Save 20% off! Join our newsletter and get 20% off right away!

சந்திப்பில் கிடைத்த சிகரங்கள் -2

எட்டாத நட்சத்திரங்களைப் பார்த்து நாம் வியப்பதும், நாம் பெருமிதமாக நினைக்கும் பலரை வியந்து கூறுவதும்  சிகரங்கள் அல்ல.

 வாழ்வில் நம்மோடு பயணித்து நம்மை உயர வைத்த நண்பர்களிலும் சிகரங்கள் உண்டு. ஆனால் நாம் அவர்களை மறந்து விடுகிறோம் .
அவர்களும் சிகரங்கள் தான்.

அப்படி நான் சென்னைக்கு வந்து திக்குத் தெரியாத காட்டில் நுழைந்து எப்படி வாழ்வது என்று தவித்துக் கொண்டிருந்த போது எனக்கு கிடைத்த கல்லூரி நண்பன் தான் அல்போன்ஸ் ராஜா .

அவன் நந்தனம் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான் .அப்போது நான் மாநிலக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன் .பிறகு எப்படி நட்பு கிடைத்தது என்று அறிய  உங்களுக்கு தெரிய ஆவலாக இருக்கும்.

எண்பதுகளுக்கு முன்பான காலகட்டத்தில் அடிக்கடி கல்லூரி மாணவர்களுக்கிடையே பிரச்சனைகளும் அதனால் உண்ணாவிரதங்களும்  நடந்து கொண்டிருக்கும் .

அந்த ஒரு சமயத்தில் நடந்த  போராட்டத்தில் நான் அல்போன்சா ராஜாவை சந்தித்தேன்.
அன்று முதல் இன்று வரை எனக்கு அவன் வழிகாட்டியாக இருக்கிறான்.

எனது வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுத்த போது கூட அவன் தான் முன் நின்று உனக்கு இவர்கள் சரியாக இருக்கும் என்று நம்பிக்கையோடு சொன்னவன்.

ஒரு நல்ல நட்பு வாழ்க்கையில் எவ்வளவு தூரம் வரும் என்று சொன்னால் தன்னுடைய இறுதி மூச்சு வரை என்று சொல்வார்கள் அப்படி தான் அல்போன்சா ராஜா.

அவன் எல்லோரிடமும் பழக தெரிந்தவன் நல்லவர்கள் கெட்டவர்கள் என்று பிரித்துப் பார்த்து அவர்களுக்கு தகுந்தது போல்  அவர்களுக்கு வேண்டிய நன்மைகளை மட்டுமே செய்யக்கூடிய அன்னப் பறவை குணம் உள்ளவன்.

செனாய் நகர் அரசு மாணவர் விடுதியில் இருந்து கொண்டு மெரினா கல்லூரியில் கவிதை வாசித்து விட்டு திரும்பி  வரும் போது தன் வீட்டிற்கு அழைத்து சோறு போட்டு மறுநாள் காலையில் கல்லூரிக்கு செல்ல வழி சொன்னவன் அவன் தான்.

அவன் என்னோடு இருக்கும்போது நான் எதைப்பற்றியும் கவலைப்பட மாட்டேன் .

எண்பதுகளின் துவக்கத்தில் பாண்டி பசார் இப்போதிருக்கிற போன்ற நெருக்கடிகள் இருந்ததில்லை .விடிய விடிய பனகல் பார்க் எதிரில் நாங்கள் பேசிக் கொண்டிருப்போம்.

இலக்கியம் சமூகம் அரசியல் என்று பேசிக்கொண்டிருப்போம் .இன்னும்  பத்து ஆண்டுகளில் சோவியத் நாடு போல் இந்தியாவும் தமிழ்நாடும் மாறிவிடும் .
என்று நினைத்துக் கொண்டிருந்த காலம் அது .
பின்னால்தான் தெரிந்தது அது எல்லாம் ஒரு கனவு போல ஆனது.

