நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள வையப்பமலையில் இருந்து மல்லசமுத்திரம் செல்லும் வழியில் ஆத்துமேடு எனும் பகுதியில் அரசு டாஸ்மாக் மதுபான கடை ஒன்று உள்ளது. இந்த கடையின் அருகே மதுபான பார் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு அரசு அனுமதி நேரத்தை விட 24 மணி நேரமும் இந்த பார் செயல்பட்டு வருவதாகவும் இங்கேயே கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கிராம பகுதியான ஆத்துமேடு பகுதியில் அதிகாலை முதலே மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதால் வேலைக்கு செல்லும் ஆண்கள் வேலைக்கு செல்லாமல் மது அருந்தி விட்டு அங்கேயே படுத்துருங்கும் நிலையும் உள்ளது. இதுதொடர்பான காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதில், மது அருந்த வரும் நபர் தனது குழந்தையை தூக்கி கொண்டு சட்டவிரோத மதுபான பாருக்கு சென்று குழந்தையின் கண்முன்னே மது அருந்தி விட்டு செல்லும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் முழுவதுமே உள்ள பார்களில் 24 மணி நேரமும் மது விற்பனை செய்யப்படுவதால் தங்களது குடும்பம் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் பலமுறை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அப்பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.
– கௌரி சங்கர்