Save 20% off! Join our newsletter and get 20% off right away!

தமிழகத்தில் தொடரும் கள்ளச்சாராய மரணங்கள்… மெத்தனால் கலப்பே காரணம்

தமிழகத்தில் தொடரும் கள்ளச்சாராய மரணங்கள்…
மெத்தனால் கலப்பே காரணம்

கள்ளக்குறிச்சி மெத்தனால் கலந்த சாராயத்தால் 41 பேர் உயிரிழந்த சம்பவம் உணர்த்தும் பாடம்-

2023ல் இதே விழுப்புரம்+செங்கல்பட்டு மாவட்டத்தில், மே மாதம் 22 பேர் மெத்தனால் கலந்த சாராயத்தால் உயிரிழந்த போது,இது போன்ற சம்பவங்கள் நிகழாவண்ணம் அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என உறுதியளிக்கப்பட்டது.

ஆனால் இந்த வருடமும் அது தொடர்கதையாக மாறியுள்ளது அரசின் கூற்றை பொய்யாக்கியுள்ளது.

இந்த வருடமும்,கள்ளக்குறிச்சி உயிரிழப்பிற்கு மெத்தனால் கலப்பே காரணம் என உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட 200 லிட்டர் கள்ளச்சாராயத்தை விழுப்புரம் தடயவியல்துறை ஆய்வகத்தில் பரிசோதித்தபோது,அதில் மெத்தனால் கலந்திருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மெத்தனால் என்பது 100 மி.லி.க்கு கீழ் சாராயத்தில் கலந்தாலும்,அது பார்வை இழப்பு,உயிரிழப்பை ஏற்படுத்தும்.

மெத்தனால் இருப்பை உறுதி செய்யும் வாயு குரோமெட்டோகிராபி, கள்ளக்குறிச்சி,விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் இருந்ததா? தெரியவில்லை. இல்லை என்றே சந்தேகிக்கத் தோன்றுகிறது.

MRI பரிசோதனையில் மூளையின் புடாமன்(Putamen)பகுதியில் இரத்தக் கசிவோடு,இரத்த ஓட்டம் குறைந்து மூளை பாதிப்பு ஏற்பட்டிருப்பதை வைத்து மெத்தனால் பாதிப்பை கண்டறிய முடியும்.

மெத்தனாலைக் கண்டறிவது எப்படி?

1)சாராயத்தில் காரமான,மூக்கில் நெடியை ஏற்படுத்தும் தன்மை(Pungent) இருந்தால்,அதில் மெத்தனால் இருக்கலாம்.

2)சாராயத்தை நெருப்பு வைக்கும் போது,மஞ்சள் நிற ஒளிவர்ணம் வந்தால் அதில் மெத்தனால் இருக்க முடியும்.சாராயம் மட்டும் இருந்தால் நீலநிற ஒளிவர்ணம் சேர்ந்திருக்கும்.

தமிழக அரசிற்கு டாஸ்மாக் மூலம் வருடத்திற்கு 44,000 கோடி கிடைப்பதால்,அரசு கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகளை முறையாக எடுப்பதில்லை.

டாஸ்மாக் சாராயம் 3 மடங்கு விலையேற்றப்பட்டதால்,மக்கள் விலை மலிவாக உள்ள கள்ளச்சாராயத்தை(250 மி.லி.-ரூ.60 மட்டுமே.)நோக்கி ஈர்க்கப்படுகின்றனர்.

மெத்தனாலைப் பொறுத்தமட்டில்,அதன் விற்பனை/கட்டுப்பாடு,தமிழக மதுவிலக்கு சட்டம் 1937ன் கீழ் கொண்டுவரப்பட்டதாலும்,Tamilnadu Denatured Spirit, Methyl alcohol(மெத்தனால்)and varnish(French Polish)Rules,1959ல் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டதாலும்,மெத்தனாலின் விற்பனை தமிழக அரசின் முழுக் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. மெத்தனால் எங்கிருந்து எங்கு செல்கிறது என்பதை அரசு தெளிவாக கண்காணிக்க முடியும்.

