கோவையில் குடும்பப் பிரச்சனையால் கணவனைப் பிரிந்து தனியே வாழ்ந்து வரும் தொழிலதிபர் மனைவியிடம் சமாதானம் பேசுவதாகக் கூறி, மனைவிக்கு தொழிலதிபர் பரிசளித்த நான்கரை சென்ட் நிலத்தை அபகரித்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சித் தலைவர் ஜான் பாண்டியன், தொழிலதிபரைக் கொல்ல தனது ஆட்களையும் அனுப்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் தீபக் அரோரா. வட மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், கோவை கணபதி அடுத்த மணியகாரம்பாளையம் பகுதியில் துருவ் என்டர்பிரைசஸ் என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். மேலும், அந்த நிறுவனத்திற்கு அருகிலேயே தனது மனைவியான பிரியா அரோராவின் பெயரில் சுமார் நான்கரை சென்ட் பரப்பளவிலான நிலத்தை வாங்கியுள்ளார்.
இதனிடையே கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியே வாழ்ந்து வந்த சூழலில், மனைவி பிரியா அரோரா கணவனை மிரட்டுவதற்காக தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் தலைவரான ஜான்பாண்டியனை அணுகியதாகக் கூறப்படுகிறது. அதன்பேரில், ஜான்பாண்டியன் அவரது ஆதரவாளர்கள் மூலம் சில மாதங்களுக்கு முன்பு தீபக் அரோராவைத் தொடர்பு கொண்டுள்ளார்.
தீபக் அரோராவை செல்போனில் அழைத்த அந்த நபர், ”தலைவர் உங்களைப் பார்க்க வேண்டும் என விரும்புகிறார். உடனடியாகப் புறப்பட்டு வாருங்கள்” எனவும் ”தலைவரைப் பற்றி தெரியுமில்ல” எனவும் கூறி மிரட்டியுள்ளார். அப்போது தீபக், தான் டெல்லியில் இருப்பதாகவும் உங்கள் தலைவர் யார் என்றே எனக்கு தெரியாது. அப்படியிருக்கையில் நான் எப்படி உடனடியாக அவரை சந்தித்துப் பேச வரமுடியும் என கூறவே, ஆவேசமாக இணைப்பைத் துண்டித்துள்ளார்.
பின்னர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக தீபக் அரோரா தனது மனைவியின் பெயரில் வாங்கி வைத்திருந்த நான்கரை சென்ட் நிலத்தை ஜான்பாண்டியன் பெயருக்கு கிரையம் செய்து விட்டதாகவும் அந்த இடத்தில் செயல்பட்டு வரும் தீபக் அரோராவின் குடோனை காலி செய்து தரவேண்டும் எனவும் அவரது ஆதரவாளர்கள் கூறியுள்ளனர். ஆனால், தீபக் அரோரா அந்த குடோனை காலி செய்யாததைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு அரிவாள், இரும்பு ராடு போன்ற ஆயுதங்களுடன் மணியகாரம்பாளையம் பகுதியிலுள்ள துருவ் என்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு சென்ற ஜான் பாண்டியனின் ஆதரவாளர்கள், தொழிலதிபர் தீபக் அரோராவை திடீரென தாக்கியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சத்தமிட்டபடியே சாலையில் ஓடவே, அப்பகுதியில் இருந்தவர்கள் தீபக் அரோராவை அக்கும்பலிடமிருந்து காப்பாற்றியதுடன் சம்பவம் தொடர்பாக சரவணம்பட்டி காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவலின் பேரில் விரைந்து சென்ற ஆய்வாளர் கந்தசாமி தலைமையிலான போலீஸார் அங்கு ஆயுதங்களுடன் ரகளையில் ஈடுபட்டிருந்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகளான ஜெயராஜ், சந்தோஷ், ஜெகன், மதன், கதிரவன், கருப்பசாமி உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர். பின்னர், அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஜான்பாண்டியனின் உத்தரவின் பேரிலேயே தாங்கள் இந்த செயலில் ஈடுபட்டதாகக் கூறியுள்ளனர்.
இதையடுத்து, ஜான்பாண்டியனையும் வழக்கில் சேர்த்த காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியதுடன் அவரை கைது செய்யும் முனைப்பிலும் ஈடுபட்ட சூழலில் வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் நீதிமன்றம் மூலம் ஜாமீன் பெற்றனர்.
இது ஒரு புறமிருக்க பாதிக்கப்பட்ட சஞ்சய் அரோராவின் மனைவி பிரியா, செய்தியாளர்களை சந்தித்து, தனது கணவரான தீபக் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தனது பெயரில் உள்ள சொத்துகளுக்கும் தனது கணவருக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை எனவும் சாதாரண வேலையில் இருந்தவரை தனது தந்தை மூலம் தான் தொழிலதிபராக மாற்றியதாகவும் அவருக்கு போதை பழக்கம் இருந்ததால்தான், தான் அவரை விட்டு தனியாக வாழ்ந்து வருவதாகவும் கூறியதுடன் நான்கரை சென்ட் நிலத்தை ஜான்பாண்டியனுக்கு நானே விற்பனை செய்தேன் எனவும் காவல்துறையினர் தனக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினார்.
ஆனால் உண்மையில், தனக்கும் பிரியா அரோராவிற்கும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ள நிலையில் காலப்போக்கில் பிரியாவின் நடவடிக்கையில் பல மாற்றங்கள் வந்ததாகவும் ஆண் நண்பர்களின் பழக்கம் அதிகம் காணப்பட்டதால் தங்களுக்கிடையே அடிக்கடி பிரச்சனை நிலவி வந்ததாகவும் கூறுகிறார் தீபக் அரோரா. கணவன் என்றும் பாராமல் தன்னை அடிப்பது, தகாத வார்த்தைகளால் பேசுவது என பிரியாவிடம் அத்துமீறல்கள் இருந்ததாகவும் பிரபல அரசியல் கட்சியைச் சேர்ந்த பிரமுகர் ஒருவருடன் அதிக நெருக்கத்துடன் பழகிய பிரியா தனக்கு தெரியாமல் சுமார் 51 லட்சம் ரூபாய் பணத்தை வழங்கியதாகவும் அதேபோல், வேறு ஒரு இளைஞருடனும் நெருக்கத்துடன் பழகி வந்ததாலேயே தான் தனித்து வாழ்வதாகவும் குமுறுகிறார்.
தொழிலதிபர் என்பதால் பணத்திற்கு பஞ்சமின்றி காணப்பட்ட தன்னை குறி வைத்தால் நல்ல வருவாய் கிடைக்கும் என்பதன் காரணமாக ஜான்பாண்டியனுடன் சேர்ந்து தன்னை பிரியா மிரட்டுவதாகவும் ஜான்பாண்டியனுடனும் அதேபோல் வேறு சில ஆண்களுடனும் தனது மனைவியான பிரியா நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் தன்னிடம் உள்ளதாகவும் கண் கலங்குகிறார் அவர்.
பெற்ற குழந்தைகளையும் தன்னையும் விட்டுப் பிரிந்து சென்றதுடன் அரசியல் கட்சித் தலைவருடன் நெருக்கமாகி தற்போது தன்னை கொலை செய்யவும் துணிந்துவிட்ட தன் மனைவியிடமிருந்து தன்னைக் காப்பாற்ற வேண்டுமென்று கோவை மாநகர காவல் ஆணையரிடம் மனு ஒன்றையும் அளித்துள்ளார் தீபக் அரோரா.
தமிழகம் முழுவதும் ரவுடிகளை ஒழிக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் கோவையில் தொழிலதிபரை கொலை செய்ய நடைபெற்ற முயற்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply