வாலாஜாப்பேட்டை பொதுமக்கள் பொருமல்
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை நகராட்சி தமிழகத்திலேயே முதன் முதலாகத் தொடங்கப்பட்ட நகராட்சி என்ற பெருமைக்குரியது. சென்னை, பெங்களூரு, தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது வாலாஜாப்பேட்டை நகரம். இந்த நகரத்துக்கென்று பல்வேறு வரலாற்றுச் சிறப்புகள் உண்டு.
தென்னிந்தியாவின் முதல் ரயில் போக்குவரத்து சென்னை ராயபுரத்திலிருந்து வாலாஜா ரோடு வரை 1856ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த வரலாற்றுப் பெருமையும் வாலாஜாப்பேட்டைக்கு உரியது. இந்த நகராட்சியில் சுமார் 25 வார்டுகள் உள்ளன 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
மேலும், வாலாஜாபேட்டையில் 1920ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தின் பெருமைக்குரிய பட்டு நெசவுத் தொழிலின் கிளை வாலாஜாவில் தொடங்கப்பட்டு பட்டு சேலைகள், கம்பளி உள்ளிட்ட துணி வகைகள் உற்பத்தி செய்து வந்தது குறிப்பிடத்தக்கதாகும். அதேபோல், வாலாஜா டெரிகாட்டன் துணியும் ஜவுளி வர்த்தகத்தில் முக்கிய இடம் வகித்து வந்தது.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் தலைமை அரசு மருத்துவமனை, வட்டாட்சியர் அலுவலகம், சார்பதிவு அலுவலகம், ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம், தினசரி காய்கறி சந்தை, உணவுப் பொருட்கள் பாதுகாப்பு கிடங்கு, நூலகம், அரசு பெண்கள் கலைக்கல்லூரி, தொழிற்சாலைகள் இருப்பதால் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வாலாஜாப்பேட்டைக்கு வந்து செல்கின்றனர்.
வாலாஜாப்பேட்டை நகரத்தின் சுற்று வட்டாரத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. எனவே, கிராம பொதுமக்கள் நாள்தோறும் வாலாஜாபேட்டை வந்து வேலூர், சென்னை, காஞ்சிபுரம், பெங்களூரு, சோளிங்கர், திருத்தணி, திருப்பதி உள்ளிட்ட பல்வேறு வெளியூர்களுக்கு இங்கு வந்துதான் கல்வி, வேலை, வியாபாரத்திற்கு பயணம் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில், வாலாஜாப்பேட்டை நகரப்பகுதி பராமரிப்பில்லாமல் சுகாதாரமற்ற நிலையில் இருக்கின்றது என்பதுதான் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் எடுத்துவைக்கும் புகார்ப் பட்டியலில் முக்கியமான ஒன்றாகும்.
வாலாஜா நகராட்சிக்கு உட்பட்ட 25 வார்டுகளில் பெரும்பான்மையான தெருக்களில் குப்பைகள் சரிவர அள்ளாமல் அழுகி நாற்றமெடுத்து காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக, எஸ்.எம்.முதலித் தெரு, தீனபந்து ஆசிரமம், பெருமாள் கோயில் தெரு, நரஜோதிராவ் தெரு போன்ற தெருக்களில் வாரத்துக்கு ஒரு முறை அல்லது மாதத்திற்கு இரண்டு முறை மட்டுமே குப்பைகள் அள்ள வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் அப்பகுதியில் குப்பைகளின் தேக்கம், அவ்வப்போது பெய்து வரும் மழையால் அழுகி துர்நாற்றம் வீசுகிறது.
வாலாஜாவில் பெரும்பான்மையான பகுதிகளில் இதுபோன்று ஏற்படும் சுகாதார சீர்கேட்டால், நோய்த் தொற்று பரவும் அபாய நிலை உள்ளதாகவும் அச்சம் தெரிவிக்கின்றனர். அதோடு, நகரப் பேருந்து நிலையத்தில் எவ்விதமான அடிப்படை வசதிகளும் இல்லாததால் பயணிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
பயணியர் நிழல் குடை பற்றாக்குறை, கழிப்பறை வசதிகள் சுத்தம் இல்லை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் எதுவுமே இல்லை.