நன்றாக நினைவிருக்கிறது. பனகல் பார்க் எதிரில் ஒரு நாயர் கடையில் தேனீர் கடை .
அங்கே நாங்கள் கடன் வாங்கித்தான் டீயும் பன்னும்  சாப்பிடுவோம் .
ஒன்றும் சொல்லாமல் கொடுத்துக்கொண்டே இருப்பார்  நாயர்.

விடியவிடிய நிஜமாகவே விடிய விடிய காலை 6 மணி வரை பேசிக் கொண்டிருப்போம்
 அங்கேயே தாளில் சிறுகதையோ கவிதையோ எழுதி மறுநாள் தாமரை அல்லது செம்மலர்
போன்ற பத்திரிகைகளுக்கு அனுப்புவோம்.

காவல்துறையினர் அப்போது ரோந்து சுற்றி வருவார்கள். எங்களை பார்த்து என்ன செய்கிறீர்கள் என கேட்பார்கள்.
கதையை எழுதிக் கொண்டிருப்பதைப் பார்த்து  சிரித்துவிட்டு சரி என்று சில  சமயம் படித்துப் பார்த்துவிட்டு நன்றாக இருக்கிறது என்று சொல்லிவிட்டுச் செல்வார்கள்.

இப்போது நிலைமை முற்றிலும் மாறுபட்டிருக்கிறது .
தலைகீழாக இருக்கிறது நின்று பேசவும் முடியாது .
சென்னை மாறிவிட்டது என்றுதான் கருதுகிறேன்.
இப்போது ஸ்மார்ட் சிட்டி என்று ஒரு பகுதியாக பாண்டிய பசாரை  மாற்றிவிட்டார்கள்.

அதிகாலை பேப்பர் போடுகிற  பையனின் சுறுசுறுப்பான அந்த நிகழ்வில் இருந்து நாங்கள் நடைபயின்று வீட்டிற்கு செல் லும் நேரம் வரை அது புத்தம் புது காலை பொன்னிற வேளை ஆகத்தான் அப்போது தெரிந்தது.

படித்துவிட்டு  ஊருக்குப் போகாமல் நான் அவனுடன் சுற்றிக் கொண்டிருந்தேன் .
ஏனெனில் ஊரில் என்னை கவனிக்க ஆளில்லை என்பதுதான் .
ஆனால் அவன் மட்டும் வேறு சிந்தனையில் இருந்தான். தான்
 அவன் டிஎன்பிஎஸ்சி எக்ஸாம் எல்லாம் எழுதி அவன் ஒரு காலகட்டத்தில் வங்கிப் பணியில் சேர்ந்து கொண்டு இருந்தான்.

வேறு வழியில்லாமல் சும்மா சுத்தி கொண்டு இருக்காதே என்று அவன் என்னை நெருக்கினான்.
 நான் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து முழுநேர ப் பணியாளராக  மாறி வேலை செய்கிறேன் என்று சொன்னதும் பளார் என்று அறைந்து சொன்னான் .

உனக்கு அதெல்லாம் சரிப்பட்டு வராது நீ எழுத்தாளன் அங்கே ஒரு கட்டுக் கோப்பு இருக்கும் .எழுத்தாளர்கள் எந்த சிந்தனை வட்டத்திலும் சிக்கிக்கொண்டு இருக்கமாட்டார்கள் .
ஜெயகாந்தன் அப்படித்தான் கம்யூனிஸ்ட் கட்சியில் இப்பொழுது சிரமப் பட்டுக் கொண்டிருக்கிறார் எனவே நீ உள்ளே வராதே என்று முதலில் என்னை தடுத்து நிறுத்தினான்.

ஆனால் அதே சமயம் சோவியத் கலாசாரக் கழகத்தின் நுழைந்து பல செய்திகளை படிக்க காரணமாயிருந்தான் .
அங்கே சோவியத்  திரைப்படங்களை பார்த்து நிறைய கற்றுக் கொண்டேன் .
பிறகு புஷ்கின் இலக்கியப் பேரவையில்  இணைந்து நானும் பழனிபாரதி அறிவுமதி வைரமுத்து போன்றவர்கள் செயல்பட்டோம்.

