Save 20% off! Join our newsletter and get 20% off right away!

சங்கத் தேர்தலை நடத்தவிடாமல் சதி..! ஈரோடு மார்க்கெட் வியாபாரிகள் குமுறல்

பன்னெடுங்காலமாக விவசாயிகளின் விடியலாகத் திகழ்வது ஈரோடு நேதாஜி தினசரி மார்க்கெட். சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு தந்தை பெரியார் முதற்கொண்டு பலசரக்கு கடை வைத்து வியாபாரம் செய்த புகழ்பெற்ற மார்க்கெட். ஆரம்ப காலத்தில் இருபது, முப்பது கடைகளைக் கொண்டு செயல்பட்டு, படிப்படியாக முன்னேறி தற்போது 1200 காய்கறிக் கடைகளைக் கொண்டு செயல்படும் தினசரி  மார்க்கெட்டாகத் திகழ்கிறது. தமிழ்நாடு மட்டுமில்லாமல் கர்நாடகா, ஆந்திரா, கேரளா, சோலாப்பூர், நாசிக் போன்ற மாநிலங்களில் இருந்தும் ஊட்டி, மேட்டுப்பாளையம், ஒசூர் போன்ற நகரங்களிலிருந்தும் விவசாயிகள் தங்களது விவசாய காய்கறிப் பொருட்களைக் கொண்டு வந்து விற்பனை செய்யும் அளவிற்கு உயர்ந்துள்ளது.

வியாபாரிகள் சங்கம்…

ஆரம்ப காலத்தில் தலைவர் என்ற ஒரே ஒரு பொறுப்பினை மட்டும் கொண்டு செயல்பட்டு வந்த தினசரி மார்க்கெட்.  2000-ஆம் ஆண்டு ஈரோடு நேதாஜி தினசரி மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் என்று பதிவு செய்யப்பட்டது. மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நிர்வாகத் தேர்வு செய்ய முடிவெடுக்கப்பட்டது. இறுதியாக 2014-ஆம் ஆண்டு சங்கத் தேர்தல் நடைபெற்றது. பொறுப்பாளர்களின் பதவிக்காலம் 2017-ஆம் ஆண்டில் முடிவடைந்த நிலையில், சங்க உறுப்பினர்கள் தேர்தல் நடத்த முடிவு எடுத்தார்கள். மேலும், இரண்டு ஆண்டு காலம் பொறுப்பில் இருந்து இட பிரச்சனையை முடித்துக் கொடுப்பதாக முன்னாள் நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதின் அடிப்படையில், 2019-ஆம் ஆண்டு தேர்தல் நடத்த முடிவு எடுத்தார்கள். அதன்படி பொதுக்குழு கூட்டம் நடத்த முயற்ச்சி செய்தபோது, கொரோனா தொற்றை காரணம் காட்டி காவல்துறையினர் அனுமதி மறுத்துவிட்டார்கள். சட்ட ஆலோசகரின் அறிவுரைப்படி உறுப்பினர்கள் கடைகளுக்குச் சென்று கையொப்பம் பெற்று தேர்தல் நடத்த ஏற்பாடு செய்தார்கள். 27.09.2021 தேர்தல் பணி தொடங்கி 8.10.2021 அன்று தேர்தல் நடத்த திட்டமிட்டிருந்தார்கள். அதற்கு மாநகராட்சி ஆணையர் இளங்கோ அனுமதி மறுத்துவிட்டார்.

இட மோசடி…

பி.பி.கே.பழனிச்சாமி தலைவராகப் பொறுப்பேற்றபோது  உறுப்பினர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு வீடு கட்ட இடம் வாங்கித் தருவதாகக்கூறி சுமார் 400 உறுப்பினர்களிடம் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் என்று பல கோடி ரூபாய் பெற்றுக் கொண்டு இடம் தராமல் வியாபாரிகளை ஏமாற்றி வந்தார். தற்போது இடத்தின் மதிப்பு மும்மடங்கு அதிகமானதால், ஆளும் கட்சியுடன் கைகோத்துக்கொண்டு கட்டிய பணத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு மிரட்டி  வருகிறார்.

