Save 20% off! Join our newsletter and get 20% off right away!

ஒரு ஓட்டு! உலக பிரபலம்!! பாஜக நிர்வாகி அபார சாதனை!!!

நடைபெற்று முடிந்த 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலுடன் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் திமுக அமோக வெற்றி பெற்று அனைத்து மாவட்டங்களிலும்  கோலோச்சியது. இரண்டாவது இடத்தை அதிமுக கைப்பற்றி இருந்தாலும், பல பகுதிகளில் சுயேட்சைகள் கை ஓங்கி இருந்தது.

குறிப்பாக கிராம பஞ்சாயத்துகளை பொருத்தவரை அனைத்து வேட்பாளர்களும் சுயேச்சை வேட்பாளர்களாகவே கருதப்படுகின்றனர்.

அந்த வகையில் கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குருடம்பாளையம் கிராம ஊராட்சியின்  ஒன்பதாவது வார்டு உறுப்பினருக்கான இடைத்தேர்தல்  நடைபெற்றது. அதில் அதிமுக, திமுக உட்பட  களத்தில் இருந்த ஆறு பேரும் சுயேட்சை சின்னத்திலேயே போட்டியிட்டனர்.

வாக்கு எண்ணிக்கை முடிவில் 387 வாக்குகள் பெற்ற திமுகவைச் சேர்ந்த அருள்ராஜ் வெற்றிபெற்ற நிலையில் அதிமுகவைச் சேர்ந்த ஜெயராஜ் 240 வாக்குகளுடன் தோல்வியை தழுவினார். இதேபோல் அதிமுகவைச் சேர்ந்த ஒருவரும் திமுகவைச் சேர்ந்த ஒருவரும் போட்டியிட்டு கணிசமான வாக்குகளைப் பெற்றனர். தேமுதிகவை சேர்ந்த ரவிக்குமார் என்பவர் இரண்டு வாக்குகளும் பாஜக இளைஞர் அணியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் ஒரு  வாக்கையும் பெற்றிருந்தனர்.

அந்த வார்டில் மொத்தம் 913 வாக்குகள் பதிவாகி இருந்த சூழலில் 3 வாக்குகள் செல்லாத வாக்குகளாக இருந்தது.

இதனிடையே ஒரு ஓட்டு மட்டுமே பெற்ற பாஜக வேட்பாளர் என செய்திகள் பரவத் துவங்கியது. ஊடகங்களில் செய்தி வெளியாகி பரபரப்பை கூட்டவே சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது *ஒரு ஓட்டு பாஜக* என்ற வாசகம். குறிப்பாக தேசிய அளவில் *ஒத்த ஓட்டு பாஜக* என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது. ஆனால் ஊடகங்களோ பாஜக வேட்பாளர் கார்த்திக்கின் குடும்பத்தில் ஐந்து பேர் இருந்தும் ஒரு ஓட்டு மட்டுமே பெற்றார் என கலாய்க்க துவங்கினர்.
இதனால் கடும் வேதனைக்கு உள்ளான வேட்பாளர் கார்த்திக், தான் நான்காவது வார்டு பகுதியில் வசித்து வருவதாகவும் தனது குடும்பத்தினரும் 4-வது வார்டு பகுதியிலேயே வசிப்பதால் 9வது வார்டில் வாக்களிக்க வாய்ப்பில்லை என்றும் விளக்கம் அளித்திருந்தார். மேலும் தான் சுயேச்சையாக கார் தினத்தில்தான் போட்டியிட்டேன் எனவும் பாஜகவையோ தாமரை சின்னத்தையோ எங்கும் பயன் படுத்தவில்லை என விளக்கமளித்த அவர், வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு பிரச்சாரத்தில் தான் ஈடுபடவில்லை எனவும் குடும்ப பிரச்சினை காரணமாக எங்குமே வாக்கு சேகரிக்க செல்லவில்லை எனவும் கூறினார். வார்டில் எந்த ஒரு தேர்தல் பணியும் செய்யாமல் ஒரு ஓட்டு பெற்றதையே தன் வெற்றியாக கருதுவதாகவும் தெரிவித்து பிரமிப்பை ஏற்படுத்தினார்.

இது ஒருபுறமிருக்க, ஒரு ஓட்டு பாஜக என்ற வாசகத்தை கையிலெடுத்த நெட்டிசன்கள் பாரதீய ஜனதா கட்சியை சரமாரியாக வறுத்து எடுக்க துவங்கினர். வெற்றி பெற்ற அருள்ராஜ் பெயர் ஊடகங்களில் பெரிதாக வரவில்லை. ஆனால் ஒரு ஓட்டு பெற்ற கார்த்திக் ஒரு மணி நேரத்தில் உலக அளவில் பிரபலமானார்.

அதன் காரணமாகவோ என்னவோ தாமரை சின்னத்தில் போட்டியிடுவதற்கு நிச்சயமாக கார்த்திக்கிற்கு வாய்ப்பு வழங்கப்படும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

 ஒரு தோல்வியே வெற்றிக்கு அறிகுறி என்பது மூத்தோர் வாக்கு. ஆனால், ஒரு ஓட்டு மட்டுமே பெற்று  படுதோல்வி கண்டு உலகளவில் பிரபலமாகி வெற்றி பெற்றுள்ளார் ஒரு பாஜக பிரமுகர் என்று அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர். ஆனால், குறும்புக்கார நெட்டிசன்களோ அந்த ஒரு ஓட்டு போட்ட புண்ணியவான் யாருங்க என்று கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.