Save 20% off! Join our newsletter and get 20% off right away!

கப்பலூர் சுங்கச்சாவடிக்கு எதிர்ப்புதிருமங்கலத்தில் முழு அடைப்பு போராட்டம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கன்னியாகுமரி 4 வழிச்சாலையில் அமைந்துள்ளது கப்பலூர் சுங்கச்சாவடி. கப்பலூரில் உள்ள சுங்கச்சாவடி விதிகளை மீறி நகரிலிருந்து 2 கி.மீ தொலைவுக்குள் உள்ளது. எனவே, அதனை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகின்றனர். கப்பலூர் சுங்கச்சாவடி வழியாகச் செல்லும் உள்ளூர் வாகனங்களுக்கு சுங்க வரி கட்டணம் வாங்காமல் அனுமதி வழங்கப்பட்டு வந்தது.

இதனிடையே கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு 50 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பு ஜூலை.10 முதல் அமலுக்கு வந்ததால் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக ஜூலை.29 மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் மூர்த்தி
மற்றும் மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த பேச்சு வார்த்தையில் 2020 க்கு முன்பு போலவே சுங்கக் கட்டணம் இல்லாமல் செல்லலாம் என முடிவெடுக்கப்பட்டது. அதன்படி உள்ளூர் வாகனங்கள் ஆதார் அட்டையை காண்பித்து செல்லலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சுங்கச்சாவடியை அகற்றுவது குறித்து பேசவில்லை. இதனையடுத்து மதுரை கப்பலூர் டோல்கேட்டை அகற்ற வலியுறுத்தி திட்டமிட்டபடி பந்த் நடைபெறும் என கப்பலூர் டோல்கேட் எதிர்ப்பு போராட்டக் குழு அறிவித்தது.

இந்நிலையில் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி திருமங்கலம் முழுவதும் வணிகர்கள் முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 2000-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டம் ஏதும் நடைபெற்று விடக்கூடாது என்று கப்பலூர் சுங்கச்சாவடி அருகே 700க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கடும் கட்டுப்பாட்டுகளுடன் வாகனங்கள் கப்பலூர் சுங்கச்சாவடியை கடந்து வருகின்றன. இதனால் கப்பலூர் சுங்கச்சாவடியில் பதற்றமான சூழல் நிலவி வந்தன.

இதற்கிடையே சுங்கச்சாவடியை முற்றுகையிட முயன்ற கப்பலூர் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், நாம் தமிழர் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் அதிகாரம் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முற்றுகை போராட்டத்தின் போது போலீசாருக்கும், அ.தி.மு.க.,வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது

– நா.ரவிச்சந்திரன்