Save 20% off! Join our newsletter and get 20% off right away!

நெஞ்சிலும் முதுகிலும் குத்திய கழகங்கள்.. – கொந்தளிக்கும் இஸ்லாமியர்கள்.

1997 கோவையில் அந்தோணி செல்வராஜ் என்ற காவலர் கொலை செய்யப்பட்டார். காவலர் அந்தோணி செல்வராஜ் கிறிஸ்தவர் என்பதை மறைத்து, இந்துவை முஸ்லிம்கள் கொலை செய்துவிட்டார்கள் என்ற வன்மமான செய்தியை தீயாய்ப்பரப்பி,

கோவையில் அன்றிருந்த காவல்துறையின் சில ஃபாசிச அதிகாரிகள் மற்றும் காவலர்களின் தூண்டுதலுடனும் துணையோடும், ஹிந்துத்துவ அமைப்பினர் செய்த பெரும் வன்முறையால், பத்தொன்பது அப்பாவி முஸ்லிம்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். முஸ்லிம்களின் கடைகள் வீடுகள் உள்ளிட்ட ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான  சொத்துக்கள் சூறையாடப்பட்டு தீக்கிறையாக்கப்பட்டது. துணை ராணுவப்படையைக் கொண்டு இந்த பெருங்கலவரத்தை ஒடுக்கினர்.

இந்த பெருங்கலவரத்திற்கு எதிராக, கோபத்தின் வெளிப்பாடாக ஆவேசப்பட்டு, கோவையில் 1998 பிப்ரவரி 14ல் குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டதில், அப்பாவிகள் பலர் உயிரிழந்தனர்.  பலர் படுகாயமடைந்தனர்.

இந்த வழக்குகளில் அப்பாவிகள் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு, சிலர் விடுதலை செய்யப்பட்டனர். கொலை வழக்குகள் மற்றும் குண்டு வெடிப்பு வழக்கில் தண்டனை பெற்ற பலர், இருபதாண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர்.

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் 302, 307, 120 B 109  IPC & Explosive Act ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் ஆயுள் தண்டனைகள் பெற்று தற்போது கோவை சிறையில் உள்ளவர்கள் :

பாஷா, முஹம்மது அன்சாரி, தாஜூதீன், நவாப்கான், ஷர்புதீன், ஹக்கீம், அபுதாஹிர், முஹம்மது ரபீக், மோனப்பா (எ) முஹம்மது ஹஸன், அப்துல் ரஜாக், முஹம்மது ஆஜம், சேட் (எ) சாந்த் முஹம்மது, ரியாஸ் அஹமது, ஹக்கீம், முஹம்மது அலி, செய்யது முஹம்மது புஹாரி, மூஸா (எ) மூஸா மொய்தீன்.

கொலை வழக்குகளில் 302 IPC சட்டப் பிரிவின் கீழ் ஆயுள் தண்டனை பெற்று சென்னை, கோவை, பாளையங்கோட்டை, கடலூர் ஆகிய சிறைகளில் தற்போது உள்ளவர்கள் :

ஹாரூன் பாஷா, சித்தீக் அலி, ரஹ்மத்துல்லாகான், ஷேக் ஜிந்தா மதார், அப்துல்காதர் (எ) உமர் ஃபாரூக், ஜாஹிர் ஹூசைன், முஹம்மது கான், ஜூபைர், அப்துல் அஜீஸ், ஊம் பாபு, ஷாஹூல் ஹமீது, நெட்டை இப்ராஹீம், யாசுதீன், கூலை இப்ராஹீம் (எ) இப்ராஹீம், அஸ்லம், ஆஷிக், குண்டு ஜாஹிர் (எ) ஜாஹிர் ஹூசைன், பிரஸ் அபு (எ) அபுதாஹிர், லவ் ஹக்கீம் (எ) ஹக்கீம், சையத் அலி, அபுதாஹிர்.

கடும் நோய்களால் சிறைக்குள் மரணமடைந்த இஸ்லாமிய ஆயுள் தண்டனை சிறைவாசிகள் :

2002ல் தஸ்தஹீர் மரணமடைந்தபோது வயது சுமார் 75. 98ல் கைதாகி ஐந்து வருடம் சிறையில் இருந்தவர்.

2007ல் மரணமடந்த சபூர் ரஹ்மான் வயது சுமார் 35. கொலை மற்றும் குண்டுவெடிப்பு வழக்கில் 98ல் கைதாகி 12வருடம் சிறையில் இருந்தவர்.

