Save 20% off! Join our newsletter and get 20% off right away!

60-ஐ கொடுங்கள் ஆட்சியை அமைத்துக் காட்டுகிறேன் ராமதாஸின் ராஜதந்திரம் என்ன ?

தமிழகத்தில் தவிர்க்க முடியாத ஒரு கட்சியாக பாமக திகழ்வதை யாராலும் மறுக்க முடியாது. ஒரு காலத்தில் ராமதாஸைச் சமூகநீதி போராளி  என்று கூறினார்கள். அந்த அளவுக்கு அப்பழுக்கற்ற மனிதர். செயல்வீரர். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு  தமிழக அரசியலைப் புரட்டிப்போட்ட பெருமை உண்டு. தமிழகத்தின் இருபெரும் ஜாம்பவான்கள் கலைஞர் , எம் ஜி ஆர் இருவரையுமே அசைத்துப் பார்த்தவர். இப்போது சீமானைச் சுற்றி ஒரு கூட்டம் இருப்பதைப் போல அப்போது ராமதாஸை சுற்றி இளைய தலைமுறை சுற்றி வந்தது. பிற கட்சித் தலைவர்களும்  யார் இந்த மனிதர் என்று உற்று நோக்கினர்.அப்படி பெரியார், அம்பேத்கர், கம்யூனிச சிந்தனைகளைக் கலவையாக்கி பாமக என்ற கட்சியை உருவாக்கினார். எம் ஜி ஆர் ஆட்சிக் காலத்தில் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அனைத்து  மரங்களையும் வெற்றி புரட்சி ஏற்படுத்திய பிதாமகன். அன்று இழந்த செல்வாக்கை இன்று வரை அவரால் மீட்க முடியவில்லை.  உன்மையில் ராமதாஸை ஒரு விஷயத்தில் பாராட்டலாம். அது என்னவென்றால் இதுவரை முதல்வர், அமைச்சர் இப்படி எந்த பதவிக்கும் ஆசைப்படாதவர். அதற்கான தகுதிகள் இருந்தும் சமரசத்துக்கு இடம் தரித்தவர் என்ற பெருமை உள்ளவர். அப்படிப்பட்டவரின் நிலை இன்று மிகப் பரிதாபமாக இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் அவரின்  கொள்கையும் , கோட்பாடுகளும் யாராலும் புரிந்துகொள்ள முடியாத புதிர் என்றே கூறலாம். காரணம் சுயநல அரசியல் என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை .

”இந்திய அளவில் கட்சி என்று சொல்வதைவிட நாம் செய்வது, செய்யப்போவது கட்சியல்ல பாசப்பிணைப்பு. பலரும் நம்மைவிட்டுப் போய்விட்டார்கள். நீங்கள் எல்லாம் அருமையான நெல்மணிகள். அன்று முதல் இன்றுவரை என்னோடு பயணிக்கிறீர்கள்” என்று மிக வேதனை ”தெரிவித்துள்ளார் ராமதாஸ் என்றால் அவர் விரக்தியில் உள்ளார் என்றே அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். ”பாமக ஆரம்பித்து 42 ஆண்டுகள் ஆன போதிலும் ஆட்சி அதிகாரத்திற்கு வர முடியவில்லை .சட்டமன்ற தேர்தலில் குறைந்தது 60 இடங்களிலாவது பாமக வெற்றி பெற வேண்டும். பதவி சுகத்தை அனுபவித்தவர்கள் கோடிக் கணக்கில் கட்சிக்குச் செலவு செய்தால் கூட ஓடிவிட்டார்கள் என்றும், ஆதரவான தொகுதியைத் தேர்ந்தெடுத்து அங்கு இளைஞர்கள், பெண்களிடம் நமது கொள்கைகளை சொல்லுங்கள் அங்கு நமது வாக்குகள் கொட்டிக்கிடக்கிறது.அன்புமணி ராமதாஸ் போன்ற திறமையானவரைப் பார்க்க முடியாது. அப்படி இருந்தும் ஏன் முதல்வர் பதவியைத் தமிழக மக்கள் தர மறுக்கிறார்கள்?” என்று வேதனைப்பட்டுள்ளார்

