Save 20% off! Join our newsletter and get 20% off right away!

251 பவுன் நகை கொள்ளை… சிபிஐ பிடியில் சிக்கிய இன்ஸ்பெக்டர் மனோஜ்..! புதுச்சேரி பகீர்

புதுச்சேரி ஏனாம் வெங்கடாசல பிள்ளை வீதியை சேர்ந்தவர் ஷகிலா(வயது 51) பிரெஞ்சு அரசு பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார். மாற்றுத்திறனாளியான ஷகிலா தன் தாய் தந்தை சகோதரி என குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் இவரது வீட்டில் சுமார் 251 பவுன் நகை திருடு போனது. ஷகிலா கொடுத்த புகாரின் பேரில் ஒதியன்சாலை போலீஸார் வழக்குப்பதிவு செய்து சிறப்பு அதிரடிப்படை உதவியுடன் ஒதியன் சாலை போலீஸார் ஷகிலா வீட்டு வேலைக்காரப் பெண் இருதயமேரி நகைகளைத் திருடியதாகக் கைது செய்யப்பட்டார்.

மேலும் இருதய மேரியின் கணவர் சார்லஸ், மற்றும் அவரது உறவினர்கள் இருதய நாதன் (எ) பாம்பாட்டி, கமலா ஆகிய 3 பேரும் திருட்டுக்கு உடந்தையாக இருந்து செயல்பட்டது தெரியவந்ததுடன் இவர்கள் மூன்று பேரையும் போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் திருடிய நகைகளை கமலா மூலம் விற்பனை செய்து இருதயமேரி தன் வீட்டை புதுப்பித்ததாகவும் தன் கணவருக்கு புதியதாக ஆட்டோ வாங்கித் தந்ததாகவும் மேலும் கமலாவுக்கு சில சொத்து வாங்கிக் கொடுத்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது. போலீஸார் அவர்கள் அனைவரையும் கைது செய்து காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். ஆனால், இதுவரை 68  பவுன் நகைகள் மட்டுமே நீதிமன்றத்தின் மூலம் ஷகிலா பெறப்பட்டு இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

காவல் துறையினர் மீது நம்பிக்கை இழந்த ஷகிலா ஓய்வு பெற்ற நீதிபதி ராஜசூர்யா அவர்களிடம் ஒதியன் சாலை போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் தான் இழந்த நகை மற்றும் பணத்தை மீட்டுத்தரக் கோரியும் புகார் மனு அளித்தார். உரிய விசாரணைக்குப் பிறகு ஓய்வு பெற்ற நீதிபதி, இவ்வழக்கை உயரதிகாரிகள் விசாரிக்கவும் சம்பந்தப்பட்ட போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும்  டிஜிபிக்கு உத்தரவிட்டார். அதேபோன்று இவ்வழக்கு தற்போது சிபிஐ-க்கு மாற்றப்பட்டு இருக்கிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய ஷகிலா, ”சார், மாற்றுத்திறனாளியான நான், பிரெஞ்சு அரசு பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிகிறேன். அப்பா, அம்மா வயதானவங்க. ஒரு சகோதரி என நான்கு பேரு. நாங்க எல்லோரும் ஒரே வீட்டில் வசிக்கிறோம். திருடுபோன அதிர்ச்சியில் பதறிக் கொண்டு போய் ஒதியன் சாலை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றேன். நகையைப் பறிகொடுத்து புகார் கொடுக்கச் சென்ற என்னையும் என் குடும்பத்தாரையும் போலீஸார் மிகவும் மன வேதனைக்கு ஆளாக்கினார்கள். ஆய்வாளர்  மனோஜ் அவர்கள் நான் காவல் நிலையத்திற்கு சென்றவுடன் என் மொபைல் போனை வாங்கி சுவிட்ச் ஆப் செய்து வைத்துக்கொண்டார். நான், ”ஏன் சார், என் மொபைல் போனை வாங்கி சுவிட்ச் ஆப் செய்து வைக்கிறீர்கள்” என்று கேட்டதற்கு, ”இதெல்லாம் காவல் நிலையத்தில் உள்ள நடைமுறைதான்” என்று ஆய்வாளர் கூறினார். மேலும், புகார்கூட என்னை எழுத விடாமல் காவல் நிலையத்தில் உள்ள போலீஸாரே புகாரை எழுதினார்கள். மேலும், திருடுபோன நகை நான் என் குடும்பத்தார் சம்பாதித்து வைத்த என் பரம்பரை பரம்பரையாக வைத்திருந்த நகை என மொத்தம் 251 பவுன் நகை மற்றும் 5 லட்சம் மதிப்புள்ள பணம் என்று சொல்லியும் அவர்கள் வெறும் 150 பவுன் நகை மட்டுமே திருடு போனதாகப் புகாரில் குறிப்பிட்டு வழக்குப் பதிவு செய்தார்கள். மேலும் ஆய்வாளர், சீனியர் சிட்டிசனான எனது 82 வயதான தந்தையையும் காவல் நிலையம் அழைத்து வந்து காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை காவல் நிலையத்தில் எங்களை உட்கார வைத்து ஆய்வாளரும் உதவி ஆய்வாளரும் எங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கினர்” என்ற ஷகிலா,

