Save 20% off! Join our newsletter and get 20% off right away!

தோழனே தந்த வேதனை

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளை கட்டுப்படுத்துவதற்காக சுக்மா மாவட்டம் லிங்கம் பள்ளி என்ற இடத்தில் துணை ராணுவ படை முகாம் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த முகாமில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் தங்கி இருந்தனர். இரவு நேரம் என்பதால் பலர் தூங்கிக் கொண்டிருந்தார்கள். கடந்த 9ஆம் தேதி  அதிகாலை 3.30 மணி அளவில் பணியில் இருந்த ஒரு வீரர் தனது ஏ.கே.47 துப்பாக்கியை எடுத்து அங்கிருந்த வீரர்களை நோக்கி சரமாரியாக சுட்டார். இதில் 4 வீரர்கள் குண்டு பாய்ந்து அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். 3 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் மத்திய படை போலீசார் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

முதற்கட்டமாக மன உளைச்சலால் இந்த நடவடிக்கையை அந்த வீரர் மேற்கொண்டது தெரியவந்துள்ளது. பொதுவாகவே, கடினமான பயிற்சியும் உழைப்பும் மிகுந்த போலீஸ், ராணுவ பிரவுகளுக்கு போதிய ஊதியம், ஓய்வு, மன அமைதி, ஆற்றுப்படுத்தும் முறைகள் தேவைப்படுகின்றன.

இதை உணராமல் ஒன்றிய அரசுகள் அவர்களை எந்திரர்களாக்கி வேலை வாங்கி மன உளைச்சலை அதிகப்படுத்துகின்றனர். இதனால் எழும் கோபத்தையும் ஆத்திரத்தையும் சக தோழர்கள், பொதுமக்கள் மீது அவர்கள் தீர்த்துக்கொள்கின்றனர். தமிழ்நாட்டில் காவலர்களுக்கு ஒரு நால் விடுப்பை அதிகாரப்பூர்வமாக்கியிருப்பது முன்னேர் முயற்சி, அதுபோல், ஒன்றிய, மாநில அரசுகள் பிற போலீசார் (எல்லைக்காவல், துணை ராணுவம்), ராணுவத்தினருக்கும் போதிய ஓய்வு , ஊதியம், சலுகை அளிப்பது நாட்டுக்கு நல்லது.

– தொகுப்பு : இதழாளர் அய்கோ