கர்ப்ப காலம் முடிவதற்குள் பிரசவம்? நடந்து கொண்டிருப்பது என்ன? இது மருத்துவத்துறை மோசடிகளில் ஒன்று.

பெண்களுக்குக் கர்ப்பம் தரித்தால் பத்து மாதங்களில் குழந்தை பிறக்கும் என்பது இயற்கையின் நியதி. கர்ப்பம் தரித்த, கரு உருவானதாகத் தெரிந்ததிலிருந்து 280நாட்கள் தொடங்கி பிரசவத்தை எதிர் பார்க்கலாம். உடல் வாகைப் பொறுத்து பத்து நாட்களுக்குள் முன்பின் குழந்தை பிறந்து விடும் என்பதுதான் இயற்கை. ஆனாலும் குறிப்பிட்ட காலத்தை, நாளைச் சரியாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக கடைசியாக மாதவிடாய் ஆன தேதியைக் குறித்து வைத்து மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்பது வழக்கம்.
ஆனால் புதுக்கோட்டை மாவட்டப் பகுதிகளில் குழந்தை பிறக்க சில வாரங்களுக்கு முன்னதாகவே மருத்துவத் துறையில் பணி புரிந்து வரும் செவிலியர்கள் கர்ப்பிணிகளை மருத்துவ மனைகளில் கொண்டு சென்று சேர்த்து அறுவைச் சிகிச்சையின் மூலம் குழந்தைப்பேறு நடக்க வைப்பதை தவறாமல் செய்து வருவது பல பெற்றோரை தொடர் நோயாளி ஆக்குவதுடன் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
இந்தச் சம்பவத்தில் பாதிக்கப் பட்ட விராலிமலை பகுதியைச் சேர்ந்த வெண்ணிலா என்ற பெண்மணி கூறுகையில் எனக்கு இது இரண்டாவது பிரசவமாகும். முதல் குழந்தை பிறந்தபோதும் அறுவைச் சிகிச்சை என்பதால் பத்தாண்டுகள் கடந்த கர்ப்பம் என்ற போதிலும் மீண்டும் அறுவைச் சிகிச்சையில்தான் பெற்றெடுக்க முடியும் என்பது எனக்கும் தெரியும். ஆனால் அதற்கும் உரிய காலம் வரவேண்டும். அதற்;குள்ளாகவே ஆம்புலன்சில் ஏற்றிக் கொண்டு சென்று எங்களைப் படுத்திய பாடுதான் வாய்திறக்க வைத்திருக்கிறது.
நான் இருக்கும் பகுதி புதுக்கோட்டை மாவட்டம் சித்தாம்பூர் ஆகும். எங்களுக்கு ஆரம்பசுகாதார நிலையம் திருச்சி அருகில் உள்ள ஆவூரில் உள்ளது. எங்களை அங்குள்ள செவிலியர்களும் மருத்துவர்களும் நன்றாக பார்த்துக் கொள்கிறார்கள் என்ற நம்பிக்கையில்தான் இன்றளவும் இருக்கிறோம். அதனால் செவ்வாய்க் கிழமைகள் தோறும் சென்று பரிசோதனைகள் செய்து கொண்டேன். மாதம் ஒரு முறை திருச்சி அரசு மருத்துவ மனையிலும் சோதித்துக் கொள்வேன். குழந்தை நன்றாக இருக்கிறது என்றுதான் சொல்லி வந்தார்கள். இரத்த அழுத்தம் பார்க்கும் கருவியும் ஒன்றை வாங்க வைத்தார்கள். அப்போதைக்கப்போது சோதித்துக் கொள்வதற்குப் பயன் பட்டது. இரத்த அழுத்தம் நார்மலாகத்தான் இருந்தது.
