பெங்களூருவில் நடிகர் ராஜ்குமார் மகன் படவிழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதற்கு, காட்டமாக கண்டனம் தெரிவித்து பாமக நிறுவனர் ராமதாஸ் பேசிய பேச்சினைத் தொடர்ந்து, ரஜினி ரசிகர்கள் கொந்தளித்தனர்.
பாபா படம் ஓட வேண்டும். மிகுந்த எதிர்பார்ப்புடன் விலை கொடுத்து வாங்கிய விநியோகஸ்தர்கள் பாதிக்கப்படக்கூடாது என்றெல்லாம் கவலையில் ஆழ்ந்தார் ரஜினி. எதுவும் பேசி சிக்கலில் ஆழ்ந்து விடக்கூடாது என்பதற்காக அமைதி காத்தார் ரஜினி.
அதையும் மீறி, பல இடங்களில் பாமகவினருக்கும், ரஜினி ரசிகர்களுக்குமிடையே மோதல்கள் ஏற்பட்டன. பெரம்பலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் தியேட்டரின் திரை கிழிக்கப்பட்டது. படத்தின் கட்அவுட், பேனர்களை கிழித்தனர், படப்பெட்டி கடத்திச் செல்லப்பட்டது. விருத்தாச்சலத்தில் தியேட்டரின் மேலாளர் கடத்தப்பட்டார்.
இதனால் தமிழகம் முழுவதும் பாபா படம் திரையிடப்பட்ட தியேட்டர்களில் பெரும் பதற்றம் நிலவியது. பெரும்பான்மை தியேட்டர்களில் போலீஸ் காவலுடன் படம் ஓடியது. பாமக பலம் வாய்ந்த வட மாவட்டங்களில் பல தியேட்டர்களில் பாபா திரையிடுவது நிறுத்தி வைக்கப்பட்டது.
“உணர்ச்சி வசப்படாதீர்கள். அமைதியாக இருங்கள். வன்முறையில் ஈடுபடுபவர்களை நீதிமன்றத்தில் சந்திப்போம்” என்று ரசிகர்களிடம் ரஜினி வேண்டினார். இதனால் தமிழகம் முழுவதும் பாமகவினரிடம் அடங்கி போனார்கள் ரஜினி ரசிகர்கள்.
பாமகவை விமர்சித்து விஜயகாந்த் குரல் கொடுக்க, அவர்கள் பதிலுக்கு விஜய்காந்த் ரசிகர்களைத் தாக்கி, கஜேந்திரா படத்தை திரையிட விடமாட்டோம் என்று மிரட்டல் விடுத்தனர் பாமகவினர். இதனால் வட தமிழகத்தில் பாமகவினருக்கு பயந்து, தியேட்டர் உரிமையாளர்கள் கஜேந்திராவை திரையிட மறுத்துவிட்டனர்.
இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்த கஜேந்திரா படத்தயாரிப்பாளர் துரை, தனக்கு நேர்ந்துள்ள செலவு, கடன் பிரச்சனைகள் குறித்து கண்ணீர் விட்டுக்கதறினார். இதனால், படம் வெளியிட பிரச்சனை செய்யமாட்டோம், முடிந்தால் எனது கட்சிக்காரர்களை படம் பார்க்குமாறு அறிவுறுத்துகிறேன் என்று துரையிடம் ராமதாஸ் உறுதியளித்ததையடுத்து, கஜேந்திரா வெளியிடப்பட்டது.
திரைத்துறையினர் தங்களுக்கு எதிராக பேசினால் செயல்பட்டால், அதற்கு எதிராக கடுமையாக எதிர்வினை காட்டி ஒடுக்குவது பாமகவின் சட்டவிரோத செயல்களாகும். இப்போக்கு, வெகுமக்கள் மத்தியில் முகம்சுழிக்க வைக்கிறது. பாமக மீதான நல்லெண்ணத்தை சீர்குழைக்கிறது.
இந்நிலையில் ஜெய்பீம்.
காவல்துறையினரால் இருளர்களுக்கு நேர்ந்த மனித உரிமை மீறல்கள் குறித்த உண்மை சம்பவத்தை கருவாகக் கொண்டு, நடிகர் சூர்யா நாயகனாக நடித்த ஜெய்பீம் படம், அமேசான் நிறுவனத்தின் ப்ரைம்ஸ் வீடியோஸ் தளத்தில் அண்மையில் வெளியாகி, பெரும் வரவேற்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
அப்பாவிகள் மீது காவல்துறையினர் மேற்கொள்ளும் ஈவு இரக்கமற்ற காட்டுமிராண்டித்தனமான வன்மங்களையும், மனித உரிமை மீறல்களையும், அயோக்கியத்தனங்களையும், தோலுரித்து வெளிச்சப்படுத்தியிருக்கிறது ஜெய்பீம். அந்த வகையில், படக்குழுவினர் அனைவரையும் பாராட்டியாக வேண்டும்.
