Save 20% off! Join our newsletter and get 20% off right away!

கடல் மட்டம் உயர்ந்ததால் சென்னை மாநகரில் வெள்ளம் வடியவில்லை செல்லூர் ராஜூவுடன் போட்டிபோடும் மா.சு.

ஆசியாவைச் சுற்றியுள்ள கடல் மட்டம், உலக சராசரியை விட வேகமாக அதிகரித்துள்ளது. இதனால், கடலோரப் பகுதி இழப்பு மற்றும் கடற்கரை பின்வாங்குல் அதிகரித்துள்ளது.
பெரும்பாலான கடலோர நகரங்களில் கடல் மட்டம் மற்றும் காற்றின் வெப்பநிலை இரண்டும் உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கடல் மட்ட உயர்வு, அதிகளவு புயல்கள் மற்றும் தீவிர மழைபொழிவு நிகழ்வுகளால் கடலோர நகரங்களில் வெள்ளங்கள் அதிகளவு ஏற்படும்.
Climate change widespread, rapid, and intensifying (IPCC) அறிக்கை கீழ்கண்டவாறு புள்ளிவிவரங்களை வெளியிட்டிருக்கிறது :
1850-1900ல் பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடந்த அதிதீவிர மழை பொழிவு, தற்போது 1.3 முறை நடக்கிறது. வரும் காலங்களில் இது போன்ற நிகழ்வுகள், 1.5 டிகிரி வெப்பமடைதலில் 1.5 முறையும், 2 டிகிரியில் 1.7 முறையும், 4 டிகிரி வெப்பமடைதலில் 2.7 முறையும் நடக்கும்.
குறைந்த உமிழ்வு சூழ்நிலையில், 2081-2100ல் மொத்த மழைப்பொழிவு அளவு, 1850-1900 காலத்தை விட 10.2% அதிகமாக இருக்கும். தற்போதைய உமிழ்வு உறுதிமொழிகள் பின்பற்றப்படுதல் மற்றும் உயர் உமிழ்வு சூழ்நிலைகளில், இந்த அளவு முறையே 12.9% மற்றும் 27.6% வரை அதிகரிக்கும்.
வருடாந்திர அதிகபட்ச ஒரு நாள் மழையின் அதிகரிப்பு அளவுகள், மேலும் அச்சமடையச் செய்கின்றன. குறைந்த உமிழ்வு சூழ்நிலையில், 2081 – 2100ல், ஒருநாள் மழை 1850 -1900 காலத்தை விட 15.9% அதிகமாகுமாம்.  
தற்போதைய உமிழ்வு உறுதிமொழிகள் பின்பற்றப்படுதல் மற்றும் உயர் உமிழ்வு சூழ்நிலைகளில், 24% மற்றும் 47.8% வரை அதிகரிக்கும் என்று தெரிகிறதாம்.
இது போன்ற மழை அதிகரிப்பு, தென்னிந்தியாவில் அதிகமாக இருக்குமாம். ஆண்டு மழை, கோடை மழை என இரண்டுமே அதிகரிக்கும் என்றும், பருவமழைக் காலமும் அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது.
பல்வேறு ஐரோப்பிய நாடுகள் 2050க்குள்ளும், சீனா 2060க்குள்ளும், ஜீரோ உமிழ்வை net zero emissions அடைவதை, இலக்காக கொண்டு செயல்படுவதாக உறுதியளித்துள்ளன.  இந்தியாவோ, எந்த ஒரு இலக்கையும் நிர்ணயம் செய்யாமல் மெத்தனமாக உறங்குகிறது. கூட செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியக் கடலோரப் பகுதி 7,500 கிமீ நீளமானது என்பதால், உயரும் கடல்மட்ட அளவுகளால் அதிகம் பாதிக்கப்படும். தெற்கு ஆசியாவில் கடல் மட்டம் குறைந்த உமிழ்வு சூழ்நிலையில் 0.4 மீ அளவும், தற்போதைய உமிழ்வு உறுதிமொழிகள் பின்பற்றப்படுதல் சூழ்நிலையில் 0.5 மீ அளவும், உயர் உமிழ்வு சூழ்நிலைகளில் 0.7 மீ அளவும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதை எதிர்கொள்ள, இந்தியா நகர்ப்புற திட்டமிடல் மற்றும் கடலோர பாதுகாப்பு அமைப்புகளை சிறப்பாக தயார் செய்ய வேண்டும். கடலோர வெள்ளம் மற்றும் அது தொடர்புடைய அரிப்புகளிலிருந்து,  சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த சதுப்புநிலப் பகுதிகளை பாதுகாக்கும் முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
நகரங்கள் நீர் சுழற்சியை மாற்றி,  வடிகால் அமைப்புகளை மிகப்பெரிய அளவில் பாதிப்படைய வைக்கிறது. இதனால், ஒட்டுமொத்த வெள்ள அபாயம் ஏற்படுகிறது.
வானிலை ஆய்வு மையத்தால் கணிக்க முடியாத அளவுக்கு அதீத மழைப் பொழிகிறது. காலநிலை மாற்றம் காரணமாக, குறைந்த கால அளவில் அதிதீவிர மழைப் பொழிவு ஏற்படுகிறது.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மெரினா கடற்கரையில் அரை மணிநேரத்தில் பத்து செ.மீ மழை பெய்தது. இந்தளவு மழை, சென்னை நகரில் பெய்திருந்தால், மிகப்பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இறுதியில் தென்மேற்கு பருவமழை நிறைவடையும். அக்டோபர் இருபதாம் தேதியிலிருந்து வடகிழக்கு பருவமழை தொடங்கும்.  ஆனால், கடந்த ஒரு வாரத்தில் மொத்த மழையும் பெய்துவிட்டது. இனிமேல் ஆண்டு சராசரி மழை, மூன்று மாத சராசரி மழை என்பதெல்லாம் பார்க்கப்படாமல், மூன்று மணிநேரத்தில் எவ்வளவு தீவிர மழை பெய்யும் என்பதைப் பொறுத்துதான் நமது வடிகால் முறைகளையும், கட்டமைப்புகளையும் உருவாக்க முடியும்.
மழை நீர் நிலத்தடிக்கு சென்று நீர்நிலைகளில் சேமிக்கப்படும். இப்போது பெய்யும் அதி கனமழைநீரை உறிஞ்சுவதற்கு நிலமில்லாமல், தேங்குவதற்கு நீர்நிலைகள் இல்லாமல், கடல்போல் தேங்கி நிற்கிறது. இதில், கடல்மட்டம் உயரும்போது கடலும் நகருக்குள் புக ஆரம்பிக்கும்.
நான்கு நதிகள், ஐம்பது பெரிய கால்வாய்கள், ஐநூற்றி நாற்பது சிறிய ஓடைகள், ஏராளமான குளம் குட்டைகள், கிணறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளை சூறையாடப்பட்டதன்   விளைவாகத்தான் இவ்வளவு பெரிய வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.  
பனிரெண்டு மணிநேரத்தில் 22 செ.மீ மழை பெய்யும்போது அதனை தன்னகத்தே வைக்க எந்தவித கட்டமைப்புகளும் இல்லாதபோது, வெள்ளம் நிற்கத்தான் செய்யும்.
காலநிலை மாற்றம் என்பது உலகளாவிய பிரச்னையாக இருந்தாலும், இதற்கான தீர்வுகள் உள்ளூர் அளவில் இருக்க வேண்டும்.
அதைவிட்டுவிட்டு, கடல்மட்டம் உயர்ந்ததால்தான் சென்னை நகருக்குள் வெள்ளம் தேங்கி நிற்கிறது என்றுகூறி மக்களை நகைக்க வைப்பது, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு நான் சலைத்தவன் அல்ல என மார்தட்டுவது, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு அழகல்ல

– சமூக ஆர்வலர்  எழுத்தாளர்  பூமொழி