34மாதங்கள் கடந்த நிலையில் செவிலியர் வியாகுலம் என்னை திருச்சி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு சோதித்த மருத்துவர்கள் ஒன்றும் பிரச்சினை இல்லை. 37வாரங்கள் கடந்து வாருங்கள் என்று அனுப்பி வைத்தனர். திரும்பி வந்த பிறகு மீண்டும் என்னைப் பார்த்த வியாகுலம் கால் வீங்கியிருக்கிறது. இரத்த அழுத்தம் அதிகம் இருக்கிறது. உடனே நீங்கள் திருச்சி மருத்துவ மனைக்குச் செல்ல வேண்டும் என்று சொல்லி ஆம்புலன்சையும் வரவரழைத்து கட்டாயப் படுத்தி அனுப்பி விட்டனர்.
அங்கு மீண்டும் பரிசோதித்த மருத்துவர்கள் இப்போதைக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை என்றனர். செவிலியர் சொன்னதைச் சொன்னவுடன் அங்கேயே தங்க வைத்தனர். இடமே இல்லாமல் நான் கொஞ்சம் குண்டாகவும் இருப்பதால் மிகவும் சிரமப் பட்டேன். அதன் பிறகு என்ன நடந்ததென்றே தெரியவில்லை. ஏற்கனவே எனக்கு பிரசவ தேதி குறிப்பிட்டுக் கொடுத்தது ஏப்ரல் 24ஆம் தேதியாகும். ஆனால் மார்ச் 23ஆம் தேதியே பிரசவத்திற்குத் தயார் படுத்தியிருக்கிறார்கள்.
எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இருக்கும்போதே எனது குழந்தை எடைகுறைவாக இருக்கிறது என்றும் அது வளர்ச்சியடைய ஊசி போட வேண்டும் என்றும் சொன்னார்கள். மெல்ல வளரட்டும். இன்னும் ஒரு மாதகாலம் இருக்கிறது. அதற்குள் வளர்ந்துவிடும் எடையும் கூடும் என்று சொன்னேன். ஆனாலும் நான் சொல்வதைக் கேட்டுக் கொள்ளாமல் அந்த ஊசிகளை எனக்குப் போட்டார்கள். இரவு நேரத்தில் போட்டார்கள். விடிகாலை நேரத்தில் எனக்கு மார்பகம் ஒரு பக்கம் வீங்கி கல்லுப்போல ஆகி விட்டது. காய்ச்சலும் வந்து விட்டது. மருத்துவர்களிடம் சொன்னேன். பதறிப்போய் அவர்கள் சோதித்துக் கொண்டிருந்தபோதே இன்னொரு மார்பகமும் அதுபோல் ஆனதுடன் எனது உடல்நிலையும் மிகவும் சோர்ந்து என்ன நடக்கிறது என்றே தெரியாத அளவுக்குப் போய் விட்டது.
அங்கிருந்த மருத்துவர்கள் உடனே அவசர அவசரமாக ஆலோசனை செய்து ஆபரேசன் செய்து குழந்தையை எடுத்து காப்பாற்றி விட்டார்கள். ஆனால் அதன் பிறகும் 15நாட்கள் நான் ஒரு வார்டிலும் குழந்தை ஒரு வார்டிலுமாக இருந்து சிகிச்சை பெற வேண்டிய அவலம் ஆகி விட்டது. எனது முதல் பையனை ஊரிலும் விட்டு விட முடியாமல் மருத்துவ மனையிலும் வைத்துக் கொள்ள முடியாமல் எங்களது தேவைகளையும் பார்த்துக் கொள்ள என் கணவர் பட்டபாடு அதைவிடக் கொடுமையானது. அப்போதும்கூட மார்பகத்தில் இருந்து பால் கறக்க ஒரு மெசின் 4500-ரூபாய்க்கு வாங்க வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்யப் பட்டு அதையும் வாங்கினோம்.
கிட்டத்தட்ட 20நாட்கள் மருத்துவ மனையில் இருந்து வீட்டுக்கு வந்த பிறகுதான் குழந்தையும் நானும் நன்றாக இருக்கிறோம். இதற்கிடையில் எனது உயிரைக் காப்பாற்ற ஊசி போடுவதற்கு நரம்பு கிடைக்காமல் கழுத்தில் உள்ள ஒரு நரம்பைக் கண்டு பிடித்து அதன்மூலம்தான் மருந்தைச் செலுத்தியிருக்கிறார்கள். அது மருத்துவ மனையில் இருந்தவரை அப்படியே இருந்தது. அதனால் பட்ட பாடு இன்னும் அதிகம். 