குடிதண்ணீர் பற்றாக்குறை
பாலாற்றங்கரையில் அமைந்துள்ள வாலாஜா நகராட்சிக்கு ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்து வருகின்றனர். ஆனாலும் முறைப்படி செய்யாமல் விநியோகக் குளறுபடியால், குடி தண்ணீர் பிரச்சனையால் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
மழைக் காலங்களில் பைப்கள் பாழ்படுகின்றன என்பது நகராட்சி நிர்வாகத்தின் விளக்கமாகும். அப்படி என்றால், பைப்கள் பாழ்படாதவாறு பராமரிப்பில் கவனம் செலுத்த வேண்டியதுதானே என்பது பொது மக்களின் கேள்வி. இந்தநிலையில், இதற்கு மாற்று வழிகளை ஏற்பாடு செய்வதற்கு இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தண்ணீர் பிரச்சனை குறித்து எப்போது கேட்டாலும் ஆற்றில் பைப் அடித்துச் சென்று விட்டது. பத்து நாட்களுக்கு தண்ணீர் வராது… ஒரு மாதத்திற்கு தண்ணீர் வராது என்று எளிதாகச் சொல்லி முடித்து விடுகின்றனர். கடந்த பத்தாண்டு காலமாக அதிமுக ஆட்சியில் இருந்தது. நகராட்சிக்கு குடிநீர் விநியோகத்திற்கு எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. திமுக ஆட்சியிலாவது அது செயல்பாட்டுக்கு வருமா? என்பதுதான் பொதுமக்களின் எதிர்பார்ப்பு மிக்க கேள்வியாக இருக்கின்றது.
நிர்வாகச் சீர்கேடு…
தீண்டாமை ஒரு பாவச்செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை ஒரு மனிதத் தன்மையற்ற செயல் என்று ஏட்டளவில் இருக்கிறதே தவிர செயல் வடிவில் வரவில்லை என்பதை வாலாஜாப்பேட்டை நகராட்சி நிர்வாகத்தில் பட்டவர்த்தனமாகக் காணலாம்.
நகராட்சி மேற்பார்வையாளர் சந்தான கிருஷ்ணன் தீண்டாமையைக் கடைப்பிடிப்பதாக அங்குள்ள பணியாளர்களும் பொதுமக்களும் குற்றம் சாட்டுகின்றனர். துப்புரவுப் பணியாளர்கள், நகராட்சிப் பணியாளர்கள், டெங்கு ஒழிப்புப் பணியாளர்கள், இந்திய தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர் எந்தத் தேவைகளுக்கு அவரிடம் சென்றாலும் உள்ளே வரக்கூடாது என்றும், பக்கத்திலேயே வரக்கூடாது என்றும், அதிகாரத் தோரணையுடன் நடந்துகொள்வதாகத் துப்புரவுப் பணியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்
கடுமையாகப் பேசுவது, எரிந்து விழுவது அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்துவது, இப்படி அகங்காரத்தோடும் ஆணவத்தோடும் செயல்படுவதாகக் குற்றம் சாட்டுகின்றனர். இவர் கையூட்டுப் பணம் வாங்குவதிலும் கை தேர்ந்தவர் என்கின்றனர்.
இவரைக் குறித்து, ஆணையரிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கின்றனர். சந்தான கிருஷ்ணன் எதைச் சொல்கிறாரோ அதைத்தான் ஆணையர் செய்கின்றார் என்கின்றனர்.
ஏற்கெனவே நகராட்சி ஆணையராக செயல்பட்டு வந்த சதீஷ்குமார் இடமாற்றம் செய்யப்பட்டு, தற்போது மகேஸ்வரி ஆணையராகப் பொறுப்பேற்று பணியாற்றி வருகிறார். இவரை ஒரு தலையாட்டி பொம்மை என்றுதான் நகராட்சியில் உள்ளவர்கள் பட்டப்பெயர் சூட்டிக் கூறுகின்றனர்.
தண்ணீர் வரவில்லை அம்மா.. ஆமாம். தண்ணீர் எப்போது வரும்? ஆமாம். நகராட்சி சுகாதார சீர்கேடு சரி செய்யப்படுமா? ஆமாம். சுகாதாரப் பணியாளர்கள் வேலை செய்யவில்லையே… ஆமாம். நீங்கள் அலுவலகத்திற்கு வர மாட்டீங்களா? ஆமாம். நேரடி களப் பணியில் இறங்க மாட்டீர்களா? ஆமாம். இப்படி எதற்கெடுத்தாலும் ஆமாம் என்ற பதிலைச் சொல்லி தலையாட்டுவதுதான் ஆணையாளர் மகேஸ்வரியின் வழக்கம் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும், வாலாஜாப்பேட்டை நகராட்சி மீது தனி கவனம் செலுத்தி தண்ணீர் பற்றாக்குறையைத் தீர்க்கவும் நகராட்சியில் சுகாதார சீர்கேட்டை சரி செய்யவும் முறையற்ற, திறமை இல்லாத நகராட்சி நிர்வாகத்தை ஒழுங்குபடுத்தவும் நடவடிக்கை மேற்கொண்டு, நகராட்சி மேம்பாட்டிற்கு வித்திட வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் ஒருங்கிணைந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
கவனம் கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளுமா அரசு என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்..!
Leave a Reply