தமிழகம் முழுவதும் குட்கா புகழ் என்றும் கூவத்தூர் நாயகன் என்றும் திமுகவினரால் அழைக்கப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரை குறிவைத்து ரெய்டு நடத்தப் பட்டதாகச் சொல்லப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவரும் தமிழக சுகாதாரத்துறையின் முன்னாள் அமைச்சருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் அக்டோபர் 18 காலை ஆறரை மணிமுதல் திடீர் ரெய்டு நடத்தப் பட்டதில் அதிமுகவினர் சற்று அரண்டுதான் போய் விட்டார்கள். ஆனால் சொந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இதெல்லாம் எங்கள் அண்ணனுக்கு தவிடு பொடி என்கிறார்கள்.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்று முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி ஆகியோர் வீடுகள் மற்றும் அவர்களுக்குச் சொந்தமான இடங்களில் கடந்த காலங்களில் ரெய்டுகள் நடத்தி பணம், நகைகள், டாலர்கள், ஆவணங்கள் என அள்ளிச்சென்றதோடு வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகின்றன.
ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் முதன் முதலில் முன்னாள் சுகாதார அமைச்சராக இருந்த டாக்டர் சி.விஜயபாஸ்கர் மீதுதான் கடும் நடவடிக்கையை திமுக அரசு எடுக்கும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப் பட்டதுடன் பரவலாகவும் பேசப்பட்டது. அப்போது கொரோனா உச்சத்தில் இருந்த காலக்கட்டம் என்பதால், மருத்துவ ஆலோசனைக் கமிட்டியில் உறுப்பினராக விஜயபாஸ்கர் சேர்க்கப் பட்டார். அப்போது அவரது ஆதரவாளர்கள் பலரும் அண்ணன் விஜயபாஸ்கர் இல்லாமல் திமுக அரசாங்கமே நடத்த முடியாது என்று பலவகையிலும், சமூக வலைதளங்களிலும் கருத்துப் பரிமாற்றம் செய்து வந்தனர்.
இப்போது கொரோனா சற்று குறைந்து காணப்படும் இந்த நேரத்தில் திடீரென்று தமிழகம் முழுவதும் சென்னை, காஞ்சிபுரம், திருச்சி என 43-இடங்களில் திடீர் ஆபரேசனாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
குறிப்பாக புதுக்கோட்டையில் அவரது பினாமிகள் என்றும் ஆதரவாளர்கள் என்றும் கருதப்பட்ட முன்னாள் நகர்மன்றத் துணைத் தலைவர் சேட்டு, சோத்துப்பாளை முருகேசன், உதவியாளர் அன்பானந்தம், நகரச் செயலாளர் பாஸ்கர் ஆகியோரின் வீடுகள், அவரால் வளர்ந்தவர்கள், சிலரது தொழிற்சாலைகள், என பல இடங்களிலும், இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கரின் வீடுகள், தந்தை வீடு, தம்பியின் வீடுகள், மதர் தெரசா கல்வி நிறுவனங்கள், குவாரிகள் என எதுவும் இந்த ரெய்டில் தப்பவில்லை. அனைத்து இடங்களிலும் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். இது புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமல்லாது தமிழகத்தையே உலுக்கி வரும் ரெய்டாகக் கருதப் பட்டது.
விஜயபாஸ்கர் மட்டுமல்லாது அவரது மனைவி டாக்டர் ரம்யா, மகள்கள் பெயர்களிலும் சொத்துகள் வாங்கிக் குவித்து வைக்கப் பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த ரெய்டின் பின்னணியில் உள்ள புகாரில் முதல் குற்றவாளியாக விஜயபாஸ்கரும் இரண்டாவது குற்றவாளியாக அவரது மனைவி டாக்டர் ரம்யாவும் இடம் பெற்றிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரெய்டு முடிந்தவுடன், ஐந்து கிலோ தங்கம், சில லட்சம் ரொக்கம், 4-கிலோ வெள்ளி என கைப்பற்றப் பட்டதாகச் சொல்லப்பட்டது. ஆனால் அதெல்லாம் தூசு என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.
தமிழகம் முழுவதும் விஜயபாஸ்கருக்குச் சொந்தமான இடங்களில் ஆய்வு நடத்தப் பட்டபோது அவருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர்களும் வந்து ரெய்டு நடந்த இடங்களில் ஆதரவாளர்களுடன் வந்து குழுமியிருந்தார்கள். அதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அவரது வீடு, மதர் தெரசா கல்வி நிறுவனங்களில் ரெய்டு நடந்தபோது அவரது கட்சிக்காரர்கள் பெருமளவில் திரண்டு விட்டனர். எஸ்.பி. நிஷா பார்த்திபன் நேரடியாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டார்.
