நீலகிரி மக்களவை தொகுதியின் உறுப்பினராக கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை இருந்தவர் குன்னூரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன். இவர் நீலகிரி மாவட்ட அதிமுகவின் அவைத் தலைவராகவும் பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், கோபாலகிருஷ்ணன் கடந்த 6ஆம் தேதியன்று மது போதையில் நிர்வாண கோலத்தில் தனது வீடு என நினைத்து பக்கத்து வீட்டில் நுழைந்தார் என்பதான வீடியோ காட்சி ஒன்று மாவட்டம் முழுதும் வைரலானது. அந்த வீடியோ பதிவில் நிர்வாண கோலத்தில் ரத்த காயத்துடன் நிற்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் புகைப்படம் மற்றும் வீடியோ இடம்பெற்றிருந்தது அதிமுகவினர் மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதுகுறித்து முன்னாள் எம்பியான கோபாலகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் கோபி, லோகேஷ் உள்ளிட்ட மூன்று பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அதேபோன்று பொது இடத்தில் அநாகரிகமாக நடந்து கொண்டது தொடர்பாக முன்னாள் எம்.பி., கோபாலகிருஷ்ணன் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்தநிலையில், கடும் தாக்குதலுக்கு உள்ளாகி மூக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு குன்னூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போதுவரை சிகிச்சை பெற்று வரும் கோபாலகிருஷ்ணனிடம் பேசியபோது நம்மிடம் அவர், தீபாவளி தினத்தன்று இரவு தனது வீட்டிலிருந்து மகள் வீட்டிற்கு தான் நடந்து சென்று கொண்டிருந்ததாகவும் அப்போது அவ்வழியே நின்று கொண்டிருந்த லோகேஷ் மற்றும் அவரது சகோதரரான கோபி ஆகியோர் தங்கள் வீட்டிற்கு வந்து செல்லுமாறு அன்பாக அழைத்ததாகவும் ஏற்கெனவே கோபி மற்றும் லோகேஷ் ஆகியோருக்கும் தனக்கும் இடையே கோயில் கட்டியது தொடர்பான முன்விரோதம் இருந்ததும் அவர்கள் அழைத்ததன் பேரில் விரோதத்தை மறந்து அவர்களது வீட்டிற்குள் சென்றதாகவும் கூறினார்.
ஆரம்பத்தில் சாதாரணமாக பேசிய அவர்கள் திடீரென தனது முகத்தில் கையால் குத்தி தாக்கியதாகவும் அதில் நிலைகுலைந்த தான், எதற்காக தாக்குகிறீர்கள்? காவல்துறையில் புகார் அளிப்பேன் என்று கூறவே அடுத்தடுத்து தன்னை தாக்கி ரத்தவெள்ளத்தில் கீழே கிடத்தியதாகவும் மேலும் தனது சட்டையை கிழித்தும் அணிந்திருந்த லுங்கியை அவிழ்த்தும் தன்னை நிர்வாணமாக்கி செல்போனில் படம் பிடித்ததாகவும் கண்ணீர் மல்க கூறியவர், மனநிலை பாதிக்கப்பட்ட பைத்தியக்காரனும்கூட தீபாவளி கொண்டாட்டங்களுக்கு இடையே நிர்வாண கோலத்தில் வீதியில் நடமாட மாட்டான் எனவும், தான் ஒரு முக்கிய பிரமுகராக இருந்து கொண்டு இப்படி ஒரு செயலில் ஈடுபடுவேனா எனவும் வேதனையோடு தெரிவித்தார்.
மேலும், தனது மனைவி வீட்டில் இருக்கும் போது நிர்வாண கோலத்தில் கோபாலகிருஷ்ணன் வீட்டிற்குள் நுழைந்தார் என்று கோபி கூறிய நிலையில், அவரது மனைவி அங்கு இல்லை எனவும் தன்னைத் தாக்குவதற்காக ஏற்கெனவே திட்டமிட்டு கோபி மற்றும் அவரது சகோதரர் மட்டுமே அங்கு இருந்ததாகவும் கூறிய கோபாலகிருஷ்ணன் தன்னை வீடியோ பதிவு செய்த உடன் குன்னூர் பகுதி அதிமுக வாட்ஸ்அப் குழுவில் அதனை பகிர்ந்ததுடன் ஒரு சில பத்திரிகை மற்றும் ஊடகத் துறையினருக்கும் அந்த வீடியோ பதிவுகளை அவர்கள் பகிர்ந்ததாகவும் கூறினார்.
