வர்த்தகத்தில் மோசடி என்பது நாள்தோறும் விதவிதமான முறையில் அவதாரமெடுத்து வருவது அதிர்ச்சி அளிக்கிறது. ஏற்கெனவே அதிகரித்து வரும் ஆன்லைன் வர்த்தக மோசடி வரிசையில், தற்போது புதிதாக முளைத்துள்ள மோசடி இது. மும்பையிலுள்ள பிரபல நிறுவனத்தின் பெயரில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என ஆசை வார்த்தை கூறி மதுரையைச் சேர்ந்த நகைக் கடை அதிபர், கோடியை நெருங்கும் லட்சக்கணக்கான ரூபாய் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
மதுரை மேட்டு கம்மாள தெரு பகுதியில் நவீன் ஜுவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக் கடை நடத்தி வருபவர் சிவகுமார். நகைக் கடை தொழிலுடன் பங்கு வர்த்தக தொழிலிலும் ஈடுபட்டு வரும் அவர், பல்வேறு தனியார் நிறுவனங்கள் பெயரில் முதலீடு செய்யும் ஏஜென்ட் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார்.
இந்தநிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த பிரபல தனியார் மருத்துவ உபகரண தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் பெயரில் முதலீடுகள் செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என கூறி, தங்கநகை தொழிலில் ஈடுபட்டு வந்த தனது உறவினரான சுதாகர் என்பவரிடம் தொழில் ரீதியாகப் பேசியுள்ளார். அப்போது அதிகளவில் முதலீட்டாளர்களை தன்னிடம் சேர்த்து விடும் பட்சத்தில் கூடுதல் கமிஷன் வழங்குவதாகவும் முழு வீச்சில் பணியாற்றினால் நல்ல வருவாய் ஈட்டலாம் எனவும் ஆசை வார்த்தைகளை அடுக்கியுள்ளார். அதனை நம்பி ஏற்கெனவே தான் செய்து வந்த வேலையை விட்டு விலகிய சுதாகரோ அதிக லாபம் கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் முழு மூச்சாக முதலீட்டாளர்களை இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டதுடன் தானும் அந்நிறுவனத்தின் பெயரில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளார்.
தொடக்கத்தில் சில லட்சங்களை முதலீடாக செலுத்தியபோது, அதற்கான ஊக்கத் தொகைகளை சரியாக வழங்கிய சிவகுமார், பின்னர் அதிக லட்சங்கள் முதலீடாக வரத்தொடங்கிய நிலையில், அதற்கான ஊக்கத்தொகை வழங்குவதை சிறுக சிறுக நிறுத்தத் தொடங்கியுள்ளார்.
அதிக லாபத்தை எதிர்பார்த்து சிறிய முதலீட்டாளர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோரிடமிருந்து பணம் பெற்றதோடு, தானும் சுமார் 30 லட்சம் வரை முதலீடு செய்து, மொத்தம் சற்றேறக்குறைய 89 லட்சம் ரூபாயை நகைக் கடை அதிபர் சிவகுமாரை நம்பி வழங்கிய சுதாகர், சிவகுமாரிடம் பணத்தை விரைந்து வழங்குமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் சிவகுமார் உரிய பதில் வழங்காததால், மன உளைச்சலில் தற்கொலைக்கு முயன்ற சுதாகரை அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்து காப்பாற்றியுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சுதாகர் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவகத்தில் சிவகுமார் மீது புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார். ஆயினும், தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி, நகைக் கடை அதிபரான சிவகுமார் மோசடி செய்த பணத்திற்கு எந்தவிதமான பதிலும் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். ஏற்கெனவே, தான் சம்பாதித்த பணம் மற்றும் குடும்ப சொத்துகளை அடகு வைத்து, தன்னை நம்பி முதலீடு செய்த வாடிக்கையாளர்களுக்கு சிறிய அளவிலான தொகைகளை வழங்கி சாமாதானப்படுத்திய சுதாகர், தற்போது குடும்ப சூழ்நிலை மற்றும் மற்ற முதலீட்டாளர்களின் நெருக்கடி காரணமாக சிவகுமாரை அணுகி பணம் கேட்டால், அவர் கொலை மிரட்டல் விடுவதாக வேதனையோடு தெரிவிக்கிறார்.
அதிக பண வருவாய் என்ற ஆசையில் ஆன்லைன் வர்த்தகம், பிரபல நிறுவனங்கள் பெயரில் முதலீடு என பல கோடி ரூபாய் மோசடிகள் நடைபெற்று வருவது தமிழகத்தில் தொடர்கதையாக உள்ள நிலையில், மதுரை நகைக் கடை அதிபர் சிவகுமார் செய்துள்ள மோசடி புதிய அதிர்ச்சியாகப் புறப்பட்டுள்ளது. சிவகுமார் மீதான விசாரணை உரிய வகையில் துரிதமாக நடைபெற்று, அதன் முடிவு விரைவில் வெளிச்சத்துக்கு வரும் நிலையில், கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்தது பட்டவர்த்தனமாகத் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply