மதுரை மத்திய சிறையில் 1400-க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை சிறைவாசிகள் இருந்து வருகின்றனர். இந்நிலையில் சிறைவாசிகள் தாங்கள் படிக்க விரும்பும் படிப்புகளை தொடர்வதற்காக சிறை நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகள் செய்து வருகிறது.
குறிப்பாக எட்டாம் வகுப்பு தொடங்கி கல்லூரி படிப்பு வரை கல்வி கற்ப தற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அவ்வப்போது அவர்களுக்கு தேவையான சிறப்பு வகுப்புகள் ஆசிரியர்கள் மூலமாக எடுக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஆண்டுதோறும் ஏராளமான சிறைவாசிகள் பொதுத்தேர்வுகளை எழுதி வருகின்றனர்.
இந்தநிலையில் இந்த ஆண்டிற்கான 12-ம் வகுப்பு பொதுத்தேர்வினை மதுரை மத்திய சிறையில் உள்ள 15 தண்டனை சிறைவாசிகள் எழுதினர். இதில் 15 பேரும் தேர்ச்சி அடைந்து சாதனை படைத்துள்ளனர். இதன் மூலம் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மதுரை மத்திய சிறையில் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இதில் சிறைவாசி ஆரோக்கிய ஜெயபிரபாகரன் என்பவர் 536 மதிப்பெண்கள் எடுத்து முதலிடத்தையும், சிறைவாசியான அலெக்ஸ் பாண்டியன் என்பவர் 532 மதிப்பெண்கள் எடுத்து இரண்டாம் இடத்தையும், அருண்குமார் என்பவர் 506 மதிப்பெண்கள் எடுத்து மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளார்.
இந்த ஆண்டு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு பெண்கள் மத்திய சிறையில் யாரும் எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மதுரை மத்திய சிறையில் தேர்வு எழுதிய 15 பேரும் தேர்ச்சி பெற்ற நிலையில் நூறு சதவீதம் தேர்ச்சி அடைந்ததை முன்னிட்டு தேர்ச்சி பெற்றவர்களுக்கு சிறைத் துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
மாவட்ட வாரியாக 97.45 சதவீத தேர்ச்சி பெற்று திருப்பூர் மாவட்டம் முதல் இடம் பிடித்துள்ளது. 97.42 சதவீத தேர்ச்சி பெற்று சிவகங்கை ஈரோடு மாவட்டங்கள் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளன. இதைத்தொடர்ந்து 97.75 சதவீதத்துடன் அரியலூர், 96.97% பெற்று கோவை, 96.44 சதவீத தேர்ச்சி பெற்ற நெல்லை பெரம்பலூர் மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளன.
-நா.ரவிச்சந்திரன்
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Leave a Reply