”எங்கள் நகைகளை முழுவதும் மீட்டுத் தருவார்கள் என்று ஒதியன்சாலை போலீஸார் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை இந்த 68 பவுன் நகை கூட எஸ்பி ரச்சனா மேடம் இல்லை என்றால் எங்களுக்கு கிடைத்திருக்குமா? என்று கூட தெரியவில்லை. அதனால்தான், இந்த வழக்கை உயர் அதிகாரிகள் விசாரித்து எங்கள் நகைகளை மீட்டுத்தர வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம்.” என்றார். இந்த விவகாரத்தில் ஆரம்பத்தில் வழக்குப் பதிவு செய்யவே தாமதித்த போலீஸார், எஸ்பி ரச்சனா சிங் தலையீட்டின் பேரில்தான் வழக்குப் பதியப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆய்வாளர் மனோஜ் நம்மிடம், ஷகிலா எழுதிக் கொடுத்த புகாரின்படிதான் 150 பவுன் நகை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 72 பவுன் நகையை மீட்டுக் கொடுத்துள்ளதாகவும் மீதி நகையைக் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் அவர் கூறினார். மேலும் பேசிய அவர், ”எட்டு இடத்தில் நாங்கள் ரெய்டு நடத்தி இருக்கிறோம். நகையை வாங்கிய சேட்டு வீடு, அலுவலகம், குற்றவாளி வீடு என பல்வேறு இடங்களில் நாங்கள் ரெய்டு நடத்தி இருக்கிறோம். மேலும் குற்றவாளி செல்வி அவர் கணவருக்கு வாங்கிக்கொடுத்த ஆட்டோ மற்றும் 4 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள சொத்துகளையும் வழக்கில் சேர்த்துள்ளோம். இதையெல்லாம் கணக்கு செய்தாலே 100 பவுனுக்கு மேலே வந்துவிடும்.

ஆனால், ஷகிலா அவர்கள் முதலில் 150 பவுன் என்று சொல்லிவிட்டு பிறகு 251 பவுன் என்று சொல்கிறார் அவர் எவ்வளவு வேண்டுமானாலும் சொல்லலாம். 500 பவுன் 1000 பவுன் என்று கூட சொல்லலாம். ஆனால், எல்லாவற்றிற்கும் ஆதாரம் வேண்டுமே அவர்களிடம் விசாரணை செய்வதற்கு அழைத்தபோது கூட அவர்கள் வரவில்லை என்று கூறிய அவர் எட்டு மாதங்களாக திருடிய நகைகளை குற்றவாளி செலவு செய்யாமல் வைத்து இருப்பானா? என்ன என்றும் அவர் கூறினார். அதேபோல், ”மீதி உள்ள நகைகளை  மீட்பதற்கு நீங்கள் வேறு என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்” என்று நாம் ஆய்வாளரிடம் கேட்டதற்கு, இந்த வழக்கை டிஜிபி சிபிசிஐடிக்கு மாற்றச் சொல்லி சொல்லிவிட்டார். நானும் மாற்றிக் கொடுத்து விட்டேன். அதேபோல் எனக்கும் காலில் எலும்பு உராய்வு ஏற்பட்டு ஒரு வார காலமாக விடுமுறையில் இருக்கிறேன். இனிமேல் சிபிசிஐடி போலீஸார் தான் நகைகளை கண்டுபிடிக்க வேண்டும் இனிமேல் நான் இதில் தலையிட முடியாது என்றும் அவர் கூறினார்.

இதையடுத்து இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி போலீஸ் டிஜிபி ரன்வீர்சிங் கிருஷ்ணியா உத்தரவிட்டிருந்த நிலையில் சிபிசிஐடி போலீஸ் சூப்பிரண்டு பக்தவச்சலம் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீஸார் இந்த வழக்கு தொடர்பான விசாரணையைத் தொடங்கியுள்ளனர். முதற்கட்டமாக ஆசிரியர் ஷகிலா மற்றும் கைது செய்யப்பட்ட இருதய மேரி ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணையை நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை முடிந்த பிறகு அடுத்த கட்டமாக ஒதியன் சாலை போலீஸாரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எது எப்படியோ இந்த வழக்கில் உண்மை நிலையைக் கண்டறிந்து பாரபட்சமின்றி சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு பாதிக்கப்பட்டவருக்கு உரிய நீதியைப் பெற்றுத் தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.