அதேவேளையில், மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் பெயரை குற்றவாளி கதாபாத்திரத்திற்கு வைத்ததும், வன்னியர்களின் அடையாளமான அக்னி கலசம் உள்ள காலண்டர் சப்இன்ஸ்பெக்டர் வீட்டில் வைக்கப்பட்டதும், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.
இதுகுறித்து, “ஒரு சமூகத்தை உயர்த்தும் நோக்கில் மற்றொரு சமூகத்தை தாழ்த்தி படம் எடுக்கக்கூடாது, அக்னி கலசம் இடம்பெற்றுள்ளதை நீக்க வேண்டும்” என்று, நடிகர் சூர்யாவுக்கு பாமகவின் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதில் அளித்த நடிகர் சூர்யா, ”ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை உணர்த்துவதே ஜெய்பீம் படத்தின் நோக்கம். எந்த சமூகத்தினரையும் அவமதிக்கவில்லை” என்று கூறினார்.
ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமுதாயத்தை தவறாகச் சித்தரிக்கப்பட்டதாகக் கூறி, ஐந்து கோடி இழப்பீடு கேட்டு நடிகர் சூர்யா மற்றும் அமேசான் நிறுவனத்துக்கு பாமகவின் வன்னியர் சங்கம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
நடிகர் சூர்யாவை தாக்குபவருக்கு ஒரு லட்சம் பரிசு என்றும் பாமகவினர் அறிவித்தனர். இயக்குனர் ஞானவேல் நடிகர் சூர்யா தயாரிப்பாளர் ஜோதிகா ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாமகவும் வன்னியர் சங்கங்களும் கோருகின்றனர்.
நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் ராஜா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி காஞ்சிபுரம் அருகே உள்ள சிவகாஞ்சி காவல்நிலையத்திலும், திருவொற்றியூர் காவல்நிலையத்திலும் பாமக வன்னியர் சங்கம் சார்பில் புகார் அளித்தனர்.
உண்மை சம்பவத்தில் சப்இன்ஸ்பெக்டர் தலித் கிறிஸ்துவர். ஆனால், படத்தில் அவரை வன்னியராகக் காட்டுவதும், வன்னியர்களின் அடையாளமான அக்னி கலசம் உள்ள காலண்டர் சப்இன்ஸ்பெக்டர் வீட்டில் வைக்கப்பட்டதும், வன்னியர்களுக்கு எதிரான அயோக்கியத்தனத்தின் உச்சம்.
காவல்துறையினரால் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்ட ராஜாகண்ணுவின் குடும்பத்தினருக்கு பெருமளவில் உதவி செய்தவர்கள் அப்பகுதி வன்னியர்கள். இதையெல்லாம் படத்தில் சொல்லாமல், காழ்ப்புணர்ச்சியுடன் படத்தை உருவாக்கியுள்ளார்கள்.
காவல்துறையினரின் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்திவிட்டு, அதனால் தாங்கள் பாதித்துவிடக்கூடாது என்ற அச்சத்தின் காரணமாக, படத்தில் தேவையில்லாமல் சில காட்சிகளை வைத்து, சாதிய மடைமாற்றம் செய்திருப்பார்களோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.
கடும் எதிர்ப்பிற்குப்பிறகு, காலண்டரில் மாற்றம் செய்துள்ளனர். அப்படி மாற்றி அமைத்ததிலும், காலண்டரில் இந்துக் கடவுளின் படம் வைக்கப்பட்டது. கிருஸ்துவர்கள் வீட்டில் இந்துக் கடவுள் காலண்டரை வைக்க மாட்டார்கள். இங்கேயும் படக்குழுவினர் தங்களின் முட்டாள்தனத்தை செய்திருக்கிறார்கள்.
இவையெல்லாம் பார்க்கும்போது, ஜெய்பீம் படத்தின் பின்புலத்தில் வன்னியர் சாதிய எதிர்ப்பு வன்ம, வக்கிரம் உக்கிரமமாக வெளிபடுகிறது.
திரைப்படம் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட வம்பையும், பொது அமைதி சீர்குழைவையும் ஏற்க முடியாது.
அந்தவகையில், பாமகவினரின் கண்டனங்களும் கோபங்களும், நியாயமானதே. இதனை நடிகர் சூர்யா உள்ளிட்ட ஜெய்பீம் படக்குழுவினர், தாங்கிடதான் வேண்டும்.
சமூக ஆர்வலர் எழுத்தாளர் பூமொழி
Leave a Reply