சங்கத் தேர்தல் நடந்தால், சங்க நிர்வாகிகள் வியாபாரிகளுடன் ஒன்று சேர்ந்து இடத்தைக் கொடுக்கும்படி கெடுபிடி செய்வார்கள் என்றும் இதனால் பல கோடி இழப்பு ஏற்படும் என்ற காரணத்தால் பெரும் புள்ளிகளுடன் கைகோத்துக் கொண்டு சங்கத் தேர்தலை நடத்த விடாமல், பழி வாங்கி வருகிறார் பி.பி.கே.பழனிச்சாமி.

குறிஞ்சி சிவகுமாரின் குத்தகைக் கொள்ளை…

இன்னொரு பக்கம் தமிழ்நாடு கேபிள் டிவி வாரியத்தலைவர் குறிஞ்சி சிவகுமார் தனது பினாமியான அருண் பிரசாத்தின் பெயரில் சுங்க வரி குத்தகையை கையில் எடுத்துள்ளார். அரசு நிர்ணயித்த தொகை ஒரு கடைக்கு 16 ரூபாய். ஆனால், சுங்க வரிக்காரர்கள் வாங்குவது 50 ரூபாய். நியாயம்  கேட்டால் மிரட்டுகிறார்கள். டீக்கடைக்காரர் முதல்கொண்டு  ஆட்டோ, லாரி, கனரக வாகனங்கள் முதல் கொண்டு அரசு நிர்ணயித்த  தொகையை விட பல மடங்கு கூடுதலாக வசூல் செய்து வருகிறார்கள்.  

இந்தநிலையில், சங்கம் இருந்தால் சங்கத்தில் முறையிடலாம். குறிஞ்சி சிவகுமாரின் பினாமி அருண்பிரசாத், முன்னாள் மார்க்கெட் தலைவர் பி.பி.கே.பழனிச்சாமி இருவரும் கைகோத்துக்கொண்டு, மாநகராட்சி கமிஷனர் இளங்கோவனை கைக்குள் வைத்துக் கொண்டு சங்கத் தேர்தலை நடத்தவிடாமல் சதி செய்து வருகிறார்கள்.

மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் சங்கத் தேர்தலை நடத்த ஏன் அனுமதி மறுக்கிறார்?

சங்கத்தில் பதிவு செய்த கடைகள் 733. ஆனால், 1100 கடைகளாகக் கட்டிக்கொடுத்த கடைகளுக்கு 5 லட்சம் என 400 கடைக்களுக்கு மேல் கோடிக்கணக்கில் பணத்தைப் பெற்றுக் கொண்டு உள்ளார்கள். சங்கத் தேர்தல் நடந்தால் சங்கத்தில் பதிவு பெற்ற கடைகளைத் தவிர மற்ற கடைகளை அகற்ற சங்க நிர்வாகம் முடிவு செய்யும் என்பதால், பணம் கொடுத்த கடைக்காரர்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகை செய்து பணத்தை திருப்பிக் கேட்பார்கள் என்ற பயத்தில் சங்கத் தேர்தலை நடத்த அனுமதி மறுத்து வருகிறார் கமிஷனர் இளங்கோவன் என்பதுதான் சங்கத் தேர்தல் குறித்த கேள்விக்கான பதிலாக மார்க்கெட் கடைக்காரர்கள் தெரிவிக்கிறார்கள்.

முதலமைச்சருக்கு வியாபாரிகள் கோரிக்கை…

சங்கத் தேர்தலை நடத்த மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணன் உன்னி, மாவட்ட கண்காணிப்பாளர் சசிமோகன், மாவட்ட கோட்டாட்சியர் பிரேமலதா உள்ளிட்டோர் இடம் சங்கத் தேர்தல் நடத்த பலமுறை மனுக்கள் அளித்தும் எந்தப் பயனும் இல்லை. குத்தகைக் காரர்கள் மற்றும் மாநகராட்சி, காவல்துறையினர் குறுக்கீடுகள் ஏதுமின்றி ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தவும், புதிய பொறுப்பாளர்களைத் தேர்ந்தெடுத்து வியாபாரிகளும், விவசாயிகளும் வியபாரம் செய்திடவும்  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரியுள்ளனர்.