ஆளுங்கட்சிக்கு எதிராக… பெப்சியின் தலைவர் ஆர்.கே.செல்வமணி?

திரையுலகில் தயாரிப்பாளர்களுக்கும், அனுபவமும் பயிற்சியும் பெற்ற திரைப்பட தொழிலாளர்களைக் கொண்டுள்ள சங்கமான பெப்சிக்கும் இடையே நாளுக்கு நாள் மோதல் அதிகரித்து வருகிறது.

தயாரிப்பாளர்களுக்கும் பெப்சிக்கும் இடையே இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பேச்சு வார்த்தை மூலம் சம்பள உயர்வு சுமூகமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கம் ( சிறிய முதலீட்டில் படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்களின் நலன்களை மனதில் கொண்டு) பெப்ஸியின் நெருக்கடிக்கு ஆளாகாமல் சுதந்திரமாக முடிவெடுக்க தீர்மானித்தது. இதனால் ஆத்திரமடைந்த  ஆர் கே செல்வமணியின் தலைமையிலான பெப்சி சங்கத்தினர், தயாரிப்பாளருக்கு ஒத்துழைப்பு வழங்காத நிலையை கடைப்பிடித்து வருகிறார்கள்.

இவர்கள் வைக்கும் பிரதான கோரிக்கை என்னவென்றால்.. 300 கோடி ரூபாய் பொருட்செலவில் தயாராகும் திரைப்படங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு  தற்போது பெறுவதை விட ஒன்பது மடங்கு கூடுதலாக ஊதியம் வழங்க வேண்டும் என்றும்,  தொழிலாளர்களுக்காக முந்தைய மறைந்த கலைஞர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு ஒதுக்கிய நிலத்தின்( பழையனூர்)  குத்தகை உரிமையை எந்த நிபந்தனையும் விதிக்காமல் புதுப்பித்து தரவேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறது.

இதனை தயாரிப்பாளர் சங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை. முன்னணி நட்சத்திர நடிகர்களின் படங்களுக்கு மட்டுமே பெப்சி தொழிலாளர்கள் பணியாற்றுவார்கள் என்றால்.. அனைத்து தொழிலாளர்களும் முன்னணி நட்சத்திர நடிகர்களின் படங்களில் பணியாற்றவே ஆர்வம் காட்டுவார்கள் என்றும், ஏனைய திரைப்படங்களில் பணியாற்ற விரும்ப மாட்டார்கள் என்றும் கூறி இந்த கோரிக்கையை ஏற்க தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருவதுடன்.. பெப்ஸியின் தொழிலாளர்களிடத்தில் இது தொடர்பான கருத்து கேட்பினை நடத்தி தனியாக சங்கம் ஒன்றினை தொடங்கவும் திட்டமிட்டார்கள்.

நிலைமை விபரீதமாவதை சற்று தாமதமாக உணர்ந்த ஆர் கே செல்வமணி மற்றும் அவரது ஜால்ராக்கள்… தயாரிப்பாளர் சங்கத்துடனான பேச்சு வார்த்தையில் பங்கேற்க மாட்டோம் என்று நீதிமன்றத்திற்கு சென்றார்கள். இந்தத் தருணத்தில் தயாரிப்பாளர் சங்கம் தொடுத்த வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்.. ஓய்வு பெற்ற நீதியரசர் எம். கோவிந்தராஜ் அவர்களை மத்தியஸ்தராக  நியமித்திருக்கிறது.

மத்தியஸ்தராக ஒருவரை நியமிக்கும் போது திரைப்பட தயாரிப்பு பணிகளில் எந்த இடையூறும் ஏற்படுத்தக் கூடாது என தயாரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை வைக்க ..அதனை பெப்சி அமைப்பினர் எதிர்த்தனர்.  இதனால் நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான இருதரப்பு பேச்சு வார்த்தைக்கு பிறகு தான் பிரச்சனைக்கு  இடைக்கால உத்தரவு பிறப்பிக்க இயலும் என்று தெரிவித்துவிட்டார்.

இந்நிலையில் கடந்த வாரம் தமிழகத்திற்கு வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கலைத்துறை அணியில் இருக்கும் பெப்சி சிவா மூலமாக பெப்ஸியின் தலைவராக இருக்கும் ஆர் கே செல்வமணி சந்தித்தார். அப்போது தமிழகத்தில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி வெற்றி பெறுவதற்கான விசயங்கள் குறித்து ஆர்கே செல்வமணி பேசி இருக்கிறார்.

இந்த சந்திப்பிற்கு ஆர்.கே. செல்வமணி தன் வகிக்கும் பெப்சியின் தலைவர் என்ற பதவியை பயன்படுத்திதால் அவர் மீது பெப்சி தொழிலாளர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.

ஏற்கனவே பெப்சி அமைப்பு ஆளுங்கட்சியான திமுகவிற்கு எதிரான அமைப்பு என்ற பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஏனெனில் கலைஞர் நூற்றாண்டு விழாவிற்காக திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நான்கு கோடி ரூபாயை ஆர் கே செல்வமணியிடம் வழங்கியது. ஆனால் அந்த விழாவை நேர்த்தியாக உழைக்காமல்.. கடமைக்காக நடத்திக் காட்டி அனைவரின் அதிருப்தியையும் சம்பாதித்திருந்தார் ஆர்கே செல்வமணி.

இதனால் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கிய ஆளுங்கட்சி தரப்பு .. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மீது கோபக்கணையை வீசியது.  

இருப்பினும் தமிழ் திரையுலகினர் உச்ச நட்சத்திரமான விஜயின் பின்னால் ஓர் அணியாக திரண்டு விடக் கூடாது என்பதற்காக வேறு வழி இல்லாமல் திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் நெடுநாளைய கோரிக்கையான கேளிக்கை வரியை எட்டு சதவீதத்திலிருந்து நான்கு சதவீதமாக திமுக அரசு குறைத்து அரசாணையை வெளியிட்டது.  இதற்காக திரையுலகில் இருந்து பாராட்டு கிடைக்கும் என காத்திருந்த ஆளுங்கட்சி தரப்பிற்கு அதிர்ச்சி தான் கிடைத்தது.

இதன் பின்னணியில் பாஜகவின் ஆதரவாளராக தன்னை மாற்றிக் கொண்டிருக்கும் ஆர் கே செல்வமணி –  அதிமுகவின் தலைமை நிலைய பேச்சாளராக இருக்கும் இயக்குநர் சங்கத்தின் தலைவரான ஆர். வி. உதயகுமார், பாஜகவின் நிர்வாகியான இயக்குநர் சங்க பொறுப்பு வகிக்கும் பேரரசு ஆகியோர் உள்ளதாக ஆளுங்கட்சிக்கு ஆதரவான திரைப்பட தொழிலாளர்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

இதனால் பெப்சி அமைப்பில் இருக்கும் நடுநிலையான.. எந்த அரசியல் கட்சியும் சாராத.. சினிமாவை சினிமாவாக பார்க்கும் தொழிலாளர்கள் தான் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களின்  குரலை பெப்சி அமைப்போ தயாரிப்பாளர் சங்கமோ கேட்க தயாராக இல்லை என்பதுதான் யதார்த்தம்.

இருந்தாலும் ஒரு திரைப்படத்திற்கு தயாரிப்பாளர்கள் தான் மூல ஆதாரம் என்பதை தொழிலாளர்களும் உணர்ந்து இருக்கிறார்கள். ஆனால் அவர்களை வழிநடத்தி செல்லும் தற்போதைய தலைமையும் இதனை உணரவில்லை என்றாலும் விரைவில் உணர்த்தப்படுவார்கள் என்றும், அதன் பிறகு அவர்களே உணர்ந்து இப் பிரச்சனைக்கு தீர்வு காண்பார்கள் என்றும் ஆர்வமுடன் திரைப்பட தொழிலாளர்கள் காத்திருக்கிறார்கள்.

  • கே.ஆர்.கோபி