அன்றாட வாழ்வின் சூழ்நிலைகளால் திரைப்படங்கள், எழுத்து உள்ளிட்ட பிடித்த விஷயங்களில் கூட ஈடுபாடு இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் வேளையில் இன்று (01.09.24) சற்று நின்று நிதானமாக சமீபத்தில் பார்த்த ஒரு நல்ல தமிழ்ப்படத்தைப் பற்றிய பார்வையாக இப்பதிவு 👋. ‘தங்கலான்’, ‘வாழை’, ‘கொட்டுக்காளி’ உள்ளிட்ட படங்களின் வரவால் ஆகஸ்ட் 2024 தமிழ் சினிமாவின் சிறந்த மாதம் என்று தமிழ் சினிமா ரசிகர்கள் பெருமிதம் கொள்ளும் நிலையில் சென்ற வாரம் ‘வாழை’ படத்தை மட்டும் பார்க்க நேர்ந்தது 👍. படத்தைப் பற்றி பலர் பக்கம் பக்கமாக எழுதிவிட்டார்கள். புதிதாக நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்றாலும் என்னளவில் எனக்குத் தோன்றிய விஷயங்களாக இப்பதிவு.
‘வாழை’ – இயக்குனர் மாரி செல்வராஜின் நான்காவது படம். உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் அவர் உருவாக்கி இருக்கும் படம். கிட்டத்தட்ட அவரின் சுயசரிதை. அவர் வாழ்ந்த வாழ்க்கையின் ஒரு பகுதி. தொன்னூறுகளில் அவர் வாழ்ந்த பகுதியின் எளிமையான மனிதர்களின் வாழ்வியலையும், வாழ்வாதாரத்திற்கான அவர்களின் போராட்டங்களையும், அதன் வலியையும் அழுத்தமாகப் பேசியிருக்கும் ஒரு நல்ல படைப்பு 👏. அந்த வகையில் இயக்குனருக்கு மணமர்ந்த வாழ்த்துக்கள் 💐.
ஒரு சாதாரண ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்து, பல்வேறு துயரங்களை அனுபவித்து, ஒரு மிகச்சறந்த சாதனையாளராக உருவாகிய கதைகளைத் திரையில் பார்க்கும் பொழுது அவர்களின் வெற்றி நமக்குள் ஒரு பெருமிதத்தை ஏற்படுத்துவது உண்மை என்றால் அதே போல் வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் ஒரு குடும்பத்தில் அவர்கள் அனுபவிக்கும் வலியும், வேதனையும் நமக்குள் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் உண்மை. அந்த வகையில் ‘வாழை’ படத்தின் மையக்கருவின் வலியை முற்றிலும் உணர முடிந்தது ❣️. சொற்ப கூலிக்காக அன்றாடம் கனமான வாழைத்தாரைச் சுமந்து செல்லும் அம்மக்களின் வாழ்க்கை முறையை யோசித்துப் பார்க்கும் பொழுது கண்டிப்பாக மனம் கனத்தது 😢. பள்ளிக்கூடத்தில் சிறந்த மாணவனாக இருக்கும் சிவனனைந்தன் மற்றும் அவன் நண்பன் சேகரும் ஏன் வார இறுதிகளில் வாழைத்தார் சுமக்கப் பிடிக்காமல் இருக்கிறார்கள் என்பதில் அவர்களின் உணர்வுகளையும், குழந்தைப் பருவத்தில் சிறுவர்கள் மீது அது ஏற்படுத்தும் தாக்கத்தையும் புரிந்து கொள்ள முடிந்தது.
படத்தின் அடிநாதம் ‘இழப்பு’ மற்றும் ‘வலி’ என்றாலும் சிவனனைந்தன் மற்றும் அவன் நண்பன் சேகர் சார்ந்த சில காட்சிகள் நகைச்சுவையாகவும், அவனின் மனதிற்குப் பிரியமான பூங்கொடி டீச்சரின் பள்ளிக்கூடம் சார்ந்த சில காட்சிகள் ரம்மியமாகவும் இருந்தது 👌. சிறுவர்களாக நடித்திருந்த இருவரும் பிரமாதப்படுத்தி இருக்கிறார்கள். அதிலும் சிவனனைந்தனாக வரும் பொன்வேல் மிகச்சிறந்த நடிப்பு 👏. அவனின் அக்கா வேம்புவாக வரும் திவ்யா துரைசாமியும், கனியாக வரும் கலையரசனும் சில பகுதிகளே வந்தாலும் பொருத்தமாக இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் காதல் காட்சிகளில் ஜீவன் இல்லை 🙁. பூங்கொடி டீச்சராக வரும் நிகிலா விமல் சற்று செயற்கையாகத் தோன்றினாலும் நம் மனதிற்குப் பிரியமான பள்ளிக்கூட டீச்சர்களின் நினைவுகளைக் கிளறிவிடுகிறார் ❣️. அம்மாவாக நடித்திருந்தவர் கதாபாத்திரமும் ரொம்பவே இயல்பாக இருந்தது.
படத்தின் ஆகப்பெரும் பலம் தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு 👌. வாழைத் தோப்பின் செழிப்பைக் கலர் ஃபிரேமிலும், வலியின் அழுத்தத்தைக் கருப்பு வெள்ளையிலும் மனிதர் அற்புதமாகக் காட்சிப்படுத்தி இருக்கிறார். அடுத்தபடியாக சந்தோஷ் நாராயணனின் இசையும் கூடவே படத்தை உயர்த்திப் பிடிக்கிறது 👍. ‘தென்கிழக்கு தேன் சிட்டு’ பாடல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மேலும் ‘பஞ்சு மிட்டாய் சேலை கட்டி’, ‘தூதுவளை இலை அரைச்சு’ பாடலும், ‘பூங்கொடிதான் பூத்ததம்மா’ லேசாக ஒலித்த போதிலும் அந்த நேரம் முழுவதும் ராஜாவும், தேவாவும் மனதை ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள் 👋. மற்றபடி படம் நன்றாகவே இருந்தாலும் தனிப்பட்ட முறையில் படத்தின் இறுதியில் வரும் விபத்து மற்றும் அதற்குப் பிறகு வரும் காட்சிகள் ஏனோ பெரிய பாதிப்பை எனக்குள் ஏற்படுத்தவில்லை 😐.
ஒரு ரூபாய் ஊதிய உயர்விற்கும், ஒரு வாய் சோற்றுக்கும் தான் அனுபவித்த வலி மிகக் கொடுமையானது என்பதை எந்தவித சமரசமும் இன்றி பரிமாறி இருக்கிறது இந்த மாரியின் ‘வாழை’ …
அனைவரின் வாழ்விலும் ஜாதி பேதமின்றி இது போன்ற பல நிஜ சம்பவங்கள் இருக்கின்றன என்பது இந்த படம் பார்க்கும் பொழுது நமக்கு நினைவில் வந்து போகும்…
– பகவதி முருகன்
Leave a Reply