இந்த அளவுக்கு நான் பாதிக்கப் பட்டதற்கு செவிலியர் வியாகுலம் மட்டுமல்ல ஆவூர் மருத்துவ மனை மருத்துவர்களும்தான் காரணம். என்னை மட்டுமல்ல இப்போதெல்லாம் இந்தப் பகுதியில் உள்ள கர்ப்பிணிப் பெண்களை எல்லாம் இதுபோலவே குழந்தைப் பேறு காலத்திற்கு முன்பே மருத்துவ மனையில் கொண்டு போய்ச் சேர்த்து அறுவைச் சிகிச்சை செய்து வருகிறார்கள். அதனால் ஏராளமான தாய்மார்களும் குழந்தைகளும் ஆரோக்கிய இழப்புக்கு ஆளாகிறார்கள். நான் பட்ட சிரமங்களை இனி எந்தப் பெண்ணும் படக் கூடாது என்பதற்காகத்தான் இதைச் சொல்கிறேன் என்றார் வேதனையோடு. 
பொதுமக்களில் ஒருவராக வெண்ணிலா கூறுவது ஒரு புறம் இருக்க கறம்பக்குடியைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் புதுக்கோட்டை இராணியார் அரசு மகப்பேறு மருத்துவ மனையில் பணி புரிந்து வந்த அவர் கர்ப்பிணியாக இருந்தபோது இங்குள்ள மருத்துவர்கள்தான் தக்க ஆலோசனையும் வழங்கி மருத்துவமும் செய்திருக்கிறார்கள். அவருக்கு வயிற்றில் இருந்தது இரட்டைக்குழந்தைகள். இதுவும் மருத்துவர்கள் அனைவருக்கும் தெரியும்.
பிரசவ நேரத்தில் திருச்சிக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். குறிப்பிட்ட அந்த மருத்துவர் புதுக்கோட்டையிலேயே கொண்டு சென்று சேர்த்து விடுங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். இந்த மருத்துவ மனையில் செய்த சிகிச்சையில் தாய் இறந்து விட்டார். சில நாட்களில் இரட்டைக் குழந்தைகளில் ஒன்று இறந்து விட்டது. இது மருத்துவத் துறையில் மிகப் பெரிய சவாலாகவும் கேள்விக்குறியாகவும் இருந்தது. ஆனாலும் இறந்தது மருத்துவர். சிகிச்சை செய்தவர்களும் அரசு மருத்துவர்கள். இழப்பு குடும்பத்திற்கு. இதே நிலைதான் வெண்ணிலாவுக்கு நேர்ந்திருக்கிறது. ஆனால் காப்பாற்றப் பட்டு விட்டார் என்பதைத் தவிர மருத்து முறைகள் ஒன்றாகத்தான் இருந்திருக்கிறது.
இந்தச் சம்பவங்கள் குறித்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மற்றும் இராணியார் அரசு மருத்துவ மனையின் பொறுப்பு தலைமை மருத்துவரான டாக்டர் கலைவாணியிடம் கேட்டபோது எதுவும் சொல்ல மறுத்து விட்டார்.
இந்தப் பிரச்சினைகள் ஏதோ ஊர் பேர் தெரியாத சித்தாம்பூர் வெண்ணிலாவிற்கு மட்டுமல்லாமல் அரசு மருத்துவ மனையிலேயே பணி புரியும் மருத்துவரின் பிரசவத்திலும் நிகழ்ந்திருக்கிறது. அதைப்போல இன்னும் பலரும் புலம்பி வருகிறார்கள் என்பது ஒரு புறம் இருக்கட்டும். இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மாண்புமிகு.மா.சுப்பிரமணியன் பதில் சொல்வாரா?

– ம.மு.கண்ணன்.