சும்மா சுற்றிக்கொண்டு இலக்கியம்  பேசினால் சரிப்பட்டு வருமா?
உனக்கு பிடித்தமான பத்திரிகை இலக்கியம் அந்த தொழிலுக்கு போ என்று சொல்லி  கட்டாயப்படுத்தினான்.
 வேறு வழி தெரியவில்லை.

அப்போது கவி.ஞர் முத்துலிங்கம் அவர்கள் திரைப் பாடலாசிரியர் மிகவும் பிரபலமாக இருந்தார் .அவர் வீட்டிற்கு நாங்கள் அடிக்கடி செல்வோம்.
அவருடைய பரிந்துரையின் பேரிலேயே நான்
தாய் வார இதழில் பத்திரிகை பணியில் சேர வேண்டிய ஒரு அவசியம் ஏற்பட்டது.

கல்லூரிப் படிப்பு முடிந்த பின் கிராமத்துக்குச் சென்று தங்கக் கூடிய சூழ்நிலை எனக்கு இல்லை .என்பதால் அவனுடன் தங்கி இருந்தேன்.

அண்ணன் துரைசாமி அவர் கீபோர்டு வாசித்துக்கொண்டு இசைப் பயிற்சிப் பள்ளி நடத்திக் கொண்டிருந்தார் .
என்னை அவன் வீட்டிலேயே தங்கி விட்டான் .
அந்த வீட்டில் யாரும் ஒன்றும் என்னைச் சொல்லவில்லை .
தம்பியின் நண்பர் என்று  இன்றுவரை அவர்கள் குடும்ப ரீதியாக பழகிக் கொண்டிருக்கிறார்கள்.

இவனின் பின்பலம் ஆச்சரியமானது வியப்பானது
ஏனெனில் மேஸ்ட்ரோ இளையராஜா ஊரில் பிறந்தவ ன்.சொந்தக்காரன்.

இளையராஜா அவன் தாயார் இவர்கள் வீட்டிற்கு வந்து சாப்பிட்டு விட்டு போகும் போதெல்லாம் நானும் அருகிலேயே இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் .
கங்கை அமரன் அடிக்கடி அவர்கள் வீட்டிற்கு வருவார்கள் .
ஆனால் ஒருபோதும் அவர்கள் மற்றவர்களுடைய புகழில் பங்கு போட்டுக்கொண்டுவாழ  விரும்பியதே இல்லை.

அவர்கள் குடும்பத்தில் என்னையும் ஒருவனாகத்தான் கருதி இன்றுவரை பழகிக் கொண்டிருக்கிறார்கள்.
எனது திருமணத்தில் பெண் பார்த்தது முதல் சீர்வரிசை எடுத்துக்கொண்டு செல்கிற பாரம்பரிய மரியாதை நிமித்தமான நிகழ்வுகள் வரை ராஜா அவருடைய ஆதிக்கம் இருந்தது.
,
அவர் பெற்றோர் இருந்த போதும் கூட நான் அவனை கடுமையாக பேசினாலும் கூட யாரும் எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசியதில்லை .
ஏன் இப்படி பேசுகிறாய் என்று சொன்னதில்லை .

அந்த அளவுக்கு உரிமை எனக்கு அவர்கள் குடும்பத்தில் கொடுத்தவன் அல்போன்சாதான் .

அதனால்தான் திருமணம் முடிந்தபின் எனக்கு குழந்தை பிறந்த பிற்பாடு அவன் பெயர் வைக்க வேண்டுமென்று விரும்பினேன்.
பாண்டிச்சேரியில் என் மகன் பிறந்தான். மூன்று நாட்கள் கழித்துத்தான் நான் ஆஸ்பத்திரி போய் பார்த்தேன் .என்ன பெயர் என்று கேட்டதும் என் மனைவி தயங்காமல் சொன்னா ர் .
ராஜா என்று .பிறந்ததுமே பெயர்  வைத்த தாயின் பார்வையில் இன்னும் என்னை நெகிழ வைக்கிறது.

