தமிழ்நாட்டின் மேற்கு மண்டலமான கோவை, சேலம், ஈரோடு மாவட்டங்களில் தன் தனியார் பள்ளிகளின் ஆதிக்கம் அதிகம். மக்களின் அப்பாவித்தனத்தை பயன்படுத்தி கட்டணக்கொள்ளை அடிப்பதோடு பாலியல் சுரண்டலையும் செய்துவருகின்றனர். கோவை பள்ளி மாணவி தற்கொலை வழக்கு விவகாரத்தில், பாலியல் புகாரளித்தும் கண்டுகொள்ளாத பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் கைதாகி சிறையில் உள்ள நிலையில் ஜாமீன் கோரி மனு அளித்துள்ளார். சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை விவகாரத்தில் போலீசாருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது போன்ற நிலைப்பாட்டை நீதிபதிகள் மேற்கொள்வார்கள் என்று மக்கள் நம்புகின்றனர்.
ஏனெனில், 6 மாதங்களாக மனஉளைச்சலில் மாணவி தவித்து வந்ததாக சக மாணவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.ஆசிரியரின் பெயரையும், வேறு சிலருடைய பெயர்களையும் குறிப்பிட்டு அவர்களை எல்லாம் சும்மா விடாதீர்கள் என்று எழுதப்பட்ட மாணவியின் கடைசி கடிதமும், அதில் உள்ள பெயர்களும் வலுவான சாட்சியாக அமைந்துவிட்ட நிலையில், கடிதத்தில் குறிப்பிட்டுள்ள மற்ற இருவரை யாரென்று அறிய போலீசார் அக்கறை காட்டவில்லை. அவர்களையும்கண்டறிந்து தண்டித்தால்தான் காவல் நீதி மீது மக்கள் ஆவல் கொள்வார்கள். அதுமட்டுமல்ல, இறந்த மாணவி, மிதுன் சக்கரவர்த்தியிடம் பேசிய ஆடியோவில் குறிப்பிடப்பட்டுள்ள வேறு 2 மாணவிகள் யார் ,யார்? ஏன அறிந்து அவர்கள் புகார் அளிக்காவிட்டாலும் இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளியின் குற்ற நடவடிக்கை என்ற ரீதியில் இந்த வழக்கோடு இணைத்து விசாரிக்கவேண்டும். அதன்மூலம் அவர்களை போன்றோருக்கு நம்பிக்கை ஊட்டவேண்டும்.
தற்கொலை செய்த மாணவி விவரங்களை வெளியிட்டதாக 48 யூ டியூப் சேனல்கள் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது. இத்தகைய விவகாரங்களில் குற்ற விவரத்தையோ, குற்றவாளி விவரத்தையோ வெளியிடலாமே தவிர, பாதிக்கப்பட்டவர்களை பற்றை அதிகம் வெளிப்படுத்தக்கூடாது என்ற சட்ட நியாயத்தை அறியாத ஊடகங்கள் தண்டிக்கப்படத் தக்கனவே.
பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி, தனது பட்ட சான்றிதழை வைத்து இனி எந்த பணியிலும் சேரமுடியாதவாறு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். பள்ளி நிர்வாகத்துக்கும் கறுப்பு புள்ளி வைக்கப்படவேண்டும்.
அனைத்துக்கும் மேலாக, இதுபோன்ற வழக்குகளுக்கு தீர்ப்பு சொல்ல பல ஆண்டுகள் இழுத்தடிப்பதாலேயே பலரும் தங்கள் பாதிப்பை வெளியிட தயங்குகின்றனர். நீதிமன்ற நடவடிக்கையை விரைவுபடுத்த நீதியரசர்கள் முன்வரவேண்டும் என்பது மக்கள் எதிர்பார்ப்பு.
Leave a Reply