தமிழகத்தில் அடுத்து ஆட்சிக்கு வரப்போவது யார் என்பதை இப்போதே ஆளாளுக்கு மேடைபோட்டுப் பேசத் தொடங்கி விட்டார்கள். அனைத்துக் கட்சி நிகழ்ச்சிகளிலும் தாங்கள்தான் 2026ஆம் ஆண்டின் தமிழ்நாட்டின் முதல்வர் என்று பேசுவதுடன் தங்களது தொண்டர்களையும் நம்ப வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் கூட்டணிக் கட்சிகள் வேறு. ஆளும் கட்சிக் கூட்டணியிலும் சரி எதிர்க்கட்சிக் கூட்டணியிலும் சரி ஆரூடத்திற்கு ஒன்றும் குறைவில்லை. அதற்கான அரசியல் கணக்குகளை எடுத்து விடுவதிலும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்ற போதிலும் குறிப்பாக அதிமுக சார்பில் பேசும்போதுகூட வெற்றி பெறப் போவது திமுகதான் என்றாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளக் கூடாது என்ற அளவில்தான் அறிக்கைப் போர் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் நடப்பது என்ன?
அண்மைக் காலத்தில் கறம்பக்குடி ஒன்றியப் பெருந்தலைவராக இருந்தவர் மாலா ராஜேந்திரதுரை. இவர் இந்தப் பொறுப்புக்கு வரத் தலைப் பட்டதிலிருந்து தனது ஒன்றியப் பெருந்தலைவர் பணியை நிறைவு செய்யும்வரை பட்ட பாடு சொல்லி மாளாது. அவருக்கு எதிராக நின்றவர்கள் ஒன்றியப் பொறுப்பில் இருந்து மாவட்டப் பொறுப்பாளர்கள் வரை பட்டியல் நீள்கிறது. அவர் பணியில் இருந்தபோது கவுரவத்திற்காக எடுத்துப் பார்த்த காண்ட்ராக்ட் பணி நிறைவு செய்தும் அதற்குரிய பில் தொகை பாஸ் ஆகாமல் பார்த்துக் கொள்கிறார்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களும் ஒன்றிய அதிகாரிகளும். அவருக்கு எதிராக அரசுத்துறை அதிகாரிகளும் ஆளும் கட்சியினருமே செயல் படுவதைப் பார்த்து இருவண்ணக்கரை வேட்டியைக் கட்டிய தொண்டர்கள் ரத்தக் கண்ணீர் வடிக்கிறார்கள்.
அவர் பெரும்பான்மையாக இருந்தாலும் கட்சியில் பல கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார். இன்றைக்கும் அந்த பில்லுக்காக மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனுமேல் மனுவாக பொது மக்களைப் போல் கொடுத்துக் கொண்டிருக்கிறார். தடையாக இருப்பது என்னவென்று இன்றுவரை புரியவில்லை.
அடுத்த விசயத்துக்கு வருவோம். புதுக்கோட்டை மாவட்டத்தில் திமுக மாவட்டச் செயலாளர் கே.கே.செல்லப்பாண்டியனுக்கு எதிராக அதே கட்சிக்குள் தனி அணிகள் ரகசியமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. மாநகரத்தில் மாநகரப் பொறுப்பாளருக்கு எதிரான அணி தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இதெல்லாம் கட்சித் தலைமை வரை சென்றும் நடவடிக்கை இல்லை என்ற ஆதங்கங்கள் கட்சி நிர்வாகிகளிடம் உள்ளது. இந்த நிலையில் தான் (10.06.2025) சுகாதாரத்துறை அமைச்சர் மா.சு. புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரியில் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட நிலையில் புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் அன்னவாசல் திமுக ஒன்றியச் செயலாளர் சந்திரன் ஏற்பாட்டில் புதுக்கோட்டை நகரில் உள்ள ஒரு தனியார் விடுதியில் வடக்கு மாவட்டச் செயலாளர் செல்லப்பாண்டியனுக்கு எதிராக ஒன்றிய செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் விராலிமலை ஒன்றியச் செயலாளர்கள் சத்தியசீலன், ஐயப்பன், இளங்குமரன், அன்னவாசல் ஒன்றியச் செயலாளர்கள் சந்திரன்(இவருக்கு செய்தியாளர்கள் யார் என்றே தெரியாது.) ஆர்.ஆர்.எஸ்.மாரிமுத்து(இவர் செய்த குறைகளைக் களைய தமிழ்நாடு பிற்படுத்தப் பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தேவைப் படுகிறார் என்றபோது அவரை வைத்து மாவட்டக் கவுன்சிலர் இடைத்தேர்தல் மட்டுமல்லாது நாடாளுமன்றத் தேர்தலையும் நடத்த வேண்டிய அவசியம் திமுகவிற்கு ஏற்பட்டது. அது வெற்றிகரமாகவும் முடிந்தது.) குன்றாண்டார்கோயில் ஒன்றியச் செயலாளர்கள் சேட்டு, வெங்கடாசலம் (3பேரில் 2 பேர் வருகை), கந்தர்வக்கோட்டை ஒன்றிய செயலாளர்களில் பரமசிவம்,(மதிமுகவிற்குச் சென்று திரும்பியவர்) தமிழய்யா, கறம்பக்குடி வடக்கு ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கிருஷ்ணன், புதுக்கோட்டை ராமகிருஷ்ணன் ஆகிய 11 ஒன்றிய செயலாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் உள்ள 3 ஒன்றியச் செயலாளர்களில் கறம்பக்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் பாஞ்சாலன் கூட்டத்திற்கு வருவதாகக் கூறியவர் கடைசி நேரத்தில் கலந்து கொள்ளவில்லை. அது உறவுப் பாசம் என்று சொல்லப் பட்டது.