 தான் ஆரம்பக் காலத்தில் எப்படியெல்லாம் பாடுபட்டேன், ஓடி ஓடி உழைத்தேன் உள்ளாட்சித் தேர்தலில் கட்சியினரே துரோகம் செய்து விட்டனர். போட்டியிடுவதற்குக் கூட ஆட்கள் இல்லாத நிலைதான் ஏற்பட்டுள்ளது என்றும் வேதனை தெரிவித்திருந்தார். ராமதாஸைப் பொறுத்தவரை அவரின் ஒரே கனவு தனது  மகன் அன்புமணி ராமதாஸ் முதல்வராக வேண்டும். அதுவும் தான் உயிருடன் இருக்கும்போதே கோட்டையில் முதல்வராக அமர வைக்க வேண்டும் என்பது அவரின் அளவிட முடியாத ஆசை. சரி இது எப்படி சாத்தியம் என்று மண்டையைக் குழப்பிக்கொள்கிறார்கள் அவரின் சகாக்கள் . அவரின் கவலை நியாயமானது என்பதை யாரும் மறுக்கவில்லை.ஆனால்  எதற்காக அவர் கட்சியைத் தொடங்கினார் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். அவர் கட்சி தொடங்கியபோது ஏராளமான  வாக்குறுதிகளை அளித்தார். அதில் முக்கியமான ஒன்று  குடும்ப அரசியல் செய்ய மாட்டேன். என் குடும்பத்திலிருந்து யாரும் அரசியலுக்கு வந்தால் என்னைச் சாட்டையால் அடியுங்கள் என்று முழங்கியதை யாரும் மறக்க முடியாது.  இதுதான் அரசியல் ..கவுண்டமணி சொல்வதைப்போல அரசியலில் இதெல்லாம் சகஜம் என்பது மாதிரி இருக்கிறது. பாமகவின் பெரும் பலமே  வட மாவட்டங்கள்தான் . காரணம் வன்னிய இன  மக்கள் மட்டுமே அவரின் பலம் ஆரம்பத்திலிருந்து அதே நிலைப்பாடு. இடையில் அவரிடம் சற்று மாற்றம் தெரிந்தது. அது இப்போது அடியோடு மாறி விட்டது. மூத்த தலைவர் என்பதை மறந்து பேச ஆரம்பித்துவிட்டார். இவரது கட்சிக்கு பெரும் சவாலாக இருந்து நடிகர் விஜயகாந்த். திமுக, அதிமுக என்ற இரும் பெரும் சக்திகள் தமிழகத்தில் இருக்கும்வரை பாமக முன்னேற வாய்ப்பில்லை. யார் முதுகிலாவது சவாரி செய்தால் மட்டுமே ராமதாஸால் மீண்டும் ஜெயிக்க முடியும். தேர்தல் மட்டுமே அவரின் கணக்காகஇருக்கிறது. தற்போது அவர் அதிமுகவிலிருந்து விலகியே இருக்கிறார் திமுகவுடன் தொடர்பில் இருக்கிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. அதற்கு மிகச் சரியான , நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தனித்து நிற்பதாக அவர் எடுத்த முடிவுதான் . அதே வேளையில் தங்கள் மக்களின் மேம்பாட்டுக்கு வன்னியர் இட  ஒதுக்கீடு கேட்டு அவர் பிடிவாதம் செய்தது. இதன்மூலம் தனது இழந்த செல்வாக்கை  மீண்டும் பெறலாம் என்ற அவரின் கனவு கலைந்து விட்டது.இனி அவர் செய்ய வேண்டியது இரண்டு விஷயங்கள் தான். ஒன்று தன் சமூகம் என்ற ஆயுதத்தை அவரை கையில் எடுக்கக் கூடாது. ஒரு காலத்தில் சமூக நீதிக்கான இயக்கம் என்று பெயர் எடுத்த ராமதாஸ்.