அதோடு, கடந்த 40 ஆண்டு காலமாக அதிமுகவில் சாதாரண உறுப்பினரிலிருந்து கிளைச் செயலாளர், நகரமன்ற உறுப்பினர், நகராட்சித் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் என அடுத்தடுத்த பதவிகளைப் பெற்று வளர்ச்சியில் இருந்த என்னை உனது அரசியல் வாழ்க்கையை முடித்து வைக்கிறேன் என்று கூறி அவர்கள் அடித்ததும் வீடியோ பதிவு செய்ததும் என்னை வேதனையில் கசக்கிப் பிழிகிறது என கண்ணீர் சிந்தும் அவர், கோபியின் வீட்டில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ள நிலையில், அந்த சிசிடிவி காட்சிகளை முழுமையாக ஆய்வு செய்தால் அங்கு நடந்த சம்பவங்களை முழுமையாகத் தெரிந்து கொள்ளலாம் எனவும் கூறினார்.
இது ஒருபுறமிருக்க, தான் படுகாயமடைந்து மருத்துவமனையில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சூழலில் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரான ஏ.கே.செல்வராஜ் மட்டுமே தன்னை தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியதாகவும் மற்றபடி அதிமுக கட்சியிலிருந்து யாரொருவரும் தன்னை வந்து சந்திக்கவோ அலைபேசியில் தொடர்பு கொண்டு ஒரு ஆறுதல் சொல்லவோ இல்லை எனவும் வேதனையுடன் குறிப்பிடும் கோபாலகிருஷ்ணன், கட்சிக்காக பல முறை சிறை சென்றும், பல போராட்டங்கள் நடத்தியும், எண்ணற்ற மக்கள் பணி செய்தும் எந்தவித முறைகேடுகளிலும் ஈடுபடாமல் வாழ்ந்து வரும் தன்மீது இப்படி ஒரு பழிச்சொல் வந்தபோது யாருமே ஆறுதல் சொல்லவில்லையே எனவும் கண்ணீர்மல்கக் கூறினார்.
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த இந்த கோபாலகிருஷ்ணன் வளர்ந்துவிடக்கூடாது என்பதில் எதிர்க்கட்சியினர் கூட முனைப்பு காட்டவில்லை. ஆனால், தான் சார்ந்துள்ள கட்சியின் மாவட்ட செயலாளரே தன்னை ஒவ்வொரு நிகழ்விலும் அவமதிப்பது வேதனைக்குரியது என்றாலும் இப்படி ஒரு சூழலில் என்னுடன் சக நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியவரும் இனிய நண்பருமான கே.ஆர்.அர்ஜுனன் குன்னூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சாந்தி ராமு ஆகியோர் கூட என்னை சந்திக்காதது கடும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது எனவும் கூறுவதுடன் ஒட்டுமொத்த நீலகிரி மாவட்ட அதிமுகவும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்தவர்கள் கையில்தான் இருக்க வேண்டும் என மாவட்ட தலைமை எண்ணுவதால்தான் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த என்னை முற்றிலும் அவர்கள் புறக்கணிக்கிறார்கள் எனவும் கடும் குற்றச்சாட்டை முன்வைத்தார் கோபாலகிருஷ்ணன்.
மேலும், தற்போதுள்ள நீலகிரி மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் மற்றும் சில நிர்வாகிகளின் கருத்தை ஒருமித்த கருத்தாக ஏற்று கட்சித் தலைமை தன்னை அவைத்தலைவர் பதவியிலிருந்து நீக்கி இருப்பதாகவும், நடந்த சம்பவம் குறித்து கட்சித் தலைமைக்கு தானும் தன்னிலை விளக்கம் அளித்து இருப்பதாகவும், அதனடிப்படையில் தனது அரசியல் அனுபவம், கட்சிக்காக ஆற்றிய பணிகள் ஆகியவற்றின் பலனாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் மீண்டும் தனக்கு கட்சி பதவியை வழங்குவார்கள் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் அடுத்தடுத்து பல்வேறு மாற்றங்கள், விமர்சனங்கள், முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் ஆகியோர் திமுகவில் இணைந்தது, கட்சி தலைமை மீது விமர்சனங்கள் வைப்பது போன்றவை தொடர்கதையாகி உள்ள நிலையில், கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ள நீலகிரி மாவட்ட முன்னாள் எம்.பி கோபாலகிருஷ்ணன் மாவட்ட அதிமுக தலைமை நிர்வாகிகள் சாதிய ஒடுக்குமுறையில் ஈடுபடுகின்றனர் என விமர்சித்து இருப்பது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது..!
– அருண் சங்கீத்
Leave a Reply