2002ல் மெத்தனாலை Tamilnadu Prohibition Actன் கீழ் கொண்டு வந்து அதன் முழு விற்பனையும் அரசின் கீழ் கொண்டு வரும் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது.

2002க்குப் பின் தமிழகத்தில் நிகழ்ந்த அனைத்து கள்ளச்சாராய இறப்புகளுக்கும் மெத்தனால் கலப்பே காரணம் எனத் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 11 மெத்தனால் உற்பத்தி நிறுவனங்களும்,71 மெத்தனாலை பயன்படுத்தும் நிறுவனங்கள் மட்டுமே உள்ள போது,அதை கண்காணிப்பது என்பது இயலாத காரியமா?

மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் விற்ற கோவிந்தராஜ் என்பவர் 10 நாட்களுக்கு முன்னர் தான் கைது செய்யப்பட்டு,அவரிடமிருந்து 180 மி.லி.உள்ள 11 பாட்டில்களை காவல்துறை கைப்பற்றியும்,அவரை விடுவித்துள்ளது. ஏன்? கோவிந்தராஜ் இதற்கு முன்னர் குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் ஏன் காவல்துறை மெத்தனமாக செயல்பட வேண்டும்?

கள்ளக்குறிச்சி MLA திரு.செந்தில்குமார்,சம்பவம் நடப்பதற்கு2, 5 தினங்கள் முன்னரும்,அதற்கு முன் பல முறையும் கள்ளச்சாராயம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. ஏன்?

மதுரை-சென்னை உயர்நீதிமன்றக் கிளையில்,திண்டுக்கல்லில் நடந்த சம்பவம் ஒன்றில்,நீதியரசர் திரு.புகழேந்தி அவர்களுக்கு,சட்டவிரோத மதுவிற்பனை தொடர்பாக வீடியோ பதிவு காண்பிக்கப்பட்டது. இருப்பினும் காவல்துறை,அதனிடம் புகார் அளிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை!

இது குறித்து கருத்து தெரிவித்த நீதியரசர்,வீடியோ ஆதாரங்களுடன் புகார் அளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிப்பதாக தெரிவித்ததோடு,கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்திலும்,காவல்துறையினரின் அலட்சியமே காரணம் என வேதனையுடன் கருத்து தெரிவித்துள்ளார்.

சிறு தொழிற்நிறுவனங்களில் கரைப்பானாக பயன்படுத்தப்படும் மெத்தனால் பயன்பாட்டையும் அரசு தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

கள்ளச்சாராயம் குறித்து மக்கள் புகார் அளித்தாலும் சாராய வியாபாரிகள்/காவல்துறை/அரசியல்வாதிகள்/அரசு அதிகாரிகள் இணைந்து இலாபகரமான வணிகத்தை நடத்துவதும்,அதை அரசு கண்டும் காணாமல் இருக்கும் போக்கு உள்ளது என்பதே கள உண்மையாக இருக்கையில்,

கள்ளச்சாராய மரணங்கள் தமிழகத்தில் தொடரும்.

தமிழகத்தில் நல்ல சாராயத்தால் 2022ல் 5 இலட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். அதையும் நாம் பேசியாக வேண்டும்.

சுருக்கமாக,மெத்தனாலின் முழுக் கட்டுப்பாடு தமிழக அரசின் கையில் இருக்கும் போது,மெத்தனால் கலந்த கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும்.

இதுபோன்ற சம்பவங்கள் இனிமேலாவது நடக்காமல் இருக்க மக்களின் புகார்களை காவல்துறை/அரசு உடனே தலையிட்டு தீர்வு கண்டால் மட்டுமே கள்ளச்சாராய மரணங்களை தடுக்க முடியும்.

காவல்துறையும் “மாமூல்” வாங்கிக் கொண்டு கள்ளச்சாராய விற்பனையை அனுமதிப்பை நிறுத்த வேண்டும்.

– மரு.வீ.புகழேந்தி.