மற்றொரு ஒன்றிய செயலாளரான சாமிநாதன் ஊரில் இல்லை என்பதால் கலந்து கொள்ளவில்லை. ஆனால் கட்சித் தலைமை மட்டுமல்ல யார் போன் செய்தாலும் தொடர்பு எல்லைக்குள்தான் இருப்பார். மீதமுள்ள ஒரு ஒன்றியச் செயலாளர் சண்முகம் மட்டும் வர விரும்பவில்லை.
ஆளும் திமுக புதுக்கோட்டை வடக்கு மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியச் செயலாளர்களில் 11 ஒன்றிய செயலாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் செல்லப்பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளை மதிப்பதில்லை, தன்னிச்சையாக முடிவெடுக்கிறார். அரசு ஒப்பந்தங்களையும் அவர் விரும்பியவருக்கே கொடுக்கிறார். அதே போல மேலும் உள்ள கட்சி பொறுப்பாளர்களை ஒன்றியச் செயலாளர்களிடம் கேட்காமல் அவருக்கு வேண்டிய நபர்களுக்கே பொறுப்புகளைக் கொடுத்து கட்சிக்குள் புதிய தனி அணியை உருவாக்குகிறார்.
மேலும் அண்மையில் அறிவிக்கப் பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில் 482-அங்கன்வாடிப் பணியிடங்கள் உள்ளிட்ட பணிகளுக்குக் கட்சிக்காரர்களிடம் கேட்காமலும் தகுதியானவர்கள் இல்லாதவர்களுக்குப் பணி வழங்கக் கூறியுள்ளார். இதனால் வரும் தேர்தலில் பாதிப்பு ஏற்படுத்தும். இவரது இந்தச் செயல்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று மாவட்டச் செயலாளர் செல்லப்பாண்டியனைச் சந்தித்து கோரிக்கை வைப்பது அப்படியும் மாறவில்லை என்றால் கட்சித் தலைவரையும் துணை முதலமைச்சரையும் நேரில் சந்தித்து முறையிடுவது எனத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
இதற்காக மாவட்டச் செயலாளரைச் சந்திக்கத் தயாராகி வருகின்றனர். ஆளுங்கட்சி மாவட்டச் செயலாளருக்கு எதிராக ஒட்டு மொத்த ஒன்றியச் செயலாளர்களும் ஒன்றாகப் போர்க்கொடி தூக்கி ரகசிய ஆலோசனைக் கூட்டம் நடத்தி இருப்பது புதுக்கோட்டை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் செய்தி பரபரப்பாக சோசியல் மீடியாவில் வெளியான நிலையில் கீரனூரில் அவரது வீட்டில் இருந்த மாவட்டச் செயலாளர் கே.கே.செல்லப்பாண்டியனை ஒன்றியச் செயலாளர்கள் சந்திரன், மாரிமுத்து, சத்தியசீலன், பாஞ்சாலன், பரமசிவம் உள்பட ஒன்றியச் யெலாளர்கள் சந்தித்த போது, ‘மாரிமுத்து, சத்தியசீலன் ஆகியோரை வெளியே போங்கள் என்னை பார்க்க ஏன் வந்தீங்க..’ என்று கோபமாக பேசியவர், ‘எனக்கு எதிராக எப்படி கூட்டம் போடலாம்..’ என்று ஒன்றியச் செயலாளர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து பேசும் போது, ‘உங்களை எல்லாம் மாற்றச் சொல்லி தலைமை சொன்னது. நான் தான் மாற்றாமல் வைத்திருக்கிறேன்..’ என்ற போது காரசாரமான வாதம் நடந்துள்ளது. ‘இனிமேல் என்னைப் பார்க்க கட்சி அலுவலகம் தான் வரனும்..’ என்று கடிந்துள்ளார். இதனையடுத்து ஒன்றியச் செயலாளர்கள் மீண்டும் கட்சி அலுவலகத்தில் மாவட்டச் செயலாளரை சந்திப்பது அதன் பிறகு மீண்டும் ஒரு கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தி கட்சித் தலைமையை சந்திப்பது என்று முடிவெடுத்துள்ளனர். தேர்தல் நெருங்கும் நேரத்தில் உள்கட்சி பூசலில் புதுக்கோட்டை சிக்கித் தவிப்பதால் உடன்பிறப்புகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் செல்லப்பாண்டியனின் கருத்தறிய முயன்றபோது அவர் மட்டுமல்ல, அவரது உதவியாளர்களும் தொலைபேசியை எடுக்க மறுக்கிறார்கள்.
கட்சிப் பதவி, கட்சிப் பணிகள் என்பதை எல்லாம் தாண்டி பொதுமக்களுக்காக உழைக்க வந்திருக்கிறோம் என்பதை ஆளும் கட்சிப் பொறுப்பாளர்கள் மறந்ததால்தான் இன்றைக்கும் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் சாகவில்லை உயிரோடு இருக்கிறார்கள் என்று நம்பிக் கொண்டிருக்கும் நிலையில் ஆள்வது யார்? யாரால் ஆண்டு கொண்டிருக்கிறோம் என்பதை மறந்த நிலையில் ஆளும் கட்சியான இருவண்ணக் கரைவேட்;டி கட்டியவர்களைத்தான் தங்களது ஆட்சியாளர்களாகக் கருதிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது வாக்குகள் யாருக்கு என்பதை அறிந்தால் அடுத்த 2026 சட்ட மன்றப் பொதுத் தேர்தல் யாருக்கானது என்பதை அறிந்து விடலாம்..
அவர்களைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாநகராட்சியில் எத்தனை கவுன்சிலர்கள் திமுகவிற்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பதை அடுத்த இதழில் காண்போம்.
- ம.மு.கண்ணன்