அனைத்து  சமுதாயத்தையும் அரவணைக்க வேண்டும். இதற்குச் சிறந்த உதாரணம் தேமுதிக எனலாம். விஜயகாந்த் அணுகுமுறை ஒரு சமூகம்சார்ந்த தாக இல்லை . வன்னியர்கள் அதிகம் ஆதரவு கொடுத்தார்கள் என்றால் அவரின் சரியான அரசியல் முன் எடுப்புதான் காரணம். நினைத்த நேரம் நினைத்த கட்சி, வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத அவரின் செயல்பாடு.சரி தந்தைதான் இப்படி. இளைய தலைமுறை என்று மார் தட்டிக்கொள்ளும் அன்புமணியாவது கொஞ்சம் மாறி வருவார்,மாற்றுச் சிந்தனை கொண்டவர் என்றெல்லாம் இளம் தலைமுறையினர் நம்பினர். ஆனால்  அவரின் கொள்கை தனது தந்தைவழியில்தான் அமைந்திருந்தது. இன்னும் சாதி கட்சி என்ற முத்திரை இருக்கிறது. அதை அவர் மாற்றினால் மட்டுமே அரசியலிலே வெற்றிக்கு வழி கிடைக்கும் எனக் கூறலாம். முதல்வர் பதவி என்பது அத்தனை சுலபமான காரியமல்ல. தமிழக மக்கள் மிகத் தெளிவானவர்கள். இரண்டு  திராவிட இயக்கங்கள் இருக்கும்வரை மூன்றாவதை யாரும் யோசிக்கவில்லை பாமக பாணியில் பாஜகவும் தலைகீழாக நின்றும் மக்களின் மனதை அவர்கள் தொடவில்லை . அவர்களும் உயர் சாதி கட்சி, ஆதிக்க சக்தி என்ற கருத்து  மக்கள்  மனதில்   நன்கு பதிந்து விட்டது. .இந்த நிலையில் அவரின் சமீபத்திய அறிவிப்பு பெரும் கேள்விகளை எழுப்பி இருக்கிறது. வெறும் 60 சீட்டுகள் போதும். அன்புமணி முதல்வராவர் என்று கூறி வருகிறார். இது எப்படி நடக்கும் என்பதே பலரின் கேள்வி. அவரின் எண்ணம். தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் .வட மாவட்டங்கள் மட்டும் போதும் என்பதே அவர் போடும் கணக்கு. இதற்கு அவர் செய்ய உள்ள ராஜதந்திர கணக்கு மத்திய பாஜக அரசுடன் இணைந்து பயணிப்பது. மாநிலங்களை எப்படியாவது பிரித்து இரு கட்சிகளும் சொற்ப சட்டமன்ற உறுப்பினர்களை பெற்று கூட்டணி துணையுடன் ஆட்சிக்கட்டிலில் ஏறலாம் என்பதே.அது நடக்குமா என்பது குதிரைக்கொம்புதான். இப்போதும் ஒன்றும் குடி முழுகிப் போகவில்லை. நல்ல பிரச்னைகளை  கையில் எடுத்து அவர் அரசியல் செய்யலாம்.இன்று அதிமுக பலவீனமாக இருக்கும் நிலையில் அதைப் பயன்படுத்தாமல் சாதிய  பிற்போக்குத்தனமான செயலை கைவிட வேண்டும். ஜெய் பீம் போன்ற சினிமா சார்ந்த பிரச்னைகளை கையில் எடுத்த காரணத்தால் அவரின் இமேஜ் பாதிக்கப்பட்டு விட்டது எனலாம்.விரைவில் அன்புமணியைக் கட்சித் தலைவராக்கி கோதாவில் இறங்க ராமதாஸ் திட்டம் தேடி இருக்கிறார்

இனி கண்டிப்பாக்க பாமக ,அதிமுக மற்றும் திமுகவுடன் கூட்டணி வைக்காது. பாஜகவையும் இன்ன பிற கட்சிகளையும் கையில் வைத்துக்கொண்டு ஆட்டம் போடலாம் என்பதைத் தவிர வேறு எதுvம் இருக்காது. அது எந்த அளவுக்கு உண்மையாக இருக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

-எஸ். ரவீந்திரன்