2019ல் மரணமடைந்த ரிஜ்வான் வயது சுமார் 40. கொலை வழக்கில் 2019ல் கைதாகி  
20 வருடம் சிறையில் இருந்தவர்.

2019ல் மரணமடைந்த ஒஜீர் அஹமது வயது சுமார் 42.
கலவர வழக்கிலும் அதன் தொடர்ச்சியாக குண்டுவெடிப்பு வழக்கிலும் 98ல் கைதாகி 19வருடம் சிறையில் இருந்தவர்.

இஸ்லாமிய ஆயுல் தண்டனை சிறைவாசிகளின் மரணமடைந்தோர் பட்டியல் இப்படியாக இருக்க, கடும் நோயுற்றோர் பட்டியல் இதைவிட பெரிதாக நீள்கிறது. அதைவிட அவர்கள் உறவுகளின் வாழ்வாதாரமும் குடும்ப சூழல்களும் குறிப்பாக, அவர்களின் குழந்தைகள் மனைவி தாய் தந்தை சகோதரிகளின் கண்ணீர் கதைகள், சொல்லிலும் எழுத்திலும் வடிக்க முடியாத கொடூரங்கள்.

ஆயுள் தண்டனை முறையை, பல்வேறு மாநிலங்கள் பலவிதமாக கையாள்கிறது. தமிழக அரசோ, பதினான்கு ஆண்டுகள் என வரையறுத்திருக்கிறது.

1967ல் அண்ணா முதல்வராக இருந்தபோது, பனிரெண்டு ஆண்டுகள் சிறையில் இருந்தவர்களை விடுதலை செய்தார். கேரளாவில் இஎம்எஸ் நம்பூதிரிபாடு முதல்வராக இருந்தபோது, ஏழாண்டுகள் சிறை தண்டனையில் இருந்தவர்களை விடுதலை செய்தார்.

அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 161, கருணை அடிப்படையில் ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய வாய்ப்பளிக்கிறது.

இதனடிப்படையில், காந்தியை சுட்டுக் கொலை செய்த வழக்கில், நாதுராம் கோட்சேவின் சகோதரன் வினய் கோபால் கோட்சேவை, பதினெட்டாண்டு சிறைத் தண்டனைக்குப்பின், மஹாராஷ்டிர அரசு விடுதலை செய்தது.

சம்பள் பள்ளத்தாக்கு கொள்ளைக்காரி பூலான்தேவிக்கு, உத்தரபிரதேச  அரசு பொதுமன்னிப்பு வழங்கி, விடுதலை செய்தது.

ஆயுதப் போராட்டம் நடத்திய நக்ஸலைட்டுகளுக்கு, மேற்குவங்கத்தில் முதல்வராக இருந்த ஜோதிபாசின் அரசு, பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தது.

மரண தண்டனை வழங்கப்பட்ட   தியாகு, புலவர் கலியபெருமாள், கிருஷ்ணசாமி, ரெங்கசாமி, பஞ்சலிங்கம், ரங்கசாமி ஆகியோருக்கு, 1975ல் கருணாநிதி முதல்வராக இருந்தபோது தமிழக அரசு விடுதலை வழங்கியது.

தஞ்சை கீழவெண்மணியில்,  குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் என 44 பேர்  கொல்லப்பட்ட வழக்கில்,  பத்துபேரும் பத்தாண்டுகளில் விடுதலை செய்யப்பட்டனர்.

1997 அன்று ஒரே நேரத்தில் ஏழுபேர் கொல்லப்பட்ட சாதிய வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஆதிக்க சாதியினர் பதினேழு பேரில் 2008ல் மூவரும், 2019ல் பதினான்கு பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

ஆயுத வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற  ஹிந்தி நடிகர் சஞ்சய்தத்தை மஹாராஷ்டிராவின் அப்போதைய பிஜெபி சிவசேனா கூட்டரசு விடுதலை செய்தது. இப்படியாக, பல மாநிலங்களிலும் பலரும் விடுதலையாகினர்.