அதே நேரத்தில் அவரது ஆதரவாளர்கள் வீடுகளில் நடந்த சோதனையின்போது இவர்களுமா சிக்கினார்கள்? ஆட்சியில் இருந்தபோது இவர்கள் ஆடிய ஆட்டம் என்ன என்று சாதாரண பொதுமக்களே கிண்டல் பேசுமளவிற்கு புதுக்கோட்டை கலகலத்து கிடந்தது. கடைசியில் மிகவும் சொற்பமாக கிடைத்ததாகச் சொல்லப் பட்டாலும், அவர் மீது வருமானத்திற்கு அதிகமாக 27-கோடி ரூபாய் அளவிற்கு சொத்து சேர்த்து விட்டார் என்பதுதான் புகாராம்.
ரெய்டு நடந்த அன்று கூடிய கூட்டத்தைவிட மறுநாள் அக்டோபர் 19 பகலில் விஜயபாஸ்கர் சென்னையில் இருந்து இலுப்பூருக்கு வந்து விட அவரை கட்சிக்காரர்கள் திரண்டு வந்து துக்கம் விசாரிப்பதைப் போல விசாரித்துக் கொண்டிருந்தார்கள்.
அவர்களில் ரத்தத்தின் ரத்தம் ஒருவரை ஓரம் கட்டினோம், அவர் சொன்னது இதுதான். எங்க அண்ணன் விஜயபாஸ்கரை அசைக்கக் கூட முடியாது. மத்திய மாநில அரசுகள் வேண்டுமென்றே திட்டமிட்டு குறி வைத்து ரெய்டு நடத்துகிறார்கள். ஏற்கனவே மத்திய நுண்ணறிவுப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையிலேயே ஒன்றுமில்லை என்று ஆகி விட்டது. இந்த ரெய்டெல்லாம் எம்மாத்திரம்?
அவரைப் போய் 27-கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக பொய் வழக்கு போட்டிருக்கிறார்கள். அவர் இந்த முறை விராலிமலை எம்எல்ஏ ஆவதற்குச் செய்த செலவே 200-கோடி இருக்கும். அவரது சொத்து மதிப்பே தெரியாதவர்கள் வெறும் 27-கோடி என்று கேவலப் படுத்துகிறார்கள். சொன்னாலும் பெரிய தொகையாகச் சொல்லியிருக்கலாம். ஆனால் வெறும் 27-கோடி என்பது எதை வைத்துச் சொன்னார்கள் என்று தெரியாது.
இதற்கெல்லாம் நாங்கள் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. எங்கள் முன்னாள் முதல்வர்கள் ஓபிஎஸ்சும், இபிஎஸ்சும் நேற்றே சொன்னது மாதிரி அக்டோபர் 17 அதிமுகவின் பொன்விழா கொண்டாட்டம் நடந்தது. அதன் எழுச்சியைக் காணச் சகிக்காத திமுக வேண்டுமென்றே விஜயபாஸ்கர் வீடு மட்டுமல்லாது மற்றவர்களையும் மிரட்ட வேண்டும் என்பதற்காக உறவினர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள் வீடுகளில் எல்லாம் ரெய்டு நடத்துகிறார்கள். யார் வீட்டிலும் எதுவும் எடுக்கவில்லை.
அதனால்தான் எங்கள் அண்ணன் விஜயபாஸ்கர் சொன்னார் மடியில் கணமில்லை வழியில் பயமில்லை என்று. நேற்று ரெய்டு நடத்தி பயமுறுத்தினார்கள். இன்று காலையில் எல்லா நாளிதழ்களிலும் முன்பக்கச் செய்தியே அதுதான். ஆனால் இன்று காலையில் தொண்டர்களைச் சந்தித்து ஆறுதல் சொல்லி விட்டு தொகுதிப்பக்கம் கிளம்பிப் போகிறார். மக்களின் குறைகளைக் கேட்கிறார். இதற்கெல்லாம் அஞ்சாத சிங்கம் எங்கள் அண்ணன் என்றார்.
அந்த ரத்தத்தின் ரத்தம் சொன்னது மாதிரியே மாலை ஆறுமணிக்கு செய்தியாளர்கள் சந்திப்பு என்று அறிவித்து விட்டு பின்னர் அதைத் தவிர்த்து விட்டார். ரெய்டு ஏற்படுத்தாத பரபரப்பை அவரது பத்திரிகையாளர் சந்திப்பு தவிர்ப்பானது இப்போது மாவட்ட அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Leave a Reply