புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலை மற்றும் அன்னவாசல் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகள் கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கின்றன. நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து இந்த இரண்டு சட்டமன்ற தொகுதி மக்களுக்கும் செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன. அது குறித்து கேள்விகள் எழுப்பிய போது கடந்த வாரம் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி எனது கரூர் நாடாளுமன்ற தொகுதிகளில் மற்ற பகுதிகள் மற்றும் சட்டமன்ற தொகுதிகளுக்கு செய்ததை விட புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் விராலிமலை இலுப்பூர் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கும் நிறையவே செய்திருக்கிறேன். இன்னும் நிறைய செய்ய காத்திருக்கிறேன் அதற்கான திட்டங்களையும் வகுத்திருக்கிறேன் என்றார்.
இந்நிலையில் விராலிமலை சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான டாக்டர் சி. விஜயபாஸ்கர் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகில் உள்ள வளநாடு கிராமத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில் கரூர் எம்பி ஜோதிமணி வெறுமனே வெற்றி விளம்பரம் தேடுபவராக இருக்கிறார் நாட்டு மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்றார். மேலும் அவர் பேசுகையில் ..
இன்னும் ஏழு அமாவாசை தான் இருக்கு நம்ம ஆட்சிக்கு வர
அரசியல் மாற்றம் என்பது மூன்றே மாதத்தில் ஏற்படும் அப்போது அண்ணன் எடப்பாடியார் ஆட்சிக்க்கு வருவார் வந்த பிறகு நிறுத்திய திட்டங்கள் எல்லாம் மீண்டும் கொண்டு வரப்படும்
திமுககாரன் ஓட்டு கேட்க வந்தால் 36000 ரூ எப்போ தருவீங்கன்னு கேளுங்க
“விடியா மாடல் முதல்வர் ஸ்டாலின் நமது ஆட்சியில் கொடுத்த அனைத்து முத்தான திட்டத்தையும் முடித்து வைத்தார். இவருக்கா ? உங்கள் ஓட்டு என சிந்தித்து வாக்களியுங்கள்.
படுத்து கொண்டே தானும் ஜெயித்து 200 தொகுதிகளுக்கும் மேல் வென்றெடுத்தவர் புரட்சி தலைவர் எம்ஜிஆர்.
அவரை தொடர்ந்து பல மருத்துவ கல்லூரிகளை திறந்து வைத்து அனைவரையும் எம்பிபிஎஸ் ஆக செய்து அழகு பார்த்தவர் எடப்பாடியார். மேகம் கருக்கும் சூரியன் மறைக்கும் இலை தளிர்க்கும் நமது ஆட்சி வர வேண்டும் என மக்கள் எதிர்பார்கிறார்கள். அடுத்த மே மாதம் ஆட்சி அமையும் இதே மேடையில் நாம் வேற லெவலில் உட்கார்ந்திருப்போம். இன்னும் 10 மாதத்தில் அதிமுக ஆட்சி அமைக்கும் இது உறுதி.அம்மா அரை பவுன் தங்கம் கொடுத்தார்கள் எடப்பாடியார் ஒரு பவுன் கொடுத்தார்கள் ஸ்டாலின் என்ன கொடுத்தார்?.. மகளிர் தொகை பலருக்கு கிடைக்கவில்லை நாம் வந்தவுடன் சேர்த்து கொடுப்போம். கரூர் தொகுதிக்குட்பட்ட இந்த மணப்பாறை தொகுதி எம்பி ஜோதிமணி என்ன செய்தார் வெறும் விளம்பரத்தை மட்டும் விரும்புபவர் தான் எம்பி ஜோதிமணி வாக்குக்கு நன்றி செலுத்த கூட அவர் வரவில்லை .
திருச்சி மாவட்டத்தில் இரண்டு அமைச்சர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டு அமைச்சர்கள் இருந்து என்ன பயன்? தாலிக்கு தங்கம் திட்டம் ரத்து இலவச மடிக்கணினி திட்டம் ரத்து இலவச ஆடுமாடுகள் திட்டம் ரத்து அம்மா உணவகங்கள் செயல்படுவதே இல்லை காவேரி குண்டாறு வைகை திட்டத்தை நிறுத்தி வைத்து அழகு பார்க்கின்றனர் எடப்பாடியார் ஆட்சி அமைந்ததும் அந்தத் திட்டம் நிறைவேறும் மணப்பாறைக்கு ஆறும் நீரும் வந்து சேரும் இது உறுதி சாகா வரம் பெற்ற கட்சி இரட்டை இலை சாகா வரம் பெற்ற சின்னம் இரட்டை இலை சின்னம் எனவே அனைவரும் உங்கள் பொன்னான வாக்குகளை இரட்டை இலைக்கு செலுத்துங்கள் என கூறினார்” தொடர்ந்து பொதுமக்களுக்கு தையல் இயந்திரம், சலவை இயந்திரம், நிதி உதவி, வேட்டி சேலை என பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார். இந்த கூட்டத்தில் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் எம்பி ப.குமார், மணப்பாறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகர், முன்னாள் சட்டமன்ற உறூப்பினர்கள் மாவட்ட நிர்வாகிகள் உட்பட பல அதிமுக நிர்வாகிகள் பெண்கள் கலந்து கொண்டனர்.
- ம.மு.கண்ணன்