எல்லாவற்றிற்கும் மேலாக,
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகியிருந்த முஹம்மது இப்ராஹீம், அப்துல் ரஹ்மான், அப்துல் ஃபாரூக், அப்பாஸ், முஹம்மது ரபீக், அப்துல் ரவூப், அஷ்ரப், யூசுப் (எ) ஷாஜஹான், பக்ருதீன் அலி அஹமது, ஷாஹூல் ஹமீது ஆகிய பத்துபேர் 2009ல் கருணாநிதி ஆட்சியில் விடுதலை செய்யப்பட்டனர். 2009ல் விடுதலை செய்யப்பட்ட தண்டனை சிறைவாசிகள் மேற்கண்ட பத்துபேர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

302 IPC தண்டனையுடன் இணைந்து சில குறிப்பிட்ட குற்றப்பிரிவுகளின் கீழ் தண்டனைப் பெற்ற சிறைவாசிகளுக்கு தண்டனைக் குறைப்பு வழங்கிடக் கூடாது என, அகில இந்திய சிறை சீர்திருத்த கமிட்டி G.o : 1762/1987 மூலம் அரசுகளுக்கு பரிந்துரைத்தது. இப்படி மறுக்கப்பட்டவர்களையும் இருபதாண்டுகள் கழிந்தால் விடுதலை செய்ய வாய்ப்புள்ள நிலையிலும்,

அண்ணா பிறந்தநாளில் G.o : 1326/2007, G.o : 1155/2008 படி விடுதலைக்கு தகுதி பெற்றும், தமிழக உள்துறைச் செயலரின் 84862/Pri IV 2007- 2ன் படி இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு மட்டும் விடுதலை மறுக்கப்பட்டது.

அதேவேளையில், G.o : 1762/1987ன் படி தகுதியற்ற சிறைவாசிகளையும் மேற்கண்ட அகில இந்திய சிறை சீர்திருத்த அரசாணையைத் தமிழக அரசு தளர்த்தி, G.o : 1522/1997, G.o : 671/2007, G.o : 792/2009ன் படி ஏழாண்டுகள் பூர்த்தி செய்த சிறைவாசிகளை விடுதலை செய்தபோதும், சாதி மத வழக்கு என்ற அடிப்படையில் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யவில்லை.

G.o : 1155/2008ன் படி தூக்கு தண்டனையிலிருந்து ஆயுள் தண்டனை பெற்றவர்களுக்கு பொது மன்னிப்பு கிடையாது என்றிருந்தும், எம்ஜிஆர் நூற்றாண்டை முன்னிட்டு, G.o : 64/2018ன் மூலம் அதிமுக அரசு விதிகளைத் தளர்த்தி, தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்தது. அப்போதும் இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு விடுதலை மறுக்கப்பட்டது.

G.o : 1762/1987ன் அரசாணையில் IPC471ன் கீழ் தண்டிக்கப்பட்டவர்களை விடுதலை செய்யக்கூடாது என தடை இருந்தும், தமிழக அரசு G.o : 792/2009ல் சிலரை விடுதலை செய்துள்ளது. அப்போதும் இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு விடுதலை மறுக்கப்பட்டது.

SLE என்ற அரிதான கொடூர நோயினால் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து கடந்த பத்தாண்டுகளில் ஆயிரத்து ஐந்நூறு முறை டயாலிசிஸ் செய்து உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள அபுதாஹிரை, G.o : 1762/1987, G.o : 1155/2008, G.o : 64/2018ன் படியும், சிறை நடைமுறை நூல் தொகுதி 2 விதி எண் : 632, 633ன் படியும் விடுதலை செய்யலாம். ஆனாலும் அவருக்கு விடுதலை மறுக்கப்படுகிறது.

G.o: 1155/2008, G.o : 64/20018ன் படி தமிழக அரசால் விடுதலை மறுக்கப்பட்ட கொலை வழக்கில் தண்டனை பெற்ற, சிராஜூதீன், ஷாஜஹான், அமானுல்லாஹ், ஜப்ரு (எ) சையது ஜபீர் அஹமது ஆகிய ஐந்து இஸ்லாமிய சிறைவாசிகளையும் விடுதலை செய்ய, உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் Criminal Appeal No : 144, 145, 147, 148/2020 SLB 1149 Of 2019 23.01.2020 HCP No : 1606 Of 2017. ஆகிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கியதையடுத்து, தனி பொது மன்னிப்பு அரசாணையை தமிழக அரசு வெளியிட்டு, வழக்கு தொடுத்த ஐந்து இஸ்லாமிய சிறைவாசிகளில் 2019ல் ஒருவரையும், 2021 இந்தாண்டு துவக்கத்தில் நான்குபேரையும் விடுதலை செய்தது. அதே சமயம், மேற்கண்ட ஐந்துபேரின் வழக்குகளில் உள்ள நீதிமன்றத்தில் முறையிடாத மற்ற சிறைவாசிகளை விடுதலை செய்ய தமிழக அரசு மறுக்கிறது.

சிறைவாசிகளை விடுதலை செய்யும்போது பாரபட்சம் காட்டக்கூடாது என உச்சநீதிமன்றம் மேல்முறையீட்டு வழக்கு Cri : 30/2005ல் கூறியுள்ளது. பதினான்கு வருடம் தண்டனை பெற்ற சிறைவாசிகளை விடுதலை செய்வது மாநில அரசின் அதிகாரத்திற்குட்பட்டது என, மேல்முறையீட்டு வழக்கு எண் : 722/2021ல் வழிகாட்டியுள்ளது.

இந்நிலையில், சென்ற அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி அரசு தயாரித்த அதே அரசாணையை, தற்போது திமுகவின் ஸ்டாலின் அரசும் வெளியிட்டுள்ளது.

அண்ணாவின் நூற்றிப் பதிமூன்றாவது பிறந்த நாளை முன்னிட்டு, எழுநூறு ஆயுள் தண்டனை சிறைவாசிகளை விடுதலை செய்வது குறித்து ஸ்டாலின் அரசு வெளியிட்டிருக்கும் G.o : 488/2001ன் படி, மீண்டும் இஸ்லாமிய சிறைவாசிகளுக்கான விடுதலை மறுக்கப்பட்டிருப்பது உறுதிபடுத்தப்பட்டிருக்கிறது.

இந்த அரசாணையில், பாலியல் பலாத்காரம் செய்தவர்கள், அரசுக்கு எதிராக செயல்பட்டவர்கள், சாதி,மத மோதல்களில் ஈடுபட்டவர்கள் உள்ளிட்ட பதினேழு வகையான குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு
கருணை விடுதலை இல்லை என்கிறது.  இது, சமூகநீதியை புறக்கணிக்கும் பாரபட்சமான முடிவாகும்.

இதனால், பிஜெபியுடன் கைக்கோர்த்து அதிமுக நெஞ்சி குத்தியது போல, இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்வதாகக்கூறி, தேர்தலில் இஸ்லாமியர்களின் ஓட்டை ஒட்டுமொத்தமாக வாங்கிய திமுக, பிஜெபிக்கு பயந்து முதுகில் குத்துகிறது என்ற கண்டன முழக்கத்துடன்,

தமிழகம் முழுவதும் ஸ்டாலின் அரசுக்கு எதிராகவும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எதிராகவும், அதற்கு ஆதரவளித்த இஸ்லாமிய கட்சிகளுக்கும் அமைப்புகளுக்கும் எதிராக, ஒட்டுமொத்த இல்லாமிய மக்களும் குறிப்பாக ஆயுள் தண்டனை சிறைவாசிகளின் குடும்பங்கள் அணிதிரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இஸ்லாமிய சிறைவாசிகளின் உறவினர்கள்,  கோவையில் சென்ற வாரம் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டு, தங்களின் பிள்ளைகளுடன்
கைதாகியது, பார்ப்போரைக் கண்ணீர் மல்கச் செய்தது.

தமிழக அரசின் தற்போதைய அரசாணை 488/2021ல் உள்ள B(10), B(9), B(iii) ஆகிய விதிகளும், B(4), 153 A, 155 AA, 153 B ஆகிய பிரிவுகளைத் தளர்த்தினால் மட்டுமே இஸ்லாமிய ஆயுள் தண்டனை சிறைவாசிகளின் விடுதலைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும். இதனை கவனத்தில் கொண்டு, இஸ்லாமியர்களின் ஏகபோக வாக்குகளை வாங்கி முதல்வராகியிருக்கும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், மனசாட்சி மிகுந்த நடவடிக்கைகள் எடுப்பார் என நம்புவோம்.

மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை சிறைவாசிகளின் விடுதலையில், கருணை மட்டும் இருக்க வேண்டுமே தவிர, அதில் சட்டப்பிரிவுகளும் பாகுபாடுகளும் விறுப்பு வெறுப்புகளும், முள்முனையளவும் இருக்கக் கூடாது என்பதை, மதசார்பற்ற தமிழக அரசின் கனிவான கவனத்திற்கு நாமும் முன்வைப்போம்.


சமூக ஆர்வலர் எழுத்தாளர் பூமொழி