நாயகன் உதய் கார்த்திக் , நாயகியாக சுபிக்ஷா நடித்துள்ளார். இவர்களுடன் விவேக் பிரசன்னா, பார்த்திபன், ஶ்ரீஜா, சந்தோஷ், மோகன சுந்தரம், ஸியி பிரியங்கா, ஜனனி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
எழுத்து, இயக்கம் – செல்வக்குமார் திருமாறன்.
ஒரு குடும்பத்தில் இருக்கும் மூன்று அண்ணன் தம்பிகள், வாழ்வில் ஜெயிக்கப் போராடுகிறார்கள். அவர்களுக்குள் நிகழும் சண்டைகள், காதல், காமெடி என அனைத்தும் கலந்த ஒரு அழகான குடும்பத்தின் வாழ்க்கையை, அற்புதமான ஃபீல் குட் எண்டர்டெயினர் படமாக உருவாக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநரான செல்வக்குமார் திருமாறன். இப்படம் குடும்பத்தோடு அனைவரும் பார்த்து ரசிக்கும் ஜனரஞ்சக படைப்பாக வந்துள்ளது.
நாயகன் உதய் கார்த்திக் சினிமாவில் உதவி இயக்குநராக உள்ளார். இவருடன் பிறந்த இரண்டு அண்ணன்களும் மாதாமாதம் சம்பாதித்துக் கொண்டிருக்க, இவர் மட்டும் சினிமா இயக்க வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருக்கிறார்.
பல தயாரிப்பாளர்களிடம் கதை சொல்லியும் வாய்ப்புக் கிடைக்காமல் தவிக்கும் உதய்க்குக் கடைசியாக ஒரு தயாரிப்பாளர் கிடைக்கிறார். உதய் சொன்ன கதையில் பெரிய ஹீரோவாக இருக்கும் தனது தம்பியை வைத்து படத்தைத் தயாரிக்க முடிவு செய்கிறார்.
ஆனால் இந்தக் கதையைக் கேட்ட ஹீரோ, உதய்யிடமிருந்து கதையை மட்டும் வாங்கிக் கொண்டு தயாரிப்பாளரையே இயக்கச் சொல்கிறார். இதை ஏற்காமலும், கதையையும் கொடுக்காமலும் உதய் அடம் பிடிக்க.. அந்தத் தயாரிப்பாளர் உதய்யையும், அவரது குடும்பத்தினரையும் கேவலமாகப் பேசிவிடுகிறார்.
இந்த வாய்ச் சண்டையால் ஆவேசப்படும் உதய்யின் அண்ணன்மார்கள் திடீர் ஆவேசம் கொண்டு இந்தப் படத்தை நாமளே தயாரித்தால் என்ன என்றெண்ணி படத் தயாரிப்புத் தொழிலில் இறங்குகிறார்கள்.
அண்ணன்களின் தீவிரத்தைப் பார்த்துவிட்டு மொத்தக் குடும்பமும் இதற்குக் கை கொடுக்க முன் வருகின்றன. முடிவில் இவர்கள் அந்தப் படத்தைத் தயாரித்து முடித்தார்களா..? படம் வெளிவந்ததா..? படம் வெற்றியடைந்ததா..? இல்லையா..? என்பதுதான் இந்த ‘பேமிலி படம்’ என்ற படத்தின் திரைக்கதை..!
‘டைனோசர்ஸ்’ படத்தில் தனது அதிரடி நடிப்பால் கவனம் ஈர்த்த நாயகன் உதய் கார்த்திக், இந்தப் படத்தில் இயக்குநராக வேண்டும் என்ற லட்சியத்தை சுமந்து கொண்டு அதைத் தேடியோடும் ஒரு உதவி இயக்குநராக தன் நடிப்பில் அசத்தியிருக்கிறார்.
இயக்குநர் வாய்ப்பு கிடைத்த அந்த நேரத்தில் சந்தோஷத்தில் திளைப்பதும், அதே வாய்ப்பு தயாரிப்பாளரின் வஞ்சக சூழ்ச்சியால் பறிபோகும்போது பதறும்போதும் ஒரு உதவி இயக்குநரை கண் முன்னே கொண்டு வந்து காண்பித்திருக்கிறார்.
இடையில் முகமறியாத பெண்ணின் வாழ்த்துக்களின் மனதைப் பறி கொடுத்துக் காதலிக்கத் துவங்கி, பின்பு அந்தப் பெண்ணின் உதவியாலும் இயக்குதல் பணியைத் தொடரும் காதலன் வேலையையும் சிறப்பாகவே செய்திருக்கிறார்.
அம்மாவுடன் சண்டையிட்டு வேறு, வேறு வேலைகள் பார்த்துக் கொண்டிருந்து, காதலியையும் பிரியும் அளவுக்குப் போகும் டென்ஷனில் படம் பார்க்கும் நம்மிடமிருந்து பெரும் அனுதாபத்தைப் பெற்றுவிட்டார். பாராட்டுக்கள்.. வாழ்த்துக்கள்..!
