காதல் மனைவி உயிரிழந்தார்,சோகத்தில் கணவன் தற்கொலை.நிர்கதியாய் நிற்கும் நான்கு குழந்தைகள் ..

கும்மிடிப்பூண்டி அருகே காதல் மனைவி உயிரிழந்த சோகத்தில் மனைவியை புதைத்த இடத்தில் கணவனும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய சோழியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் தனியார் தொழிற்சாலை கான்டிராக்டர் சுரேன் (41). இவரது மனைவி தனலட்சுமி (33). ஒரே பகுதியை சேர்ந்த இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஐந்து, ஏழு மற்றும் ஒன்பது வயதுடைய 3 மகள்களும், நான்கு வயது உடைய ஒரு மகனும் உள்ளனர்.  கும்மிடிப்பூண்டி சிப்காட் அடுத்த சிறுபுழல்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் இவரது ஒரே மகன்  யு.கே.ஜி.  படித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 30-ஆம் தேதி மாலை மகனுக்கு பள்ளி கட்டணம் செலுத்துவதற்காக சுரேன் தனது மனைவி தனலட்சுமியுடன் மோட்டார் சைக்கிளில் சிறுபுழல்பேட்டை  நோக்கி சென்றார்.

பைபாஸ் சாலையில் உள்ள சர்வீஸ் சாலை  வழியே சிப்காட் பகுதிக்குள் மோட்டார் சைக்கிள் செல்ல முற்பட்டபோது, சாலை விபத்தில் தனலட்சுமி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதில் சுரேன் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். அதற்கான கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகி அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது.

மனைவி தனலட்சுமி விபத்தில் இறந்த தூக்கத்தால் மனம் உடைந்திருந்த சுரேன், கடந்த சில நாட்களாக வாழ்க்கையை வெறுத்து நடைபிணமாகவே வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், மனைவியை புதைத்த சுடுகாட்டிற்கு சென்ற சுரேன் தனது மனைவி புதைக்கப்பட்ட அதே இடத்தில் அமர்ந்து, அவருக்கு பால் வைத்த சொம்பில் கடும் விஷம் கொண்ட புல் மருந்தை நீருடன் கலந்து குடித்துள்ளார்.  அப்போது சுரேன் தனது மனைவியின் பங்காக கொஞ்சம் விஷத்தையும் மனைவி புதைக்கப்பட்ட இடத்தில் ஊற்றியுள்ளார். தொடர்ந்து விஷம் குடித்த  சுரேன் மனைவி அடக்கம் செய்த இடத்தின் மீது படுத்தபடி மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.

இதைக் கண்ட உறவினர்கள் அவரை மீட்டு அவசர அவசரமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் ஆனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிரிழந்த நிலையில் அவரது உடல் சொந்த கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டு சடங்குகள் முடிந்த பின் மனைவியின் அருகாமையிலேயே புதைக்கப்பட்டார்.

விபத்தில் மனைவியும் காதல் மனைவி உயிரிழந்த சோகத்தில் கணவனும் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கணவன் மனைவி உயிரிழந்த நிலையில் மூன்று பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் தாய் தந்தை உயிரிழந்தது கூட தெரியாமல் விளையாடும் காட்சிகளை சொல்ல வார்த்தைகளே இல்லை.
பச்சிளம் குழந்தைகளை காணும் உறவினர்கள் கதறி அழுழும் காட்சி கல்நெஞ்சக்காரர்களையும் கலங்கடிக்க தான் செய்கிறது.

இந்த கோர சம்பவம் குறித்து கூறும் உறவினர்கள் வீடு, சொத்து, படிப்பு, உணவு என அனைத்துமே கேள்விக்குறியாகி நிர்கதியாய் நிற்கும் குழந்தைகளுக்கு தமிழக அரசு கை கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

-மீடியா மகேஷ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *