தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக அதிமுக தலைமை அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்று தெரியாமல் தவிக்கிறது. நாளரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக பிரச்னைகள் தலை தூக்கி வருகிறது. எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த சமயத்தில் என்ன செய்கிறோம் எது செய்கிறோம் என்று தெரியாமல் தலைக்கனத்தில் அலைந்தார். நேரடி தேர்தலைச் சந்திக்காமல் சசிகலா போட்ட முதல்வர் பதவியில் அபார சுகத்தை அனுபவித்து விட்டார். ஏகப்பட்ட ஊழல், கொள்ளை ஒன்றே கொள்கை என்ற கோட்பாட்டுடன் சகட்டு மேனிக்கு அமைச்சர்கள் தங்கள் கஜானாவை நிரப்பிக் கொண்டார்கள். இன்னும் சொல்வதென்றால் இனி ஜென்மத்துக்கும் பதவி கிடைக்காது என்று தெரிந்தே இந்த குவிப்பில் ஈடுபட்டனர். அந்த சம்பவங்கள் அனைத்தும் இன்று ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்து கொண்டிருக்கிறது. கிணறு வெட்டப் பூத கிளம்பிய கதையாகத் தோண்டத் தோண்ட புதையல் மாதிரி ஊழல் முறைகேடுகள் வெளியாகின்றன.
திமுகவினர் மீது பழி வாங்கு நடவடிக்கை . எந்த கேள்வி கேட்டாலும் எடக்கு முடக்காய் பேசுவது. சசிகலாவைச் சகட்டு மேனிக்கு வசை பாடி , நன்றி மறந்த செயல்களில் அதிமுகவினர் செயல்பட்டனர். வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்ற கதையாக இன்று நடப்பவை எடப்பாடிக்கு ரொம்பவே பொருந்தும் எனலாம். அமைச்சர்கள் ஓ. பி. எஸ். , வேலுமணி, ராஜேந்திர பாலாஜி, விஜய பாஸ்கர், என்று வருமானவரித்துறை சோதனை நடத்தியது. அங்கு கிடைத்த ஆவணம், பணம் அதிர்ச்சியில் ஆளாக்கியது. இதில் இன்னும் ஒரு அறிவியல் பூர்வமான மோசடியும் கண்டறியப்பட்டது. அதுதான் கொள்ளையடித்த பணம் எல்லாம் பிட்காயின், க்ரிப்டோ கரன்சி முறையில் முதலீடு செய்யப்பட்டது. இப்படி தொடர்ந்து கிடைக்கும் தகவல்கள் ஒரு பக்கம் இருக்கட்டும் எடப்பாடி செய்த அனைத்து செயல்களும் அவசரக்கோலத்தில் அள்ளித்தெளித்தவை எனலாம். தேர்தலுக்காக வன்னியர் இட ஒதுக்கீடு, ஜெயலலிதா நினைவில்லம் அரசுடமை என்று அவசரசட்டங்கள் இயற்றியது அனைவரின் ஏகோபித்த எதிர்ப்பை சம்பாதித்துள்ளது.
சசிகலாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அ.தி.மு.க-வில் இருந்து பிரிந்து சென்ற ஓ.பி.எஸ், ஆகஸ்ட் 2017-ல் எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க-வுடன் மீண்டும் சேர்ந்து கொண்டார். அப்போது இருவருக்கும் இடையில் சில ஒப்பந்தங்கள் போடப்பட்டன. அதன் ஒரு பகுதி
வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்ற வேண்டும் என்பது. அதன்படி ஆகஸ்ட் 17-ம் தேதி எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அரசாணையும் வெளியிடப்பட்டது.அன்று ஆட்சியராக இருந்த அன்புச்செல்வன் மற்றும் அதிகாரிகள், நேரில் ஆய்வு செய்தனர்.பின்னர் அதற்கான ஆணையும் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இப்படி எடுக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமியின் முடிவு இன்று நீதிமன்றத்தின் மூலம் தவிடு பொடியாக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து கூறிய ஜெ. தீபா ,எங்களுடனான உறவை முறித்துக்கொள்ள ஜெயலலிதா எப்போதுமே விரும்பியதில்லை. நமது நாட்டுச் சட்டப்படி, அவர் மறைந்த ஓரிரு மாதங்களிலேயே அவரின் சொத்துகளை உரிய வாரிசுதாரர்களான எங்களிடம் அரசு ஒப்படைத்திருக்க வேண்டும் ஆனால் முதல்வராக இருந்த எடப்பாடி எப்படிச் செய்யவில்லை என்றார். கடந்த 8ஆம் தேதி முற்பகல் 12.30 மணியளவில் கோவையிலிருந்து முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 14 அதிகாரிகள் குன்னூர் வெலிங்டன் ராணுவ முகாமுக்குச் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி 13 பேரும் இறந்தனர். இந்த சம்பவம் நிகழ்ந்து நாடே அந்த சோகத்தில் மூழ்கியது. இந்த நேரத்தில்தான் அனைவரின் பார்வையும் வேதா இல்லம் நோக்கி திரும்பியது. இது அதிமுக மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இன்னும் என்னென்ன நிகழுமோ என்ற பீதியில் இப்போது அதிமுக தலைமை தவியாய் தவித்துக் கொண்டு இருக்கிறது. இப்படி இன்னும் பல பிரச்னைகள் எடப்பாடியை நோக்கி திரும்பும் என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். இப்படி சட்டப் பூர்வமாக நடவடிக்கைகள் வெளிவரும்போது அதிமுகவின் எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற பயம் தொண்டர்கள் மத்தியில் காணப்படுகிறது. இரட்டை தலைமை , முரண்பாடுகள் தொடரும் பட்சத்தில் தமிழகத்தில் மாபெரும் இயக்கம் கரைந்து விடுமோ என எண்ணத் தோன்றுகிறது. இதற்குக் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
– எஸ்.ரவீந்திரன்
Leave a Reply