உதய் கார்த்திக்கின் காதலியாக நடித்திருக்கும் நாயகி சுபிக்ஷாவுக்கு, சின்னக் கதாப்பாத்திரம் என்றாலும் அதைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார். நாயகனின் முயற்சிகளுக்கு உத்வேகம் ஊட்டும் வசனங்களைப் பேசி அவரை ஊக்கப்படுத்தும் நல்லதொரு காதலியாக நடித்துள்ளார்.
நாயகனின் அண்ணனாக நடித்திருக்கும் விவேக் பிரசன்னா படத்தில் பெரும் பகுதியைத் தாங்கிப் பிடித்திருக்கிறார். அந்தக் குடும்பத்தின் தூணே நான்தான் என்பதைப் போல அவருடைய கேரக்டர் ஸ்கெட்ச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தம்பியின் திரைப்பட தயாரிப்பு முயற்சிகளுக்கு பெரும் துணையாக நின்றிருக்கிறார். மற்றொரு அண்ணனாக நடித்திருக்கும் பார்த்திபன் குமாரின் நடிப்பும் கச்சிதம்.
நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் ஸ்ரீஜா ரவி ஒரு அம்மாவாக தன்னால் என்ன செய்ய முடியுமோ அதை செய்துள்ளார். உதய்யைக் கண்டிக்கும் காட்சியிலும், வீட்டை விற்கும் முடிவில் இருக்கும் மகன்களைத் திட்டித் தீர்க்கும்போதும் எல்லா அம்மாக்களின் பிரதிநிதியாகவே நம் கண்களுக்குத் தெரிய வருகிறார்.
நாயகனின் தாத்தாவாக நடித்திருக்கும் பட்டிமன்றப் பேச்சாளர் மோகனசுந்தரம் படத்தின் முக்கியமான திருப்பு முனை காட்சியில் ஒரு முக்கியமான விஷயத்தை எடுத்துச் சொல்லி அவர்களின் செயலை நியாயப்படுத்தும்போது சபாஷ் சொல்ல வைக்கிறார்.
டூ வீலரில் ஒரு முறை பயணிக்கும் ஒரு தயாரிப்பாளர் அந்தக் கதை போனா போகுது. வேற கதையை உன்னால உருவாக்க முடியாதா என்று ஒரு மில்லியன் டாலர் கேள்வியைக் கேட்டு உதய்யை உலுக்கிவிடுவது படத்தில் டச்சிங்கான காட்சி.
மெய்யேந்திரனின் ஒளிப்பதிவில் படம் முழுவதும் அழகு மிளிர்கிறது. மதுரையை அழகாகச் சுத்திக் காட்டியிருக்கிறார்கள். அனீவியின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசை இல்லவே இல்லை என்பது போலவே இருந்தது. சுதர்சனின் படத் தொகுப்புக்கு பெரிய வேலையில்லை.
சினிமா துறையில் படம் இயக்க முயன்று கொண்டிருக்கும் உதவி இயக்குநர்கள் அன்றாடம் எதிர் கொள்ளும் பிரச்சினைகள், அவமானங்கள், வலிகள், வறுமை அனைத்தையும் எண்ணிக்கூட பார்க்க முடியாது.
அவர்களிடம் இருப்பதெல்லாம் ஒன்றேயொன்றுதான். அது அவர்களின் அசாத்தியமான பொறுமை. எல்லா வலிகளையும் தாங்கிக் கொள்ளுங்கள். அனைத்து அவமானங்களையும் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். இது எல்லாவற்றுக்கும் ஒரே மருந்து ஒரேயொரு வெற்றிதான். அது கிடைத்துவிட்டால் எல்லாமே மறந்துவிடும் என்பார்கள்.
அப்படியொரு வெற்றியை இந்தப் படத்தின் நாயகனும் கடைசியில் பெறுகிறார். உதய்க்கு வாய்த்த்தை போன்ற குடும்பம் அனைவருக்கும் இருந்தால் இது போன்று வெற்றியைப் பெற முடியும். இல்லாதவர்கள் போராடித்தான் அடைய முடியும்.
இந்த எளிய கதையை குடும்பக் கதையாக, பீல் குட் மூவியாகக் கொடுத்திருக்கும் இயக்குநர் செல்வக்குமார் திருக்குமரனுக்கு நமது மனமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுக்களும்..!
திரைக்கதையில் சில சறுக்கல்கள் இருந்தாலும்,வெட்டு குத்து இரத்தம் இல்லாமல் ஒரு படம் பார்ப்பது மனதிற்கு சற்று இதமாக தான் இருக்கிறது…
– சு.பகவதி முருகன்
Leave a Reply