உசிலம்பட்டி அருகே உத்தப்புரத்தில் கோவிலில் வழிபாடு நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்த நிலையில் அடுத்தடுத்து பொங்கல் வைக்க அனுமதி கோரி பட்டியலின மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உத்தப்புரம் கிராமத்தில் அமைந்துள்ள முத்தாலம்மன் கோவிலில் பட்டியலின மக்கள் வழிபாடு நடத்த கூடாது என எழுந்த பிரச்சனை காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக இந்த கோவில் திருவிழா நடைபெறாமல் இருந்தது.
இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளை இக்கோவிலில் பட்டியலின மக்கள் வழிபாடு செய்ய அளித்த அனுமதியின் அடிப்படையில் கோவில் திருவிழா நேற்றும் இன்றும் வெகுவிமர்சையாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது.,
இந்நிலையில்,
இன்று நண்பகல் வரை நீதிமன்ற உத்தரவு படி பட்டியலின மக்கள் கோவிலுக்குள் சென்று வழிபாடு செய்த சூழலிலில் நண்பகலுக்கு பின் வழிபாடு செய்வதோடு மட்டுமல்லாது பொங்கலும் வைப்போம் என பட்டியலின மக்கள் ஒன்றிணைந்து பொங்கல் பாணையுடன் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து,
பொங்கல் வைக்க அனுமதி வழங்க கோரி தீடீர் சாலை மறியலில் பட்டியலின மக்கள் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பான சூழல் உருவானது.
இந்நிலையில் பாதுகாப்பு பணியில் இருந்த தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையிலான போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவு படி வழிபாடு செய்து கொள்ளும்படியும், கூடுதலாக பொங்கல் வைத்து பூஜை செய்ய நீதிமன்றம் மூலமே உரிய அனுமதி பெற்று வருமாறும், இதனிடையே உரிய அனுமதியின்றி பொங்கல் வைக்க அனுமதி இல்லை என, அறிவுறுத்தியதன் அடிப்படையில் சாலை மறியல் கைவிடப்பட்டது.
வழிபட அனுமதி கோரி நீதிமன்றத்தில் அனுமதி பெற்று வந்த பட்டியலின மக்கள் பொங்கல் வைக்க அனுமதி கோரி திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
– நா.ரவிச்சந்திரன்