றால் தனியாக எடுத்துக் விடாமல் பலரை
சேர்த்து வைத்துக்கொண்டு  படமெடுக்கிறார்கள்.
தனிப்பட்ட புகழை சேர்த்து விடக் கூடாது என்று கவனமாக இருக்கிறார்கள் .
ஆனால் இதில் எல்லாம் விலகி நிற்கிறார் சந்துரு .

 இதைக் கேளுங்கள்.
ஒரு வேடிக்கையான சம்பவம் நடந்துவிட்டது என்றார்..
என்ன என்று நானும் கோவி லெனினும் ஆச்சரியமாக  கேட்கிறோம்.

 ஆந்திராவிலிருந்து ஒரு பெண் தனது குடும்ப பிரச்சினைக்காக ஒரு வழக்கறிஞரைப் பார்க்க வேண்டுமென்று சென்னை வந்தார்கள் .
கையில் வைத்திருந்தது ஜெய்பீம் சந்துரு அவர்களின் புகைப்படம் .
கதாநாயகன் சூரியனுடைய படம்.

ஆட்டோகாரரிடம் இந்த படத்தை காண்பித்து இந்த வக்கீல் வீட்டிற்குப் போக வேண்டும் என்று சொல்ல அந்த ஆட்டோக்காரர் ஒரு நாள் முழுதும் சுற்றி விட்டு கடைசியில் எப்படியோ என் வீட்டைத் தேடிப் பிடித்து வந்து சேர்த்து விட்டு போனார்.

இது ஒரு கணவன் மனைவி பிரச்சனை .
பெண்ணியத்திற்கு எதிராக கணவர் நிற்கிறார் என்று அழுதுகொண்டே சொன்ன அந்த அம்மா நீங்கள் எப்படியாவது இந்த வழக்கை ஆடவேண்டும் என்று சொன்னார் .
எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
அந்தப் பெண்ணுக்கு ஜெய்பீம் படத்தில் வந்த வக்கீல் வாதாடினால் மட்டுமே ஜெயிக்க முடியும் என்று வந்து விட்டார்.

ஆந்திராவில் இருக்கிற வழக்கை சென்னையில் எப்படி வழக்காட முடியும் ?
உங்களுக்கு நான் ஒரு உதவி செய்கிறேன் அங்கே ஆந்திராவில் ஒருவரை நியமித்து வழக்காட சொல்கிறேன் என்று எவ்வளவோ சொன்னேன் .
அந்தப்பெண் கேட்பதாக இல்லை.

கடைசிவரை சூரியா சிறந்த வழக்கறிஞர் அவர் எந்த கேசையும் முறியடித்து விடுவார் என்று நம்பிக் கொண்டு வந்திருந்தார்கள் முதலில் அது சினிமா என்று சொல்லி நான்தான் நிஜ சந்துரு என்று சொல்லி புரிய வைக்க நிறைய நேரம் பிடித்தது.

பிறகு ஒருவழியாக ஆந்திராவில் இருக்கிற ஒரு வழக்கறிஞரை தொடர்பு கொண்டு அவர்களுக்கு உதவ ச் சொன்னேன்.
சாப்பிட்ட பின்  சரி போய் பாருங்க என்றதும் பிரமை பிடித்தது போல் பார்த்தார்.
 என்ன என்றால் கையில் வைத்திருந்த பணத்தை வைத்துக்கொண்டு தான் அவர்கள் என்னை தேடி வந்தார்கள் . போக பணம் இல்லை சரி என்று அவர்களுக்கு செல்வதற்கான பணத்தையும் கொடுத்து அனுப்பினேன் .
இப்படி சினிமா எவ்வளவு பெரிய வேலையை செய்து இருக்கிறது பாருங்கள் என்று சொல்லி சிரித்தார்.
முன்பாக-
இளம் பரிதியும் விழா ஏற்பாட்டாளர்களும்  ஒரு விருந்தினர் விடுதிக்கு செல்லலாம் என்று அழைத்தனர் .
எதற்கு இன்னும் சிறிது நேரம் தானே இருக்கிறது எங்காவது சற்று நேரம் இருந்து தேனீர் சாப்பிட்டுவிட்டு  நேராக கண்காட்சியை துவக்கலாம் என்று சொன்னார்.

என்ன செய்வது என்று தெரியாமல் அருகிலேயே அண்ணாதுரை எம் பி  அலுவலகம் இருக்கிறது என்று தயங்கினர்.
‘பரவாயில்லை என உங்கள் சென்று அமர்ந்து விட்டு சிறிது நேரத்தில் கண்காட்சிக்குச் சென்று விட்டார்.

நீதிபதி சந்துரு தன் வாழ்நாளில் எவ்வளவு புகழ் பெற்று இருந்தாலும் அதை தலையில் அதை ஏற்றிக் கொள்ளாமல் இயல்பாக இருக்கிறார் .

அவரோடு இருந்த எட்டு மணி நேரம்
எனக்கு மிகப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
எளிமையாக இருப்பது ஒன்றும் சாதாரண விஷயம் அல்ல !
அதை வாழ்ந்து பார்த்தால்தான் தெரியும்.
 காந்தியும் அப்படிப்பட்டவர் தான் !
சந்துரு வாழும் காலத்து எளிமை.
 அதுவே வலிமை!
அதேசமயம் புதுமையும் கூட!

(தொடரும்)