திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளியில் பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 வகுப்பில் படிக்கும் சில மாணவிகளும் சேர்ந்து இன்ஸ்டாகிராமில் குழு ஆரம்பித்து சமூக வலைத்தளங்களில் தாங்கள் தான் கெத்து என்ற பாணியில் பதிவுகளை போட்டு வந்துள்ளனர்.
அதே நேரம் திருப்பூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கணபதிபாளையம் அரசு பள்ளி மாணவிகளும் இதுபோலவே குழு சேர்ந்து இன்ஸ்டாகிராமில் பதிவுகளை போட்டு வந்துள்ளனர். இதில் இரு பள்ளிகளுக்கும் இடையில் நான் பெரிய ஆளா?? நீ பெரிய ஆளா என்ற பாணியில் பதிவுகள் போட்டு வந்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் இந்த சமூக வலைத்தள சண்டை முற்றியதில், கோபமடைந்த ஜெய்வாபாய் பள்ளி மாணவிகள் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் நேற்று பஸ் ஏறி 10 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து கணபதி பாளையம் பள்ளி முன் சென்று அந்த மாணவிகளிடம் ரோட்டிலேயே வம்பிழுத்தனர்.
இந்த சண்டை பெரிதானதில் ரோடே போர்க்கோலமானது. இளம் வயது மாணவிகள் சிலர் முகத்தை மறைத்துக் கொண்டும், பலர் முகத்தை மறைக்காமலும் ரோட்டிலேயே தகராறில் ஈடுபட அந்த பகுதியே போர்க்கோலம் ஆகி உள்ளது.
ரோடு முழுக்க மாணவிகளின் அடிதடியை பார்த்து பொதுமக்கள் திகைத்துப்போக ஒரு சிலர் மட்டும் அதை தடுக்க முற்பட்டுள்ளனர். தடுக்க முற்பட்டவர்களுக்கும் டோஸ் விட்ட அந்த மாணவிகள் ரோட்டில் ஓடி ஓடி சண்டையிட்டுள்ளனர்.
இது பற்றி பள்ளி நிர்வாகங்கள், காவல்துறைக்கும் தகவல் வர, அனைவரும் சேர்ந்து தகராறில் ஈடுபட்ட மாணவிகளின் பெற்றோரை வரவழைத்து பேசி உள்ளனர்.
மேலும் இளம் மாணவிகள் என்பதால் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் குழு கூட்டத்தில் வைத்து பேசி முடிவு செய்து கொள்ளலாம் என கூறிய நிலையில் வரும் வெள்ளிக்கிழமை இதற்கான கூட்டம் நடக்க உள்ளது. மாணவிகள் தாக்கிக்கொள்ளும் இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- பல்லடம் சுரேஷ்