பணிகள் நிமித்தம் வாழ்க்கையில் ஒவ்வொருவரையும் வெவ்வேறு நிலையில் காலம் நிறுத்தி வேடிக்கை பார்க்கிறது.

 ஆனாலும் கூட எல்லா சமயங்களிலும் நட்பை நாங்கள் உயிர்ப்பித்துக்  கொண்டிருக்கிறோம்.

இளம் மாணவப் பருவத்தில் என்னை நெறிப்படுத்தி ஒரு நேர் கோர்ட்டுக்கு அவன் அனுப்பவில்லை என்று சொன்னால் நான் ஒருவேளை இன்று  எப்படி இருப்பேன் என்று நினைத்துப் பார்க்க முடியவில்லை.

என்னுடைய எல்லா செயல்களுக்கு  முன்பும்  நான் சொல்வேன் .
நீ உனக்கு என்ன பிடிக்குமோ அதை செய் என்று ஊக்கப்படுத்துவான்.
ஆனால் என்னை  விமர்சனம் செய்து புறம் கூறும் நபர்கள் நண்பர்களையும்  நட்போடு வைத்துக் கொள்வதுண்டு.
ஆனால் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் அவரவர் குணம் அவரவர்க்கு என்று பயணப்பட்டுக் கொண்டிருந்தான் ராஜா.

இன்று அவன் வங்கி மேனேஜராக இருந்து ஓய்வு பெற்று கோர்ட்டுக்கு அலைந்து கொண்டிருக்கிறான்.
 தவறாகநினைக்காதீர்கள் அவன் இப்பொழுது ஒரு  வக்கீல்.

நட்புக்காக சட்டச் சிக்கல்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கிற ஒரு மாணவன் தான் அவன்.
  ஏன் இது செய்கிறாய் பணம் கிடைக்கிறதா என்று கேட்டால் பணம் கிடைத்தால் என்ன கிடைக்காவிட்டால் என்ன நான் இருக்கும் வரை மக்களுக்கு உதவியாக இருப்பேன்  என்று பயணித்துக் கொண்டிருக்கிறான்.

நான் எத்தனையோ மேடு பள்ளங்களை தாண்டி வந்திருக்கிறேன்.
 எவ்வளவு சிரமங்களை அனுபவித்து இருக்கிறேன் .
ஆனாலும் கூட அல்போன்ஸ் ராஜா என்கிற பெயர் சொல்லுகிற போது எனக்கு மனதில் புது உற்சாகம் கிடைத்துவிடுகிறது .

அவன் என்னோடு இருக்கிறாரன்  என்பதே எனக்கு பலமாக இருக்கிறது.

 சந்தித்துக் கொள்கிற நேரங்கள்  குறைவு .
ஆனால் அவனை சிந்திக்கும் போதெல்லாம் அவன் வந்து மனதில் உற்சாகப்படுத்தி விட்டுச் செல்கிறான்.

இதுபோன்ற சிறந்த குணங்கள் கொண்ட நட்பு கிடைத்து விட்டால் வாழ்க்கை எளிதாக சுவையுடையதாக  மாறிவிடும் .
அப்படி என்னை மாற்றி அமைத்த மிகப்பெரும் குணம் கொண்டவன் தான் அல்போன்ஸ் ராஜா .

அதனால்தான் நான் சந்தித்தவர்களில் சிகரங்களாக அவனை நான் உங்களுக்கு  குறிப்பிடுகிறேன்.
 உங்களில் இப்படி பல பேர் இருப்பார்கள்.
 நீங்கள் அடுத்தவரை வியப்பதை விட அருகாமையில் இருக்கும் நல்ல தோழமைகளை சிகரங்களாக கருதுங்கள்.

– ராசி அழகப்பன்
(தொடரும்)