கள்ளக்குறிச்சி நகராட்சியில் ஆண்டு குத்தகை ஏலம் எடுப்பதில் திமுக அதிமுகவினரிடையே போட்டி எழுந்து குடுமியைப் பிடித்துக் கொள்ளாத அளவிற்கு சண்டை மூண்டு வருகிறது. கள்ளக்குறிச்சி நகராட்சியில் கட்டண கழிவறைகள், பைக் ஸ்டண்ட், இதர வெளிவட்ட சுங்க கட்டணம் வசூல் போன்றவற்றிற்கான ஆண்டு குத்தகை ஏலம் நடைபெற்று வருகிறது. குத்தகை எடுப்பவர்களுக்காக டெண்டர் விடப்பட்டது. குத்தகை கோருகிறவர்கள் முன்வைப்பு தொகையுடன் மனு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. நடைபெறும் இந்த குத்தகை ஏலத்தில் திமுகவினரே அனைத்து குத்தகை ஏலத்தையும் எடுத்துக் கொள்ளலாம் என திட்டமிட்டு இருந்தனர். ஆனால் அதிமுகவினர் இந்த குத்தகை ஏலத்தில் பங்கெடுத்து இரண்டு நபர்கள் மூலம் டெண்டர் கோரி ஒவ்வொருவரும் தலா 2 லட்சம் ரூபாய் காசோலை முன்வைப்பு தொகையுடன் கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தை அணுகினார்கள். அதிமுகவினர் குத்தகை ஏலத்தில் பங்கேற்க வருகிறார்கள் என்பதனை அறிந்த திமுகவினர் நகராட்சி அலுவலகத்தில் டெண்டர் மனு வாங்கும் அலுவலரை அவரது இருக்கையில் அமர விடாமல் எஸ்கேப் ஆக்கியிருந்தனர். அதனால் இறுதி வரை டெண்டர் கோரி அதிமுகவினரால் மனு அளிக்க முடியவில்லை. இதன் பிறகு திமுகவினரே ஏலத்தில் பங்கேற்க முயன்ற நிலையில், அப்போது அதிமுகவினர் கள்ளக்குறிச்சி நகராட்சி 11 வது வார்டு நகர மன்ற உறுப்பினரும் நகர அதிமுக செயலாளருமான பாபு தலைமையில் அதிரடியாக நகராட்சி அலுவலகத்தில் நுழைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு எழுந்து போலீசார் குவிக்கப்பட்டனர். திமுக மற்றும் அதிமுகவினரிடையே குத்தகை ஏலம் எடுப்பது தொடர்பாக கடும் வாக்குவாதம் எழுந்து ஒருவருக்கொருவர் குடிமியைப் பிடித்துக் கொள்ளாத அளவிற்கு சண்டையை எழுந்து கூச்சல் குழப்பம் ஏற்பட்டு அங்கு பெரும் சச்சரவு உருவானது. இதனால் அங்கு குத்தகை ஏலம் நடத்த முடியாமல் நகராட்சி ஆணையர் மகேஸ்வரி ஏலத்தை ஒத்தி வைத்தார். இரண்டாவது முறையாக திமுகவினர் ஏலம் நடத்த முயன்ற போது அப்போதும் அதிமுகவினர் உள்ளே நுழைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்கள். வாக்குவாதம் முற்றிய நிலையில் மீண்டும் இரண்டாவது முறையாக குத்தகை ஏலம் விடுவது ஒத்திவைக்கப்பட்டது. தற்போது வரை கள்ளக்குறிச்சி நகராட்சியில் கட்டண கழிவறை, பைக் ஸ்டான்ட், வெளிவட்டச் சுங்க வசூல் போன்றவற்றிற்கு குத்தகை ஏலம் நடைபெறாமல் இருக்கிறது. குத்தகை ஏலம் எடுக்க அதிமுகவினரை விடவே மாட்டோம் என கள்ளக்குறிச்சி நகராட்சி நகர மன்ற தலைவர் சுப்புராயிலு தலைமையில் திமுகவினர் கங்கணம் கட்டிக்கொண்டு நகராட்சியில் களமாடி வருகின்றனர். குத்தகை ஏலம் விடும் பணிகளில் ஒன்றையாவது அதிமுக பெற்றுவிட வேண்டும் என அதிமுகவினர் எதிர்பார்த்து நகராட்சி நிர்வாகத்தில் கடும் மோதலை ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் கள்ளக்குறிச்சி நகராட்சி நிர்வாகத்தில் திமுகவினர் மற்றும் அதிமுகவினரிடையே கடும் மோதல் எழுந்து பல கலவர காட்சிகள் அரங்கேற்றம் கண்டுள்ளது. எப்படியேனும் ஆண்டு குத்தகை ஏலம் விட்டு விட வேண்டும் என்கின்ற நிலையில் திமுகவினரும், அதில் தங்களுக்கும் பங்கு வேண்டும் என அதிமுகவினரும் மாறி மாறி போட்டா போட்டியை ஏற்படுத்தி வருவதால் கள்ளக்குறிச்சி நகராட்சி பரபரப்பாக காணப்பட்டு வருகிறது. ஒருவேளை திமுகவினர் தங்களுடைய அதிகாரத்தை பயன்படுத்தி ஆண்டு குத்தகைக்கான ஏலம் முழுவதையும் தாங்களே எடுத்துக் கொண்டால் அதிமுகவினர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் சாலை மறியல் போராட்டம் போன்றவற்றை கையில் எடுத்து கள்ளக்குறிச்சி நகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக களமாட தயாராகி வருகின்றனர். இதனால் கள்ளக்குறிச்சி நகராட்சி நிர்வாகத்தில் பிரச்சனை பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.
– செல்வராஜ்
Leave a Reply