‘எந்த முட்டாள் வாட் வரியை உயர்த்தினார்களோ அவர்கள் குறைக்கட்டும், எங்களால் முடியாது’ என்று மத்திய அரசை மாநில முதல்வர் சாடியதே தெலங்கானா மாநில முக்கிய செய்தியாக இருக்கிறது.
ஒரு பேச்சே முக்கிய செய்தியாவதற்கு காரணமிருக்கிறது. ஜிஎஸ்டி விதிப்பு முறை மாநில அரசுகளின் சுயேட்சை தன்மைக்கும் மாநில வளர்ச்சிக்கும் எதிரானது. இதனால் இந்திய ஒன்றிய ஒட்டுமொத்த மொருளாதார பிரிதிறனும் ஒன்றிய அரசிடம் போய்விடும் என பலர் எச்சரித்த நிலையிலும் ஜிஎஸ்டி வவிதிப்பு சட்டமாகிவிட்டது. மாநிலங்களுக்குரிய பங்கு கொடுபடாததால் பல மாநிலங்களின் திட்டங்கள் முடங்கிக்கிடக்கின்றன.
இந்நிலையில் மாநிலங்களுக்குரிய ஒரே வரி வாட் தான். அதன்மூலம் சில துறைகளில் மட்டும் சிறிது நிதி ஈட்டுகிறது. இது ஒன்றிய அரசின் கண்களை உறுத்துகிறது. குறிப்பாக, கார்பரேட் எண்ணெய் நிறுவனங்கள் கொள்முதல் விலையை காட்டிலும் பன்மடங்கு விலை வைப்பதை கண்டுகொள்ளாத ஒன்றிய அரசு,’பெட்ரோல் மீதான உற்பத்தி வரியை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் மீதான வரியை லிட்டருக்கு 10 ரூபாயும் குறைத்து கடந்த 3-ம்தேதி மத்திய அரசு அறிவித்து. கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் முதல் பெட்ரோல் மீது மத்திய அரசு உற்பத்தி வரியாக லிட்டருக்கு ரூ.38.78 உயர்த்தியது, தற்போது அதில் ரூ.5 குறைத்திருக்கிறது. டீசலில் லிட்டருக்கு ரூ.29.03 உயர்த்திவிட்டு ரூ.10 குறைத்துள்ளது.
இது உண்மையாக இருக்க, ஏதோ பரித்தியாகம் போல் வரித்தியாகம் செய்ததாக எண்ணி, மாநில அரசின் வரி வருவாய்க்கு தடை ஏற்படுத்தும் வகையில், ‘ நாங்கள் குறைத்துவிட்டோம், நீங்கள் குறைப்பீர்களா?’ என்று ‘ நான் ரெட், நீங்க ரெடியா’ பாணியில் கேட்டது, மாநில அரசின் நிதி நிலை அறியா பாமர மக்களுக்கு இது சரியாக பட்டது.
இந்நிலையில் தான், மாநில அரசின் ஆதங்கம், சூழ்நிலையை வெளிப்படுத்தும் வகையில் தெலங்கானா மாநில முதல்வர் சந்திர சேகர ராவ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் மிகக்குறைவாகவே இருந்து வருகிறது, ஆனால்,மத்திய அரசோ செஸ் வரிஎன்ற பெயரில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி, சாமானிய மக்களுக்கு சுமையை ஏற்படுத்துகிறது. கடந்த 2014ம் ஆண்டுக்குப்பின் கச்சா எண்ணெய் பேரல் 105 டாலரை தொடவே இல்லை, ஆனால், மத்திய அரசு மட்டும் பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகிறது.
நாங்கள் வாட் வரியை உயர்த்தவில்லை. ஒரு பைசா கூட உயர்த்தவில்லை என்பதால், வரியை குறைப்பதற்கான பேச்சுக்கே இடமில்லை. எந்த முட்டாள் வாட் வரியை குறைக்கக் கூறினார், எந்த முட்டாள் உயர்த்தினார்களோ அந்த முட்டாள் குறைக்கட்டும்.
பெட்ரோல், டீசல் முழுவதற்கும் செஸ் வரியை நீக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கிறேன். இந்த வரியை நீக்குவது தேசத்தின் நலனுக்குத்தான். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயராதபோது, மத்தியஅரசு மட்டும் தேவையில்லாமல் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி நடுத்தர மக்களுக்கும், ஏழை மக்களுக்கும் சுமையை அதிகரித்து வருகிறது
ஏழை மக்கள் மீது உண்மையிலே மத்திய அரசுக்கு அக்கறை, கருணை இருந்தால், செஸ் வரியை நீக்கட்டும். பெட்ரோல், டீசல் மீது செஸ் வரியை நீக்கும் வரை தொடர்ந்து நாங்கள் போராடுவோம்’ என்று அவர், ‘ வரி, வட்டி, திரை,கிஸ்தி…’ என்ற சிம்மக்குரலோன் பாணியில் குரல் எழுப்பியுள்ளார். அதுமட்டுமல்ல, ‘எங்களுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து , சிறைக்கு அனுப்புவோம் என பாஜக தலைவர்கள் குற்றம்சாட்டுகிறார்களே அவர்களுக்கு துணிச்சல் இருந்தால் எங்களை தொட்டுப்பார்க்கட்டும்’ என்றும் முழங்கியுள்ளார்.
இதுபோன்று தமிழ்நாட்டின் நிதியமைச்சர் குரல் ஒரு காலத்தில் எழுந்தது. இந்த முக்கிய காலகட்டத்தில் அமுங்கிவிட்டது. இதற்கு பின்பாவது எழுமா என்று பார்க்க வேண்டும்.
Leave a Reply