ஷங்கர் – ராம்சரண் கூட்டணியின் ‘கேம் சேஞ்சர்’ தோல்வியின் பின்னணி..?

ஷங்கர் – ராம்சரண் கூட்டணியின் ‘கேம் சேஞ்சர்’ தோல்வியின் பின்னணி..?

ஒரு படம் வெற்றி பெற்றால் கொண்டாடுவதும் அதே தருணத்தில் ஒரு படம் தோல்வி அடைந்தால் அதனை அனைவரும் கிழித்து தொங்க விடுவதும் சினிமாவில் இயல்பு. ஆனால் படத்தில் பணியாற்றிய ஒருவரே படத்தின் தோல்விக்கான காரணத்தை விவரிக்கும் போது அனைவரது கவனத்தையும் கவரத்தான் செய்கிறது.

”கேம் சேஞ்சர் படத்தில் இடம்பெற்ற எந்த பாடலிலும் வலுவான ஹூக் ஸ்டெப் இல்லை. இந்த படத்தில் இடம்பெற்ற ‘ஜரகண்டி’, ‘ரா மச்சா மச்சா’, ‘ஹைரானா’ போன்ற எந்த பாடலிலும் சரியான ஹூக் ஸ்டெப் இல்லை. இதற்கான பொறுப்பு நடன இயக்குநர் மற்றும் ஹீரோ இருவரிடமும் உள்ளது. நன்றாக நடன அசைவுகள் இருந்தால் தான் ஒளிப்பதிவாளர் அதனை நேர்த்தியாக படம் பிடிப்பார். கேம் சேஞ்சர் படத்தில் இந்த அம்சம் தடுமாறி இருக்கிறது. ஹூக் ஸ்டெப்கள் இல்லாததால் மக்கள் பாடலுடன் அதிகமாக தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் படமும் வெற்றி பெறவில்லை” என தன் மனதில் பட்டதை பளிச்சென்று பேசி இருக்கிறார் இப்படத்தின் இசையமைப்பாளரான தமன்.

இதனிடையே இப்படத்தை இயக்கிய ஷங்கர் இயக்கத்தில் உருவான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம்தான் எஸ். தமன் தன் திரையுலக பயணத்தை தொடங்கினார் என்பதும், குருவின் திரைப்படத்தையே விமர்சிக்கும் அளவிற்கு தன்னை வளர்த்துக் கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-கே.வி.ஆர்.கோபி